’புத்ரஜீவக் பீஜ்’ஆண் குழந்தை பெற்றெடுக்க உதவும் மருந்தா? பாபா ராம்தேவ் விளக்கம்

’புத்ரஜீவக் பீஜ்’ஆண் குழந்தை பெற்றெடுக்க உதவும் மருந்தா? பாபா ராம்தேவ் விளக்கம்

யோகா குரு பாபா ராம்தேவ், திவ்யா பார்மசி என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் ‘புத்ரஜீவக் பீஜ்’ என்ற ஆயுர்வேத மருந்து தயாரித்து சந்தையிடப்பட்டுள்ளது. இந்த ‘புத்ரஜீவக் பீஜ்’ தயாரிப்பு, ஆண் குழந்தையை பெண்கள் பெற்றெடுக்க உதவுவதாக சர்ச்சை எழுந்தது. இந்தப் பிரச்சினை டெல்லி மேல்–சபையில் நேற்று புயலைக் கிளப்பியது.
ramdev-infertility
கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, பூஜ்ய நேரத்தின்போது, இந்தப் பிரச்சினையை ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் கே.சி.தியாகி எழுப்பினார். அப்போது அவர், ‘புத்ரஜீவக் பீஜ்’ தயாரிப்பு, பாலின விகிதத்தை மாற்றி அமைப்பதாக குற்றம் சாட்டினார். திவ்யா பார்மசியில் இருந்து வாங்கியது என்று கூறி, அந்த மருந்து அடங்கிய டப்பாவையும், அதை வாங்கியதற்காக வழங்கப்பட்ட ரசீதையும் அவர் சபையில் காண்பித்தார்.

அவர் யோகா குரு பாபா ராம்தேவ் பெயரை குறிப்பிடாமல், ‘‘அரியானாவின் விளம்பர தூதர் நடத்தி வருகிற மருந்து நிறுவனத்தின் தயாரிப்புகள், சட்ட விரோதமானவை, அரசியல் சாசனத்துக்கு எதிரானவை’’ என குற்றம் சாட்டினார். மேலும், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல் வாய்ந்த தலைமையில் செயல்படும் மத்திய அரசு இதை அனுமதிக்கிறதா?’’ என்றும் கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சி தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியில், சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நடிகை ஜெயாபச்சன், அந்த மாத்திரை டப்பாவை எடுத்து, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டாவிடம் வழங்கினார். அந்த மருந்து, சந்தையில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இந்த விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய அரசின் சார்பில், சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா பேசினார். அப்போது அவர் கூறிகையில்:– இது மிகவும் கவலை அளிக்கிற பிரச்சினை ஆகும். பாலின விகிதாச்சார பிரச்சினையில் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. சாதகமான பலன்களை அடைவதற்காக பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பிரதமர் தனிப்பட்ட முறையில் தன் கவனத்தை செலுத்தி, கண்காணித்து வருகிறார். இந்தப் பிரச்சினையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

விசாரணை முடியும் வரையில், குறிப்பிட்ட அந்த தயாரிப்புக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அரசும் அதற்கு உறுதி அளித்தது

இந்நிலையில் புத்ரஜீவக் பீஜ்’ மருந்து ஆண் குழந்தையை பெற்றெடுக்க உதவும் மருந்து கிடையாது, குழந்தை பிறப்பை உறுதிசெய்வது ஆகும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் விளக்கம் தெரிவித்து உள்ளார்.

ஆண் குழந்தையை பெற்றெடுக்க உதவுகிற மருந்தை யோகா குரு பாபா ராம் தேவ் நிறுவனம், தயாரித்து விற்பனை செய்வதாக கூறி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேற்று புயலைக் கிளப்பியது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள யோகா குரு பாபா ராம்தேவ் ‘புத்ரஜீவக் பீஜ்’ மருந்து ஆண் குழந்தையை பெற்றெடுக்க உதவும் மருந்து கிடையாது, குழந்தை பிறப்பை உறுதிசெய்வது ஆகும் என்று தெரிவித்து உள்ளார். இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்த ராம்தேவ், பாராளுமன்றம் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனையை எழுப்புவதற்கானது ஆகும்.

என்னை குறிவைத்து, பிரதமர் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் கே.சி.தியாகி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பாபா ராம்தேவ் வலியுறுத்தி உள்ளார்.

Related Posts

error: Content is protected !!