“புது கட்சி திட்டமெல்லாம் கிடையாது – நான் எப்பவும் திமுகதான்!” அழகிரி பேச்சு!

“புது கட்சி திட்டமெல்லாம் கிடையாது – நான் எப்பவும் திமுகதான்!” அழகிரி பேச்சு!

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தி புதுக் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என பலதரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாமல் “இப்போது நம்மிடம் பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் திமுகதான். கலைஞர்தான் ஒரே தலைவர். அவரை கட்சியில் சுற்றியிருக்கும் சிலர் கைப்பற்றியிருக்கிறார்கள்”என்று தெரிவித்தார்.
alagiri cartoon
திமுகவிலிருந்து சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ள முக அழகிரி மதுரை தயா மகாலில் இன்று தனது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டப் போவதாக அறிவித்திருந்தார்.அதன்படி, இன்று காலை ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். காலை முதலே தொண்டர்கள் அதிகம் பேர் திரண்டு வந்தனர். இதனால் தயா மகாலில் அமர்வதற்கு இடம் இல்லாமல் தொண்டர்கள் வெளியில் நின்று ஆரவாரம் செய்தனர். இந்தக் கூட்டத்தில் தனது புதிய கட்சி முடிவை அறிவிப்பார் அல்லது,. திமுகவைக் கைப்பற்றும் தனது நடவடிக்கை குறித்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏற்கெனவே அவரது ஆதரவாளர்கள் கலைஞர் திமுக என்ற பெயரில் சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருந்தனர்.

அப்போது பேசிய அவர்,”மொத்தத்தில் போஸ்டரால்தான் இவ்வளவு பிரச்னையும். முதலில் என் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதை நிறுத்த வேண்டும். அதனால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நடப்பதே இந்தப் போஸ்டர் பிரச்னையால்தான். எனவே இதனை முதலில் நிறுத்தணும்.என் மீதான அன்பின் காரணமாக போஸ்டர் அடித்து ஒட்டுகிறீர்கள். ஆனால், இதனை அங்கே அருகில் இருக்கும் நபர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எனது பிறந்த நாள் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தை போல் நடக்கும் என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அதை ஒரு விமர்சனமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். கட்சிக்குள் நிலவும் பிரச்னையை சரி செய்ய முன்வந்திருக்க வேண்டும். ஆனால், அதை பெரிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறார்கள்..

இதே திமுகவில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்கட்சித் தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இங்கே பலரது வேட்புமனுக்கள் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப் படவில்லை. இதையெல்லாம் ஆதாரத்துடன் தலைவரிடம் சொன்னேன். அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு, வெளிநாடு சென்றேன். ஆனால், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, நான் எவர் தர்ப்பு குறித்தெல்லாம் மனு பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று என் ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு தலைவரிடம் புகார் கொடுத்தேனோ, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.இது குறித்து தலைவரிடம் விளக்கம் கேட்டேன். அப்போது, உன்னையும் நீக்கிவிடுவேன் என்று தலைவர் கூறினார்.என்னுடைய ஆதரவாளர்களை எல்லாம் நீக்கிய பிறகு, என்னையும் நீக்கியது போல் தான் ஆகும் என்று அவரிடம் கூறினேன். இத்தனையும் மிக அமைதியாகத்தான் அவரிடம் கூறினேன். இதெல்லாம் அமைதியாக அவர் முன்னிலையில் நடந்ததுதான். ஆனால் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.

கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்ட பிறகு,கட்சித் தொண்டர்கள், பிரமுகர்களை சந்தித்து வருகிறேன். அப்படித்தான். மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்தித்து 5 ஆண்டு காலப் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்காக அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.அப்போது, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அவரையும் சென்று சந்தித்தேன். அப்போது அவர், திமுகவில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். எனக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், பாஜகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அப்போது நான் அவரிடம், என் அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதையுமே என் தொண்டர்களைக் கலந்து ஆலோசித்துதான் மேற்கொள்வேன். நான் இப்போதும் திமுகவில் தான் இருக்கிறேன். கட்சியில் இருந்து தாற்காலிகமாகத்தான் நீக்கப்பட்டுள்ளேன்,. எனவே இது குறித்து பின்னர் சொல்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

மதிமுக பொதுச் செயலர் வைகோகூட என்னைச் சந்தித்துப் பேசினார். என் சூழ்நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.
காங்கிரஸின் திருநாவுக்கரசர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு ஆதரவு தருமாறு கேட்டார்.
இப்படி பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் திமுகதான். கலைஞர்தான் ஒரே தலைவர். அவரை கட்சியில் சுற்றியிருக்கும் சிலர் கைப்பற்றியிருக்கிறார்கள். செயல்படவிடாமல் செய்திருக்கிறார்கள் என்று பேசினார் மு.க.அழகிரி.

error: Content is protected !!