பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது!

பீகாரில் முதல் கட்ட  வாக்குப்பதிவு நடக்கிறது!

பீகாரில் முதல் கட்டமாக 49 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்ததைத்.தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மாவோயிஸ்டு தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் 13 தொகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படுகிறது. இங்கு மாலை 3 மணிக்கும், இன்னும் சில தொகுதிகளில் மாலை 4 மணிக்கும் ஓட்டுப்பதிவு முடித்துக்கொள்ளப்படுகிறது.
bihar opinion
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்(சரத்யாதவ்), ராஷ்டீரிய ஜனதா தளம்(லாலுபிரசாத்), காங்கிரஸ் ஆகியவை ஒரு அணியாகவும், பா.ஜனதா, லோக் ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்), ராஷ்டீரிய லோக் சமதா, முன்னாள் முதல்–மந்திரி ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

இவை தவிர இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், ஆர்.எஸ்.பி., ஆகியவை 3–வது அணியாக களம் காண்கின்றன. பீகாரில் அதிக வலுவில்லாத பகுஜன் சமாஜ் கட்சியும் தனது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, ஜே.பி. நட்டா, ராம்விலாஸ் பஸ்வான் மற்றும் ஜிதன்ராம் மஞ்சி போன்ற தலைவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஆதரவு திரட்டினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, லாலுபிரசாத், சரத்யாதவ், முதல்–மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் தங்கள் அணிக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடியும், லாலுபிரசாத்தும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசினர்.

இந்த நிலையில், முதல் கட்டமாக முங்கர், சக்காய், பெகுசாரை, அலாவ்லி, சமஸ்திபூர் உள்ளிட்ட 49 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று(திங்கிட்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 49 தொகுதிகளிலும், மொத்தம் 1,35,72,339 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 72,37,253 பேர். பெண்கள் 63,17,602 பேர். மூன்றாவது பாலின வாக்காளர்கள் 405 பேர்.49 தொகுதிகளிலும் மொத்தம் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 54 பேர் பெண்கள்.

பகுஜன் சமாஜ் அதிகபட்சமாக 41 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பா.ஜனதா 27, ஐக்கிய ஜனதாதளம் 24, ராஷ்டீரிய ஜனதாதளம் 17, லோக் ஜனசக்தி 13, காங்கிரஸ் 8, ராஷ்டீரிய லோக் சமதா 6, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 3 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்டு சார்பில் 25 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் 12 பேரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

error: Content is protected !!