பாகிஸ்தான் – மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கும் இன்னொரு சமூகத்துக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தான் – மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கும் இன்னொரு சமூகத்துக்கு எச்சரிக்கை!

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அந்நியக் கடன்களை திருப்புவதற்கு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிதி நிறுவமான IMFபிடம் தங்களை பெயிலில் எடுக்க கோரிக்கை விடுத்திருக்கிறது. எண்பதுகளில் துவங்கி இன்று வரை மொத்தம் 13 தடவை பாகிஸ்தானை பெயிலில் எடுத்துக் கொண்டே இருந்த IMF இந்த முறையும் காப்பாற்றுமா என்று பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் விலைவாசி கொடூரமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மூட்டை கோதுமை 1,700 ரூபாயை தாண்டி இருக்கிறது. ஒரு கிலோ வெங்காயம் 39 ரூபாய் இருந்தது, இன்றைய தேதிக்கு 230 ரூபாயை தாண்டி விட்டது. ஒரு லிட்டர் பால் 150 ரூபாயை தாண்டி இருக்கிறது.

அதே நேரம் பாகிஸ்தான் துறைமுகங்களில் இறக்குமதியான உணவுப் பொருட்கள் கண்டெய்னர்களில் வாடிக் கொண்டிருக்கின்றன. காரணம், அவற்றை பணம் கொடுத்து எடுக்க கைவசம் அந்நிய செலாவணி இல்லை. இப்போதைக்கு பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியிடம் மொத்தமே 3 பில்லியன் டாலர்கள்தான் இருக்கின்றன. பாகிஸ்தானின் மொத்தக் கடன் அவர்களது ஜிடிபியில் 90 சதவிகிதம் அளவுக்கு வீங்கிப் போயிருக்கிறது என்பது மற்றொரு சோகம்.

இந்த முறை பெயிலில் எடுக்க IMF வராவிடில் இலங்கைக்கு நேர்ந்த கதி பாகிஸ்தானுக்கும் நேரலாம். இந்த இடைவெளியில் எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அடிப்படைவாதக் குழுக்கள் பாகிஸ்தானை பிரித்துக் கூறு போடும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பக்தூன்க்வா மாகாணத்தை தனி நாடாக அறிவித்து பாகிஸ்தானிய தாலிபான்கள் அங்கே ஒரு இணை அரசை நிறுவி இருக்கிறார்கள். இந்த மாதிரி மதவாத கும்பல்களுடன் போராட வேண்டுமா அல்லது பொருளாதாரத்தை கவனிக்க வேண்டுமா என்று தெரியாமல் பாக் அரசாங்கம் முழி முழி என்று முழித்துக் கொண்டிருக்கிறது.

மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்ததன் பலனை பாகிஸ்தானிகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மதத்தையும் கஷ்மீரையும் பிடித்துத் தொங்கும் இன்னொரு சமூகத்துக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

Related Posts

error: Content is protected !!