பன்னி குட்டி – விமர்சனம்!

பன்னி குட்டி – விமர்சனம்!

ன்னி குட்டி பற்றிய மூடநம்பிக்கையை கதையின் மையமாக வைத்து ஒரு ஜாலியான படமொன்றை கொடுக்க முயன்றிருக்கிறார்கள்… கருணாகரனிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. அதாவது வாழவெட்டியான சிஸ்டர், குடிகார ஃபாதர் ஆகியோருடன் வாழ்ந்து வரும் சூழலில் சூசைட் செய்ய அடிக்கடி ட்ரை செஞ்சு அதில் ஃபெயிலியர் ஆகிக் கொண்டே இருக்கும் கேரக்டர் கருணாகரன். அவர் சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி பைக் ஒன்றைத் திருடுகிறார். அந்த பைக்கில் போகும் போது பன்றி மீது இடித்து விடுகிறார். அதேப் பன்றி மீது மீண்டும் பைக்கால் இடித்தால் தான் கருணாகரனுக்கு நல்லது நடக்கும் என்கிறார் சாமியார். இதை அடுத்து அந்தப் பன்றி எங்கிருக்கிறது என்று நண்பர்களுடன் தேடுகிறார் கருணாகரன். பன்றி கிடைத்ததா ?, சாமியார் சொன்னது போல பன்றி மீது மீண்டும் இடித்தாரா என்பதுதான் இந்தப் படத்தில் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருணாகரன் தனது வழக்கமான இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார். காட்சிகளுக்கு ஏற்ற வகையில் காமெடியனாகவும், கதையின் நாயகனாகவும் கலக்கியிருப்பவர் காதல் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கிராமத்து இளைஞனுக்கான எல்லா பொருத்தங்களுடன்,கச்சிதமாக பொருந்திப்போகிறார். அவரது அப்பாவியான முகம், அந்த கேரக்டருக்கான சோகத்தை கடத்திவிடுவது பெரும்பலம்.

மற்றொரு நாயகனாக யோகி பாபு நடித்திருந்தாலும் அவர் வரும் காட்சிகள் சற்று குறைவு தான். அந்த குறைவான காட்சிகளிலும் நம்மை நிறைவாக சிரிக்க வைக்கிறார். ராமர், தங்கதுரை, சிங்கம் புலி ஆகியோரது கூட்டணி காமெடி திரையரங்கே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறது. அதிலும் சிங்கம்புலியின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.

கிருஷ்ண குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது. பன்னி குட்டியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து ஓடி ஓடி காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சதிஷ் முருகன், காட்சிகளையும் பன்னி குட்டியையும் ரசிக்கும்படி காட்டியிருக்கிறார்.

ரவி முருகையாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அனுசரன், காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.இயக்குநர் அனுசரண் முருகையன். அவரது முதல் படமான ‘கிருமி’ விறுவிறுப்பான த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம். இப்போது இந்த ‘பன்னிக்குட்டி’ அதற்கு அப்படியே நேர்மாறாக ஒரு ஜாலியான காமெடி டிராமா.ஆனால் இறுதியில் மூடநம்பிக்கையை ஜெயிக்க வைத்திருப்பதுதான் மஹா தப்பாகி போய் விட்டது.

மொத்தத்தில் இந்த பன்னிகுட்டி – ஜஸ்ட் டைம் பாஸ் மூவி

மார்க் 2.75/5

error: Content is protected !!