நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர்

நாளிதழ்களின் விலையும் *** நாட்டு மக்கள் நிலையும் (4)*** By கதிர்

இடைவேளை முடிந்து கூட்டம் மீண்டும் தொடங்கியது.

பத்திரிகை அதிபர்: நாட்டின் நான்கு திசைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரே பத்திரிகை நம்முடையது. ஆனால், எந்த இடத்திலும் நாம் முதல் இடத்தில் இல்லை. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பத்திரிகை குறுநில மன்னரை போல ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

நாம் பலவீனமாக இருப்பதால் நிறைய நிர்ப்பந்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பலசாலியாக இருப்பவன் எதையும் பொருட்படுத்த தேவையில்லை. நாமும் அவ்வாறு மாறுவோம். பலவீனங்களையே பலமாக மாற்றுவோம். மைனஸ் என்பது ஒரு கோடு. இன்னொரு கோடு போட்டால் பிளஸ் ஆகிவிடும்.
daily Newspaper.dog
நியூஸ்பிரின்ட் விலை உயர்வால் அதிக பக்கங்கள் கொடுக்க முடியவில்லை. அதனால் அதிக செய்திகள் பிரசுரிக்க இயலவில்லை. எனவே விற்பனையை அதிகரிக்க வழியில்லை. ஆகையால் விளம்பரங்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. வருமானம் குறைகிறது. அதனால் நிறுவனத்தை நிர்வகிப்பது கஷ்டமாகி விட்டது. இதுதான் நீங்கள் சுட்டிக் காட்டிய பிரச்னைகளின் சாராம்சம்.

இந்த நிலைமையை தலைகீழாக புரட்டிப் போடுவோம். அதிக பக்கங்கள். அதிக செய்திகள். தரமான காகிதம். கலர் பிரிண்ட். ஆனால் மிகவும் குறைந்த விலை. திறமையான ஊழியர்கள். கவர்ச்சியான சம்பளம். வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்களின் குடும்பத்தினருக்கு நலத் திட்டங்கள். இப்படி செய்வதால் விற்பனை பல மடங்கு உயரும். விளம்பரங்கள் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்போது செலவுகளை சமாளிப்பது கடினமாக இருக்காது.

இந்த திட்டம் பற்றி உங்களில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்.

– பத்திரிகை அதிபர் சொல்லி முடிப்பதற்குள் நிர்வாகிகள் அத்தனை பேரும் கைதூக்கினார்கள்.

(தேடுவோம்)

கதிர்

error: Content is protected !!