நாடு முழுவதும் வரும் 9, 10ம் தேதிகளில் லாரிகள் வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் வரும் 9, 10ம் தேதிகளில் லாரிகள் வேலை நிறுத்தம்!

‘ஜிஎஸ்டி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து நாடு முழுவதும் வரும் 9, 10ம் தேதிகளில் லாரிகள் வேலை நிறுத்தம் நடத்தப்படும்’ என அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் சார்பில் பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்கே.மிட்டல் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், பழைய மற்றும் புதிய லாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி என்ற பெயரில் சாலை போக்குவரத்தில் வாங்கப்படும் லஞ்சம் ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அகில இந்திய அளவில் அக்டோபர் 9, 10ம் தேதிகளில் 2 நாட்கள் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் மிட்டல் அளித்த பேட்டி: ஒரே தேசம் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அரசின் மாறுபட்ட பல்வேறு கொள்கைகளால் அதிகப்படியான குழப்பங்களும் புது விதமான சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. இது லாரி போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், ஜிஎஸ்டி பதிவுகள் என்ற பெயரில் லாரி உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, லாரிகளை வாங்கும் போது மற்றும் விற்கும்போது என இரண்டு முறை வரி செலுத்த வேண்டியுள்ளது. அதனால்,  ஜிஎஸ்டி வரி பதிவை கட்டாயம் ஆக்கக்கூடாது. மேலும், இரட்டை வரி விதிப்பையும் நீக்க வேண்டும்.

இதேபோல், டீசல் விலை உயர்வும் லாரி போக்குவரத்தை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே விலை நிலவ டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து தினம்தோறும் ஒரு விலை என்பதை தவிர்த்து நான்கு மாதங்களுக்கு ஒரு விலை என்ற முறையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் சாலை பராமரிப்பு என்ற பெயரில் அதிகப்படியான கட்டணம் வாங்குவதையும் கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்து  அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி பெரிய அளவில் லஞ்சம் கேட்கிறார்கள். இதை தடுக்க புலனாய்வுப் பிரிவுகளை அமைத்து துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனை செய்யக்கூடாது.

போலீஸ் உதவி மற்றும் இணை கமிஷனர் நிலையிலான அதிகாரிகள் மட்டுமே சோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9, 10ம் தேதிகளில் தேசிய அளவில் 2 நாள் வேலைநிறுத்தம் நடத்தப்படும். 9ம் தேதி காலை 8 மணி முதல் 10ம் தேதி இரவு 8 மணி வரை நாடு முழுவதும் லாரிகள் ஓடாது. இந்த வேலை நிறுத்தத்தில் ஏஐடிடபுள்யுஏ, ஏசிஓஜிஓஏ மற்றும் சிம்டா உள்ளிட்ட சங்கங்களும் பங்கேற்கும். இவ்வாறு மிட்டல் கூறினார்.

error: Content is protected !!