தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள்! – விஜய்காந்த் பேச்சு

தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள்! – விஜய்காந்த் பேச்சு

”தே மு.தி.க தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்பேன். ஆனால், தலைவர் என்ற முறையில் இதை மீறியும் முடிவு எடுக்கலாம். போன சட்டமன்ற தேர்தலில் தொண்டர்களை கேட்டுதான் கூட்டணிக்கு முடிவு எடுத்தேன். கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட்டது, அடிபட்டு, மிதிபட்டது போதும்.மக்களுடன்தான் கூட்டணி. தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தலைவர்கள் முடிவு எடுத்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
vijayakanth feb 3
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் தே.மு.தி.க. 9–வது மாநில மாநாடு நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் ஏராளமான லாரி, வேன், கார்கள் மூலம் வந்து குவிந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இரவு 7.15 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்தார். அவருடன் பிரேமலதா விஜயகாந்தும் வந்தார். அவர்களுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு மேடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முரசை விஜயகாந்த் கொட்டினார்.

அதைத் தொடர்ந்து விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும், மாநாட்டு மேடையில் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். மாநாட்டுக்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசும்போது,”போலீஸ் என்றால் மக்களுக்கு நண்பன் என்று நினைத்து போலீஸ் வேடங்களை ஏற்று நடித்தேன். இனி போலீஸ்காரனாக நடிக்க மாட்டேன். எனது மகனையும் நடிக்க விட மாட்டேன். அந்த அளவுக்கு போலீஸ்காரர்கள் வேடம் போடுகிறார்கள். ஆட்சியாளர்களின் கைப்பாவையாக விளங்குகிறார்கள்.
நாட்டை நல்வழிப்படுத்துங்கள் என்றுதான் ஆட்சியாளர்களிடம் நான் கேட்கிறேன். ஆண்ட கட்சிகளும், ஆளுகின்ற கட்சிகளுக்கும் இனி ஒன்றை சொல்கிறேன். தே.மு.தி.க.தான் அடுத்து ஆட்சியில் அமரப் போகிறது.

எனது பேச்சை கேட்க திரண்டு வந்து இருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது எனக்கு உற்சாகம் பிறக்கிறது. இந்த இளைஞர் படை இருக்கும் போது, என்னால் நாட்டை சுத்தப்படுத்த முடியும். பணக்காரர்கள், ஏழைகள் யாராக இருந்தாலும் ஊழல், லஞ்சத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இளைஞர்களை கெடுக்க வேண்டும் என்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்கிறார்கள். விழுப்புரம் விவசாய பூமி. விவசாயிகள் கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பதாகவும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், அதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாஸ்மாக் விற்பனைக்கு மட்டும் ரூ.100 கோடி, ரூ.150 கோடி என்று இலக்கை ஏற்றிக்கொண்டே வருகிறார்கள். இதே போல் விவசாய உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

சட்டசபையில் விதி எண் 110–ன்படி முக்கியமாக அறிக்கையை படிப்பது மரபு. ஆனால், ஜெயலலிதா சட்டசபைக்கு வந்ததும் நிறைய திட்டங்களை அறிவிக்கிறார். இதுவரை அவர் ரூ.8 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவித்துள்ளார். ஆனால், பட்ஜெட் ரூ.1 லட்சம் கோடிக்கு மட்டும்தான் போடுகிறார்கள். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை.தற்போது ரூ.1–க்கு இட்லி விற்கிறார்கள். ஆனால், தண்ணீருக்கு ரூ.10 விலை வைக்கிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய முதல்–அமைச்சர், மக்களுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த் தலை குனிவான். ஆனால், தொண்டர்களை தலை குனிய விடமாட்டான்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆளுங்கட்சி திட்டங்களில் குறைகள் இருந்தால், அதை கூட்டணி கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டத்தான் செய்வார்கள். தவறுகளை கூறினால், எங்களை பார்த்து திராணி இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். இடைத்தேர்தலில் ஜெயித்து பாருங்கள் என்று சவால்விட்டார்கள்.கடந்த ஆட்சியில் 13 இடைத்தேர்தல்கள் வந்தன. அதில் எத்தனை தேர்தலில் அ.தி.மு.க. ஜெயித்தது?

கூடங்குளம் மக்களை இன்று வரை ஏமாற்றுகிறார்கள். நான் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து பேசினேன். அங்குள்ள மக்களின் கோரிக்கை தீர்க்கப்படவில்லை. ரூ.500 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்கள். ஆனால், ஒரு திட்டம் கூட அங்கு நிறைவேற்றப்படவில்லை.இன்றைக்கு சொல்லிக்கொள்கிறேன். சாதி, மதத்தை வைத்தும், இலங்கை தமிழர்களின் கண்ணீரை வைத்தும் தே.மு.தி.க. என்றைக்கும் அரசியல் நடத்தாது.6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை கொடுக்கிறார்கள். மின்வெட்டை நீக்கிவிட்டோம் என்கிறார்கள். இன்று கூட 4 முறை மின்வெட்டு உள்ளது.

ஆட்சி அதிகாரத்தை எங்களுக்கு ஒருமுறை கொடுத்துப்பாருங்கள். ஊழலை ஒழிக்க வந்தவர்கள் என்பதை நீங்களே கூறுவீர்கள். அந்த காலம் விரைவில் வரும். மக்கள் அப்படி கூறுவதை என் காதுகளால் கேட்பேன்.அடிக்கடி அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மாற்றுகிறார்கள். இது அதிகாரத்துக்கு மட்டும் அல்ல; மக்களுக்கும் கேடு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு கெட்டுவிட்டது.குனிய குனிய மக்களை குட்டுகிறார்கள். குனிந்தவன் நிமிர்ந்து விட்டால், நிலைமை தலைகீழாகி விடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எனவே வருகிற தேர்தலில் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

விஜயகாந்த் ஏதோ கூட்டணி பற்றித்தான் பேசப்போகிறார் என்று நினைத்து வந்து இருக்கிறார்கள். இதோ தொண்டர்களின் கருத்தை கேட்கிறேன். கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? (அப்போது தொண்டர்கள் கூட்டணி வேண்டாம் என்று கையசைத்து கூறினர்.)தொண்டர்கள் கூட்டணி வேண்டாம், வேண்டாம் என்கிறார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்பேன். ஆனால், தலைவர் என்ற முறையில் இதை மீறியும் முடிவு எடுக்கலாம். போன சட்டமன்ற தேர்தலில் தொண்டர்களை கேட்டுதான் கூட்டணிக்கு முடிவு எடுத்தேன். கூட்டணி சேர்ந்து அசிங்கப்பட்டது, அடிபட்டு, மிதிபட்டது போதும்.

மக்களுடன்தான் கூட்டணி. தொண்டர்களுக்கு மதிப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தலைவர்கள் முடிவு எடுத்தாலும் அதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கூட்டணி வைத்து கசப்பான அனுபவங்களை சந்தித்து விட்டோம்.தேர்தல் நேரத்தில் பணம், பிரியாணி, மதுவுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். உங்கள் ஓட்டுக்களை விற்று விடாதீர்கள்.”என்று விஜயகாந்த் கூறினார்.

error: Content is protected !!