தேசிய பேரிடர் பொறுப்பு படை தமிழகம் வந்தாச்! -மழை நீடிக்கும்?

தேசிய பேரிடர் பொறுப்பு படை தமிழகம் வந்தாச்! -மழை நீடிக்கும்?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதை அடுத்து தேசிய பேரிடர் பொறுப்பு படையினை சேர்ந்த 400 பேர் அடங்கிய 11 குழுக்களை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது. அவர்கள் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தங்களுடன் 38 ரப்பர் படகுகள் மற்றும் பிற தேவை யான உபகரணங்களை கொண்டு வந்துள்ளனர்.
flood nov 16 a
இது பற்றி தேசிய பேரிடர் பொறுப்பு படையின் பொது இயக்குநர் ஓ.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த குழுக்கள் அரக்கோணம் (தமிழகம்) மற்றும் குண்டூர் (ஆந்திர பிரதேசம்) படை தளங்களில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்தில் உடனடியாக குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த படையினர் மீட்பு பணிகளுடன், பல்வேறு மாவட்டங்களின் உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உதவியாக நிவாரண பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்திடுவர்” என கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. அதனுடன் இதுவரை மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது. நிலைமை மாநிலத்தில் சீரடைந்தவுடன் குழுவினர் தங்கள் இடத்திற்கு திரும்புவர் என அந்த அதிகாரி கூறியுள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து ராயலசீமாவின் கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகாவின் உட்பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்க நிவாரண மற்றும் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதுடன் இன்றும் அது தொடர்கிறது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுசேரி மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 3வது நாளாக கனமழையினால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

அதே சமயம் ஆர்.கே நகரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆய்வு செய்தார்.மழைசேத விவரங்கள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் விக்ரம் கபூரிடடம் கேட்டு அறிந்தார். அப்போது அவர் பேசும் போது, “3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் பெய்து உள்ளது. மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். ஆர்.கே. நகரில் 48 இடங்களில் நிவாரண பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மழை பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. 7 மருத்துவ முகாம்கள் அமைத்து உரிய சிகிச்சை அளிக்கப் படுகிறது. 165 குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 48 மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன”என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!