தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

தினமும் 10,000 பரிசோதனைகள் செய்யும் திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் திறப்பு!

மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், முதல்வர்கள் உத்தவ்தாக்கரே (மராட்டியம்), மம்தா பானர்ஜி (மேற்குவங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்) ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய அவர், உயர் செயல்திறன் கொண்ட கொரோனா ஆய்வகங்கள் மூலம், நாளொன்றுக்கு 10,000 பரிசோதனைகள் செய்ய முடியும் என்று கூறினார்.நாடு முழுவதும் 11,000 ஆய்வகங்கள் தற்போது செயல்பட்டு வருவதாக கூறிய பிரதமர், உயர்தர பரிசோதனை செய்வதன் மூலம், நோய் தொற்று பாதிப்புகளை விரைவாக கண்டறிய முடியும் என குறிப்பிட்டார். மேலும், ஆண்டுக்கு 3 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் திறன் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் பெருமையுடன் கூறினார்.

கொரோனாவுக்கு எதிராக கோடிக்கணக்கான மக்கள் போராடி வரும் நிலையில், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால், நாட்டில் நோய் தொற்று கட்டுப்படுத்த முடிந்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நோய் தொற்றை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருவதாகவும், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 11 லட்சம் படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!