தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னக் கருத்துகள் இதோ!

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னக் கருத்துகள் இதோ!

மிழ்நாடு பட்ஜெட் குறித்து இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வழக்கம் போல் திமுக கூட்டணி கட்சிகள் பட்ஜெட்டை வரவேற்றும் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறி உள்ளனர்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும். இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் வருவாய் நிலை குறித்தும், ஏராளமான வளர்ச்சி பணிகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சொன்னக் கருத்துகள் இதோ:

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி

தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்த்தை தந்துள்ளது என்று விமர்சித்துள்ளார். கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட் டில் அறிவிப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மக்களை ஏமாற்றும் வெத்து வேட்டு அறிக்கையாக பட்ஜெட் உள்ளது. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே நிதி செலவளிக்கப் பட்டது.

திமுக தேர்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. வருவாய் அதிகரித் துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை, அரசு சரியாக செயல்படவில்லை. தமிழ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.

வருவாய் அதிகரித்தும் தமிழ்நாடு பட்ஜெட்டில் எதிர்பார்த்த புதிய திட்டங்கள் இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட யாரும் இந்த பட்ஜெட்டை ஏற்கமாட்டார்கள். ரகுராம் ராஜன் குழு என்ன சொல்கிறது என நிதிநிலை அறிக்கை யில் இல்லை. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் நீட் விலக்கு கையெழுத்துப் போடுவேன் என்ற வாக்குறுதி என்னவானது..? திமுக ஆட்சிக்கு பின் 2021-2022-ல் 1.08 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என கூறினார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இன்றைய பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று கூறியதுடன், தமிழக முதலமைச்சராக தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் வளர்ச்சிப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கிறது. அத்தகைய வளர்ச்சியை அனைத்துத் துறைகளிலும் ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து செல்கிற சீரிய முயற்சியாகக் கருதிப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன் என்று கூறி உள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ்:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மூவலூர் ராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத் தக்கவையாகும். பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக் கூடியவை ஆகும். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார் செய்ய ரூ.25 கோடியில் சிறப்புத் திட்டம், வட சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் விளையாட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உயர்கல்வித் துறை சார்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும்; அதில் உலகப்புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும்; அரசு கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை யில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூவலூர் ராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரத்தில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18,933 கோடியிலிருந்து ரூ.17,901 கோடியாகவும், பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் ரூ.8437 கோடியிலிருந்து ரூ.7500 கோடியாகவும் குறைக்கப்பட்டிருப்பது மக்களை கடுமையாகப் பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு 2021-22ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.10,025 கோடி செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டிற்கு மாநில அரசின் பங்காக ரூ.2,800 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது போதுமானதல்ல. இத்திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட வேலைவாய்ப்பு பெருக்கத்திற்காக எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கை யில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை நடப்பு பத்தாண்டின் நிறைவில் ரூ. 75 லட்சம் கோடியாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான செயல்திட்டம் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் தென்படாததும் கவலை யளிக்கிறது. 2022-23-ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.36,375 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரூ.52781 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.33% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 4.61%ஆக அதிகரித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.49% என கணிக்கப்பட்டிருந்த நிலையில், 3.80%ஆக அதிகரித்திருக்கிறது. இதை பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக கருதமுடியாது.

தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.81,371 கோடி மட்டுமே கடன் வாங்க வேண்டியிருக்கும் என கணிக்கப் பட்டிருந்த நிலையில், இப்போது நிகரக் கடன் மதிப்பு ரூ.90,116 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பதும் கவலையளிக்கிறது. தமிழக பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலுக்கு முன்பு தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலோ அறிவிப்புகள் இல்லாத வெற்று அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அரசின் கடன் சுமை மேலும் உயர்ந்து 6.5 லட்சம் கோடி அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. மேலும், வரும் நிதியாண்டு நெருக்கடி மிகுந்ததாக இருக்கும் என நிதியமைச்சர் அபாய சங்கை ஊதியிருப்பது, அவர் கொடுத்த அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப் போகிறார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கேற்றாற் போல் இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாக சொன்ன ரூ.1000-த்தை நிதிநிலை சரியான பிறகு பார்க்கலாம் என தட்டிக் கழித்திருக்கிறார். நகைக்கடன் தள்ளுபடி போல் இதுவும் மக்களை ஏமாற்றும் தி.மு.க.வின் மற்றொரு மோசடியாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இது தவிர சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100/- மானியம், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5/- குறைப்பது, கல்விக்கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் நேரத்து கவர்ச்சி வாக்குறுதிகளைப் பற்றி பட்ஜெட்டில் எதுவுமே பேசாமல் பூசி மெழுகியிருக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகையை வழங்கினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம் முழுமையடையும்.

சிங்கார சென்னை 2.O திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கியிருப்பதைப் பார்க்கும் போது, தி.மு.க.வினர் முன்பு மிகவும் சிங்காரமாக(?!) செயல்படுத்தியதைப் போல இந்தத் திட்டமும் அமைந்துவிடக் கூடாதே என்ற ஆதங்கம் எழுகிறது. அரசு நிலங்களை நீண்ட காலக் குத்தகைக்கு விடப்போவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பது, கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எழுந்த நில அபகரிப்பு புகார்களை நினைவூட்டுவதோடு, அதைப்போன்றே அரசு நிலங்களும் அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய சமத்துவபுரங்களை சீரமைக்கிறோம் என்கிற பெயரில் ரூ.190 கோடி நிதி ஒதுக்கியிருப்பது வீணானது. அதற்குப் பதிலாக தமிழகத்தில் பல்வேறு நிலைகளில் ஒடுக்கப்பட்டிருக்கிற மக்களின் நலனுக்காக அந்நிதியை செலவழிக்கலாம். மொத்தத்தில் நேரடியாக மக்களுக்கு பயன்தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதி நிலை அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது. ” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

தமாக தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் ஏதுமில்லை; சாதாரண பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை:

தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல், பகல் கனவு பட்ஜெட்டாக உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை” என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

“தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையான இடம் அளித்து, அகர முதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு குறித்த அறிவிப்பு செந்தேனாய் இனிக்கிறது” ‘தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மக்கள் நல அரசு என்பதற்கு சான்று என்றும், ரூ.7,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது என்பது பாராட்டுக்கு உரியது என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:

‘கடுமையான நிதி நெருக்கடியிலும் மக்கள் சார்ந்த, மண் சார்ந்த, மொழி சார்ந்த, விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார்/ சமூகநீதி, சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை என்ற கொள்கை பிடிப்பில், அயோத்தி தாசர், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் கொள்கையை பேச்சுக்களை தொகுத்து அச்சு டிஜிட்டல் வழியில் வெளியிட வேண்டும் என்றும் வேல்முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்:

நிதி நிர்வாகத்தில் மேற்கொண்ட முயற்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றம். மாவட்டம் தோறும் புத்தகக் காட்சி, இலக்கியத் திருவிழா, ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் திறன் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

error: Content is protected !!