தமிழக வரலாற்றில் முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி! = மிஸஸ் விஜயகாந்த் பேச்சு

தமிழக வரலாற்றில் முதல் முறையாகக் கூட்டணி ஆட்சி! = மிஸஸ் விஜயகாந்த் பேச்சு

தே.மு.தி.க. சார்பில் சட்டசபை தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்தது.கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு, “தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வெறும் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் தரமானதாக வழங்கப்பட்டதா? என்றால் கிடையாது. இப்போது யார் வீட்டில் மின்சாதன பொருட்கள் இல்லை. எல்லோரின் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர் இருக்கிறது.கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி முடங்கி போய் இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கு இருக்கிறார்? என்றே தெரியவில்லை. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு தேவையான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டிற்கு தற்போதைய நிலவரப்படி 5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதுதான் அ.தி.மு.க.வின் சாதனை ஆகும்.
dmdk apr 4
110-விதிகளின் கீழ் அறிவித்த திட்டங்களில் ஏதாவது ஒன்றை செயல்படுத்தி இருக்கிறோம் என்று ஜெயலலிதாவால் கூற முடியுமா?. அவர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார். வருகிற சட்டசபை தேர்தல் வித்தியாசமான தேர்தல் ஆகும். முதல் முறையாக கூட்டணி மந்திரி சபை என்று அறிவித்தது, முதல்-அமைச்சர் வேட்பாளரான விஜயகாந்தும், மக்கள் நலக்கூட்டணியும் தான். கூட்டணி மந்திரி சபை இருக்கும்போது லஞ்சம், ஊழல், இருக்காது. ஒருவர் தவறு செய்தாலும் தட்டி கேட்க முடியும்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். நதிகள் அனைத்தும் இணைக்கப்படும், விவசாயம் மற்றும் நெசவுத்தொழில் மேம்படுத்தப்படும். 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவில்லை. இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் தே.மு.தி.க. எனவே, இந்த தேர்தலில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும்.

தே.மு.தி.க.வை நாங்கள் ஒன்றும் பிரிக்கவில்லை என்றும், அதுவாகவே கரைந்து வருகிறது என்றும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தே.மு.தி.க. என்ன சோப்பா? அது தானாக கரைவதற்கு. இரும்பு கோட்டை. யாராலும் அசைக்க முடியாது. தி.மு.க. வீசும் மாய வலைகளுக்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் விழுந்து விடக்கூடாது. எங்களிடம் மலிவான அரசியலை வைக்காதீர்கள். தேர்தலில் நேருக்குநேர் மோதி பார்ப்போம். தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஊழலில் ஊறிப்போன கட்சிகள். நடைபெற உள்ள தேர்தலில் தே.மு.தி.க.-மக்கள் நலக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

இதனிடையே சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டல் முன்பாக அதிமுகவினர் ரகளையில் ஈடுபடுவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!