தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை!

தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை!

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையாவது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் முன் 5 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. தூக்கு தண்டனை ரத்தானதை அடுத்து 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மீனவர் 5 பேரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
fishermen nov 19
ராமேஸ்வரத்தில் இருந்து, 2011 நவ., 28ல், தங்கச்சிமடம் மீனவர்கள், வில்சன், 40, எமர்சன், 38, அகஸ்டஸ், 39, பிரசாத், 35, லாங்லெட், 19 ஆகியோர், விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை சுற்றி வளைத்து, ஐந்து பேரையும் சிறை பிடித்தனர். போதைப்பொருள் (பிரவுன் சுகர்) கடத்தி வந்ததாக வழக்கு பதிந்து, அவர்களை, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கொழும்பு நான்காவது மேல் கோர்ட்க்கு (ஐகோர்ட்) மாற்றப்பட்டது.ராமேஸ்வரம் மீனவர்கள் சார்பில், இலங்கை வக்கீல் அனில் சிங்கே ஆஜரானார். யாழ்ப்பாணம் சிறையில், 1,000 நாட்களுக்கு மேலாக வாடிய ஐந்து மீனவர்களும், பின்னர் கொழும்பு வெளிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. யாரும் எதிர்பாராத நிலையில், ஐந்து மீனவர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து, கொழும்பு ஐகோர்ட் நீதிபதி சுரனே தீர்ப்பளித்தார். இது பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. பல்வேறு அமைப்புகள், இலங்கை கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
மீட்க நடவடிக்கை:

மீனவர்களை சட்டரீதியாக விடுவிக்க இந்திய அரசு முயற்சி எடுத்தது. வழக்கு செலவிற்காக தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. இதையடுத்து, இலங்கை ஐகோர்ட்டில், மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போன் மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வௌியாகின. இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அதிபர் ராஜபக்சே ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக இலங்கை எம்.பி., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
srilank fishermen 2
தமிழக மீனவர்கள் ஐந்து பேரின் தூக்கு தண்டனை ரத்தானதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அவர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!