December 4, 2022

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை தொடரும் – முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில் தற்போது துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகிய நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 27 ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் முடிவில் கிடைத்தத் தகவல்படி, ‘கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மார்ச் 31ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்படுகிறது.

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் விற்பனைக்கு நேரவரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை.

மளிகை, மருந்து கடைகளிலும் சமூக விலகலை தீவிரமாக பின்பற்றவும், மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும்.

அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் ஆகியவை பொதுமக்களிடம் தினசரி / வராந்திர / மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன.

21 நாள் ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் யாரும் தற்போது வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பண வசூலை நிறுத்தி வைக்காமல், அரசு உத்தரவினை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டோர் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை மீறி வெளியே வருவோர் மீது அபராதம் விதிப்பதோடு தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும்.

அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள் சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு, இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுதுரை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.