டைரி – விமர்சனம்!

டைரி – விமர்சனம்!

சில வகை சினிமா ஹாரர் டைப்பில் இருக்கும் .சில த்ரில்லர் வகையை சேர்ந்ததாக இருக்கும் சில ஃபேன்டஸி அல்லது ஆக்ஷன் வகையை சேர்ந்ததாக இருக்கும் ஆனால் ஒரே படத்தில் ஏகப்பட்ட ஜானர்களைக் கலந்து கட்டி கூட்டாஞ்சோறாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன். அதனாலேயே படம் எந்த உணர்வைக் அளிக்கிறது என்று புரிந்து கொள்வதிலேயே ஒரு சுணக்கம் ஏற்பட்டு ஒட்டாமல் போய்  விடுகிறது. ஆனாலும் அருள்நிதி தனது பெயரை “த்ரில்லர் நிதி” என்று மாற்றிக் கொள்ளும் அளவிற்கு தொடர்ந்து இன்வெஸ்டிகேட் படங்களை கொடுத்து வருபவர் டைரியின் மூலம் தன் இருப்பை பலப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கதை என்னவென்றால் சப் இன்ஸ்பெக்டராக டூட்டியில் ஜாயிண்ட் பண்ண காத்திருக்கும் நபர்களுக்கு எல்லாம் இதுவரை கண்டுபிடிக்காத வழக்குகள் ஒவ்வொன்றை ஒதுக்கி புதுசாக ஏதாவது தென்படுகிறதா என்ற அசைன்மெண்ட் கொடுக்கிறது மேலிடம். அந்த வகையில். 16 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கைக் கையிலெடுக்கிறார் வரதன் என்ற நாமகரணத்தில் வரும் அருள்நிதி. அது அவரை உதகை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஓர் இரவு பல்வேறு பின்புலத்திலிருந்து வரும் நபர்களை அழைத்துச் செல்லும் பேருந்தில் வரதனும் உள்ளே நுழைகிறார். பேருந்தில் இருப்பவர்கள் யார்; கொலையாளி யார்; வரதனுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் எனச் சுழற்றிச் சுழற்றி கதையை நகர்த்தி புதிர் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்திருக்கின்றனர்.

நாயகன் அருள்நிதி வரதன் என்ற பெயரில் சப் -இன்ஸ்பெக்டர் ரோலில் வந்து வழக்கம் போல் ஹன் பங்களிப்பை செய்திருக்கிறார். முன்னரே. ACP, கான்ஸ்டபிள் என்றெல்லாம் (மட்டுமே) நடித்த அனுபவத்தை வைத்து மேனேஜ் செய்கிறார். குறிப்பாகச் சொல்வதானால் தன்னை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை பார்த்து பயந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அதே சமயம், குழப்பமான மனநிலையை தனது முகத்தில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் அருள்நிதி, இது மாதிரியான வழக்குகளின் பின்னால் பயணிக்காமல் சகல தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஹீரோவாகவும் நடித்தால் அவர் சினிமாகேரியருக்கு நல்லது.

நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா மாரிமுத்து, போலீஸ் வேடத்தில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவருக்கு போதிய வாய்ப்பை இயக்குநர் கொடுக்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், ஷாரா, தணிகை, சதிஷ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

கேமிராமேன் அரவிந்த் சிங் ஒரு பஸ்ஸூக்குள்ளேயே பெரும்பாலும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இரவு நேர காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பவர், எது கிராபிக்ஸ், எது உண்மையான காட்சிகள் என்று தெரியாதபடி பல காட்சிகளை படமாக்கி சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார். அதிலும் பஸ்ஸில் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது. ஆர்ட் டைரக்டர் கைவண்ணத்தில் பழைய கவர்மெண்ட் மற்றும் 16 வருடங்களுக்கு முன்னால் நீரில் மூழ்கி போன பஸ் ஆகியவை ஆஹா சொல்ல வைக்கிறது .

இசையமைப்பாளர் ரோன் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. மெலோடி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலும் கேட்கும் ரகங்களாக இருக்கிறது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் 1995 ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் 375 என்னும் மர்மமான பேருந்து பற்றிய கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் இந்த டைரியாம். அந்த கதையை லவட்டி நம்மூர் ஸ்டைலில் மாற்றி எழுதி இயக்கியிருக்கும் இன்னாசி பாண்டியன், வித்தியாசமான கதைக்களத்தில் பயணித்தாலும், திரைக்கதையில் பல இடங்களில் தடுமாறியிருப்பதோடு, ரசிகர்களையும் குழப்பி இருக்கிறார். ஆரம்பப் பேராவில் சொன்னது போல் க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானராக தொடங்கும் படம் திடீரென்று திகில் ஜானராக மாறுவது கதையின் போக்கை மாற்றி திரைக்கதையின் வேகத்தையும் குறைக்கிறது.

மொத்தத்தில் டைரி – கொஞ்ச பக்கங்கள்  புரியாத மொழியில் இருக்கிறது

மார்க் 3/5

error: Content is protected !!