டாணாக்காரன் – விமர்சனம்

டாணாக்காரன் – விமர்சனம்

ங்கிலேய ஆட்சிக் காலம் முதல் இன்று வரை, ஆட்சியாளர்களின் அடியாள் படையாக, மக்களை அச்சுறுத்திக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் படையகவே காவல் துறை உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், காலனித்துவ பாரம்பரியத்தை நம்மால் கைவிட முடியவில்லை. பிரிட்டிஷார் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவும் பூர்வீக மக்களை அடக்கவும் காவல்துறையைப் பயன்படுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும், காவல்துறையை தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் நோக்கிலே கொண்டு செல்வதால் விளையும் பாதகங்களை அவ்வப்போது பல்வேறு செய்திகள் மூலம் அறிவோம். மேலும் நம் தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் அடாவடிக் கதைகள் வந்துள்ளன, அவை பெரும்பாலும் ரவுடிகளை கொல்லும் போலீஸ் படங்களாகவும், அண்டர் கவர் ஆபரேஷன் செய்யும் ஹீரோவின் கதைகளாகவுமே இருந்திருக்கின்றன. ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, போலீஸ் ஆவதற்கு முன்பு காவல் துறைக்கான பயிற்சிப் பள்ளியில் நடக்கும் அவலங்களையும் , அநியாய நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ள படமே டாணாக்காரன்.

கதை என்னவென்றால் போலீஸ் ஆக சேர பகீரத பிரயத்தனப்பட்டு காவல்துறை பயிற்சிப் பள்ளிக்குள் இளைஞர்கள் கூட்டம் ஒன்று அடியெடுத்து வைக்கிறது. அவர்களுடன், 1982-ம் ஆண்டு நடந்த ஆட்சிக் கலைப்பினால், இதே காவல்துறைக்கு தேர்வாகியும் ஆணை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்ட வயதான சிலரும் இணைகின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சியில் காட்டப்படும் பாரபட்சம், காவல்துறை பயிற்சிப் பள்ளியில் நடைபெறும் அநீதிகள், அதை எதிர்ப்பவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகள் என போன்றவற்றைத் தட்டிக் கேட்கும் நாயகன் வாழ்க்கைதான் டாணாக்காரன்

ஹீரோ விக்ரம் பிரபு போலீஸ் பயிற்சிபள்ளியில் வாழ்ந்து சாதித்து இருக்கிறார். அசாத்தியமான உழைப்பையும், அட்டகாசமான நடிப்பையும் கோரும் கதாபாத்திரம். அதனை உணர்ந்து நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. கும்கியில் யானையுடன் வந்து கவர்ந்தவர் இதுபோன்ற, அழுத்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வந்தால் விக்ரம் பிரபு கோலிவுட்டில் தவிர்க்க இயலாத நடிகர் பட்டியல் இடம் பிடித்து விடுவார்.

போலீஸ் டிரைனர் ஈஸ்வரமூர்த்தி ஆக வந்து காண்போர் சகலரையும் மிரட்டியு இருக்கிறார் நடிகர் லால். இவரது கம்பீரத் தோற்றமும், கணீர் குரலும், நிமிர்ந்த நடையும், வெறுப்பு உண்டாகும்படியான நடிப்பும் படத்திற்கு 100 சதவீத பலத்தைக் கொடுத்து இருக்கிறது. இவரது கதாபாத்திரமும், விக்ரம் பிரபு கேரக்டரும் அடிக்கடி மோதியபடி யாரும் சளைத்தவனல்ல என்பதை உணர்த்தி, படம் பார்ப்பவர்களைக் கதையோடு பயணிக்க வைத்துள்ளது. படத்தில் நாயகி என்றொருவர் இருக்க வேண்டுமே என்று உருவாக்கப்பட்ட ரோலில் வந்து போகிறார் நடிகை அஞ்சலி நாயர். ஆகச் சிறந்த குணச்சித்திர நடிப்பை இப்படத்திலும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் எம்.எஸ். பாஸ்கர். இதேபோல மற்ற முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ள மதுசூதன ராவ், பாவல் நவகீதன், போஸ் வெங்கட், பிரகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோரும் அவரவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து தனிக் கவனம் பெற்றுள்ளனர்.

மாதேஷ் மாணிக்கம் பெரும்பாலும் கேமிராவை தோளில் சுமந்துக்கொண்டு விரிந்த கிரவுண்டில் வெயில் சூடு தாங்கிக்கொண்டு ஓடி ஓடி காட்சிகளை படமாக்கி இருப்பார் என்பதை படம் பார்க்கும் போதே நினைக்க வைத்து கைத்தட்ட வைக்கிறார். ஜிப்ரான் இசை காட்சிகளை உயிருள்ள பிம்பங்களாக மாற்றியிருக்கிறது.

‘இப்படம் முழுக்க ஒரு கிரெளவுண்டை சுற்றியே நடப்பது போல் இருந்தாலும் மிக முக்கியமானதும் வித்தியாசமானதுமான கதைக்களத்தை தேர்வு செய்து, தொடக்கத்தில் இருந்தே கேஷூவலாக போலீஸ் கதைக்குள் அழைத்துச் சென்று விடுகிறார் டைரக்டர் தமிழ். அதிலும் அண்மையில் ரிலீஸாகி பல தரப்பின் பேசு பொருளான ஜெய் பீம் உள்ளிட்ட பல சினிமாக்களில் காவல் நிலையத்தில் நடக்கும் கொடூரங்களை மட்டுமே பார்த்துப் பழகிய ரசிர்களுக்கு ‘காவல்துறை பயிற்சிப் பள்ளி’யிலே நடக்கும் பிரச்சினைகளையும், நடைமுறைச் சிக்கல்களையும் ஆழமாக காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்து விடுகிறார்.. படத்தின் எக்ஸ்ட்ரா ப்ளஸ் என்றால் லத்தியால் அடித்ததுபோன்று பேசப்படும் வசனங்களும் கதைக்களமும், கதாப்பாத்திர தேர்வும், அவர்களின் புழுதி பறக்க வைக்கும் நடிப்பும்தான். ”டேய் தம்பி இந்த சிஸ்டம் இருக்கே, இது மொரட்டு வெள்ளக்காரனுக்கும் முட்டாத்தனமான அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா . இங்க நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் தான் கஷ்டப்படுவான்” என்கிற எம்.எஸ். பாஸ்கரின் விரக்தியான வசனம், ‘அதிகாரம் இல்லாத உணர்ச்சி உன்னை எரிச்சி கொன்னுடும்’, ’இங்க சிஸ்டம் உனக்கு எதிரானது. அந்த சிஸ்டத்தில் அதிகாரத்தை கைப்பற்ற தேவையான அத்தனை கதவுகளையும் திறந்து வச்சிருக்கேன். அதிகாரத்தை கைப்பற்றி சிஸ்டத்தை சரி பண்ணிக்கோங்க. சிஸ்டத்தை சரிபண்ணவே நாம் அதிகாரத்தை கைப்பற்றவேண்டியிருக்கு’” என்று சுட்டிக்காட்டும் போஸ் வெங்கட்டின் பல்வேறு வசனங்களும், சாதியை வைத்து இழிவுப்படுத்த முயலும் லால் பேசும் வசனங்களும் போலீஸ் வேலைக்கு மட்டுமல்ல அத்தனை அரசுப் பணிகளுக்கும் வந்து உயரதிகாரிகளின் நெருக்கடிகளாலும் சாதிய வன்மங்களாலும் பணியை விட்டு விலகிச்செல்ல நினைக்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவேண்டியவை.

வழக்கம் போல் சில குறைபாடுகள் தென்பட்டாலும் ‘அதிகம் அறியப்படாத கதைக்களத்துக்குள் ரசிகர்களை அழைத்துச் சென்ற வகையிலேயே முக்கியப் படைப்பாகி விட்டது

மொத்தத்தில் இந்த டாணாக்காரன் -னுக்கு சல்யூட்

மார்க் 3.75/5

error: Content is protected !!