ஜெ-வுக்கு மீண்டும் MLA பதவி ? டெல்லி மேல்–சபையில் கேள்வி!

ஜெ-வுக்கு மீண்டும் MLA பதவி ? டெல்லி மேல்–சபையில் கேள்வி!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதையடுத்து அவர் எம்.எல்.ஏ., பதவியையும், முதல்–அமைச்சர் பதவியையும் இழந்தார்.
rajya-sabha
ஆனால் தனிக்கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா அப்பீல் செய்தார். அந்த அப்பீல் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுதலை செய்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

இது, டெல்லி மேல்–சபையில் அரசியல் சட்ட ரீதியிலான ஒரு பிரச்சினைக்கு நேற்று வழிவகுத்தது. இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் ஒரு ஒழுங்கு பிரச்சினையை கொண்டு வந்தார்.

அப்போது அவர், ‘‘ஒரு கிரிமினல் வழக்கில், அவையின் ஒரு உறுப்பினர் 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்று, தாமாகவே தகுதி இழப்பு செய்யப்படுகிறார். ஆனால் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஐகோர்ட்டு ரத்து செய்கிறபோது, அவரது நிலை என்னவாகும்?’’ என கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘‘கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஐகோர்ட்டினால் ரத்து செய்யப்படுகிறபோது, இழந்த உறுப்பினர் பதவியும் தாமாக திரும்ப வந்து விடுமா?’’ என்றும் கேட்டார்.

இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், ‘‘இந்த விஷயத்தில், தாங்கள் ஒரு தெளிவான முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்’’ என்று சபையை நடத்திக்கொண்டிருந்த துணைத்தலைவர் பி.ஜே. குரியனைக் கேட்டுக்கொண்டார்.

அப்போது இதை தாங்களும் வழிமொழிவது போல சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும், மிகுந்த ஆர்வத்துடன் அமைதி காத்தனர்.

ஆனால் துணைத்தலைவர் பி.ஜே. குரியன், ‘‘ எழுப்பப்பட்டுள்ள கேள்வி செல்லுபடியாகும். ஆனால் இதில் அரசியல் சட்ட வல்லுனர் கருத்து தேவைப்படுவதால், நான் எனது முடிவை உடனே வழங்கி விட முடியாது. இது தொடர்பாக சட்ட ஆலோசனையை பெற்று எனது முடிவை அறிவிப்பேன்’’ என கூறினார்.

error: Content is protected !!