ஜி.எஸ்.எல்.வி- டி6 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

ஜி.எஸ்.எல்.வி- டி6 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்புக்கு பயன்படும் வகையிலும் ‘ஜி சாட்-6’ என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோளை ‘ஜி.எஸ்.எல்.வி- டி6’ ராக்கெட் சுமந்தபடி இன்று (வியாழக்கிழமை) மாலை 4.52 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்கிறது. இந்த ராக்கெட் இந்தியாவின் 9-வது ‘ஜி.எஸ்.எல்.வி’. ராக்கெட் ஆகும். இது நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3-வது ‘கிரையோஜெனிக்’ என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதேபோன்று ஜிசாட்-6 செயற்கை கோள், இந்த வரிசையிலான 12-வது செயற்கை கோள் ஆகும்.
isru
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், “சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி’ – டி6 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் என்னும் இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்று காலை 11.52 மணிக்கு தொடங்கியது. இந்த ஏற்பாடுகள் நாளை (இன்று) மாலை 4.52 மணிக்கு முடிவு அடைந்தவுடன், ஜிசாட்-6 செயற்கை கோளுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’ – டி6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

தரையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அடுத்த 17 நிமிடம் 4 விநாடிகளில் ராக்கெட்டில் இருந்து ‘ஜி சாட்-6’ செயற்கைகோள் பிரிந்து செல்கிறது. இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 9 ஆண்டுகள் ஆகும். இது தகவல் தொடர்பில் சிறப்பான பங்கு பணி ஆற்றும்.ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளன”என்று விஞ்ஞானிகள் கூறினர்.

இதற்கிடையே இஸ்ரோ தலைவர் கிரண்குமார், பெங்களூரூவில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “ஜிசாட்-6 செயற்கை கோள் மூலம் செல்போன், கையடக்க தகவல் தொழில்நுட்பம் மூலம் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். தகவல் தொழில் நுட்பம் மேம்படும்” என கூறினார்.

மேலும் அவர்,“செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் சிறப்பாக செயல்படுகிறது. சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் இருந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு தற்போது சிறப்பாக இயங்குகிறது. செவ்வாய் கிரகத்தில் இருந்து பயனுள்ள தகவல்களை மங்கள்யான் அனுப்பி வருகிறது” என கூறினார்

Related Posts

error: Content is protected !!