செல்பி சைக்காலஜி தெரியுமோண்ணோ!

செல்பி சைக்காலஜி தெரியுமோண்ணோ!

ஸ்மார்ட் போன் வாசிகள் மத்தியில் பிரபலமான `செல்பி` என்ற தன்னைத்தானே படம் எடுத்துக்கொள்வது ஃபேஷனாக இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவரையிலும் தங்களின் அன்றாட நிகழ்வுகளை `செல்பி` எடுத்து பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளும், ஷேர்களும் வாங்குவதை ஸ்மார்ட் போன் வாசிகள் பெருமையாகக் கருதுகிறார்கள். தற்போது இது புது வகையான மனநோய் என்றே கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க மனநல மருத்துவர்கள், இதை மூன்று வகையாகவும் பிரித்து உள்ளனர்.
selfi modi
1. தினமும் மூன்று முறை, ‘செல்பி’ படம் எடுப்பது; அதை சமூக வலைதளங்களில் பதிவிடாதது ஆரம்ப மன நிலை.

2. தினமும் மூன்று முறை படம் எடுத்து, அதை சமூக வலை தளங்களில் தவறாமல் பதிவிடுவது இரண்டாம் நிலை.

3. எப்போதும் எதைப் பார்த்தாலும் ‘செல்பி’ படம் எடுத்து உடனுக்குடன் சமூக வலைதளங்களுக்கு அனுப்புவதை அன்றாட செயலாகக் கருதுவது மூன்றாவது நிலை. இதுதான் ‘செல்பி’ மோகம் முற்றி, மன நோயாளியாக மாறும் நிலை என்று எச்சரிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அதனால் செல்பி மோகத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு ஸ்மார்ட் போன் வாசிகளை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்

இதனிடையே நீங்கள் என்ன மாதிரியான செல்ஃபி எடுக்கிறீர்கள் என்பதை வைத்தே, உங்களின் குணத்தைப் பற்றிக் கூற முடியுமாம். ‘அடுத்த முறை உங்கள் நண்பர்களுடன் செல்ஃபி எடுக்கும் போது, அதை எப்படி எடுக்கிறீர்கள் என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதைக் கொண்டு உங்களின் குணத்தைக் கூற முடியும்’ என்கிறது ஓர் ஆய்வு.

சிங்கப்பூரைச் சேர்ந்த நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சீன வலைத்தளமொன்றின் ‘சினா வெய்போ’ என்னும் தளத்தில் இருந்து 132 புகழ்பெற்ற செல்ஃபி எடுப்பவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்வை நடத்தியுள்ளது.107 மாணவர்களைக் கொண்ட தனிக் குழுவொன்றின் பங்கேற்பாளர்களின் மீதான மதிப்பிடலுக்குப் பிறகு, ஆளுமைத்திறன் குறித்த போட்டியும் வைக்கப்பட்டது.

பங்கேற்பாளர்களின் ஆளுமை குறித்த அவர்களின் சுய மதிப்பீட்டைப் பொறுத்தே, அவர்களின் ஒவ்வொரு செல்ஃபி யும் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மேலும், 13 அம்சங்கள் கொண்ட செல்ஃபி எடுக்கும் முறையை வைத்தும் ஒருவரின் குணத்தை மதிப்பீடு செய்யப் பட்டது. அவற்றில் சில:

* உதட்டைப் பிதுக்கியவாறு செல்ஃபி எடுத்தீர்கள் எனில், நீங்கள் உணர்வுகளில் அதிக உறுதி இல்லாதவர்.

* கேமராவை கீழே பிடிக்கிறீர்கள் என்னும்போது, எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை உங்களுக்கு அதிகம்.

* செல்ஃபியில் புன்சிரிப்பு அல்லது முழுவதுமாகச் சிரிக்கிறீர்கள் என்றால், புது அனுபவங்களுக்குத் தயாராக இருக்கிறீர்கள், உங்களுக்கு சிரிக்கப் பிடிக்கும் என்று அர்த்தம்.

* கேமராவை நேரடியாகப் பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் மேலேயே அதிக நம்பிக்கை கொண்டவர் என்று அர்த்தம்.

* நீங்கள் எடுக்கும் செல்ஃபியில், இருக்கும் இடத்தை மறைத்தீர்கள் என்றால், உங்களின் அந்தரங்க விஷயங்களில் அதிக கவனத்தோடு இருக்கிறீர்கள்.

என்ற ரீதியில் அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!