சுழல் – வெப் சீரீஸ் விமர்சனம்!

சுழல் – வெப் சீரீஸ் விமர்சனம்!

ம் நாட்டில் ஓடிடி தளங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களின் வரவுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னதாக வெளி நாடுகளில் தயாராகும் வெப் சீரிஸ்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் ஆதரவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலும் ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் உருவாகி வரவேற்பைப் பெற்றன. தற்போது தமிழ் மொழியிலும் பல வெப் சீரிஸ்கள் உருவாக ஆர்மபித்திருக்கின்றன. அந்த வகையில் அமேசான் ப்ரைம் நேரடியாக தமிழில் ‘சுழல்’ வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. இதற்கு, விக்ரம் வேதா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். இதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒவ்வொன்றும் சுமார் முக்கால் மணி நேரம் என்ற அளவில் எட்டு எபிசோடுகளும் மிக சுவையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்பதென்னவோ நிஜம்..!

ம்லைபிரதேசத்தில் மயானக் கொள்ளைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடும் ஒரு ஏரியாவில் இருக்கும் ஒரு பெரிய தொழிற்சாலை. அங்கே தொழிற்சங்க நிர்வாகி, (ஆர் . பார்த்திபன்) , பெண் இன்ஸ்பெக்டர் ( ஷ்ரியா ரெட்டி) சப் இன்ஸ்பெக்டர் (கதிர்) தொழிற்சங்கத் தலைவரின் – குடும்பத்தைப் பிரிந்து வாழும் பெரிய மகள் ( ஐஸ்வர்யா ராஜேஷ்) என்று முக்கியக் கதாபாத்திரங்கள் .
அதாவது அந்த தொழிற்சாலையின் யூனியன் லீடரான சண்முகம் (பார்த்திபன்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துகிறார். அதை வழக்கம் போல், காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு போராட்டத்தை அலட்சியமாக டீல் செய்கிறார் திரிலோக் வட்டே (ஹரிஷ் உத்தமன்). ஓர் இரவில் தொழிற்சாலை திடீரென தீப்பற்றி எரிய, அதே நாளில் யூனியன் லீடர் சண்முகத்தின் இளைய மகள் காணாமல் போகிறார்.

இப்படி தலைவரைப் பிரிந்து வாழும் மனைவி, அதனால் அப்பாவுடன் இருக்கும் சிறிய மகள் , தலைவரின் தம்பி, அந்தத் தம்பியின் மனைவி இன்ஸ்பெக்டரின் மகன், தொழிற்சாலையில் முக்கியப் பதவியில் இருக்கும் , இன்ஸ்பெக்டரின் கணவர் , இப்படி அடுத்தக்கட்டக் கதாபாத்திரங்கள் … தலைவரின் சிறிய மகளுக்கும் இன்பெக்டரின் மகனுக்கும் காதல், தலைவரின் தம்பி மனைவிக்கும் டுட்டோரியல் நடத்தும் நபருக்குமான கள்ளக்காதல், தலைவரின் மூத்த மகளுக்கும் சப் இன்பெக்டருக்குமான நட்பு , அதே சப் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு நர்சுக்குமான காதல் இப்படி சில கதைப் போக்குகள் .

இவற்றுக்கு இணையாக மயானக் கொள்ளைத் திருவிழா , எல்லா தரப்பு மக்களிடமும் உள்ள கடவுள் நம்பிக்கை , ஐதீகம் என்று சில கதை நகர்வுகள் .. இவற்றையும் இன்னும் பல விசயங்களையும் வைத்து பரபரப்பான விறுவிறுப்பான மாத்தி யோசி பாணியிலான திருப்பங்கள் கொண்ட திரில்லரை புஷ்கர் காயத்ரி எழுதியது பிரமாண்டமாய் திரையில் பார்க்கையில் நிஜமாகவே லயிக்க தோன்றியது.

இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக ஸ்ரேயா ரெட்டி. ஸ்ரேயா ரெட்டி இத்தனை ஆண்டுகள் கண்ணில்படாதவர் அதே ‘திமிரு’டன் மீண்டு வந்து மிரட்டியிருக்கிறார். கோபம், பாசம், ஏக்கம், அழுகை என எல்லா உணர்வுகளையும் கடத்த வேண்டிய கதாபாத்திரம், பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் நன்கு அறிந்திருந்தாலும், நாம் அறியா பக்கங்கள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். இந்த உண்மையை உணர்ந்து குற்றவாளியைத் தேடும் நபராக சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் கதிர். ஒரு கட்டத்தில் எல்லா பொறுப்பும் தனக்கு வந்துவிட, தவறு செய்துவிட்ட குற்றவுணர்வுடன் அடுத்து அடுத்து நகரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

வழக்கமான குதர்க்கத் தனமான வசனங்கள் எதையும் கடித்து துப்பாமல், பொறுப்புள்ள அப்பாவாக மகளை பொறுப்பாக தேடும் சண்முகமாக பார்த்திபன். யூனியர் லீடராக, தீவிர சித்தாந்தவாதியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்முகத்தின் மூத்த மகள் நந்தினியாக ஐஷ்வர்யா ராஜேஷ், இளைய மகள் நிலாவாக கோபிகா ரமேஷ். ஒரு பெண்ணுக்குத் தன் சிறு வயதில் நடக்கும் பிரச்னைகள் அவளை எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் தள்ளும் என்பதை கண்முன் கொண்டுவருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சில காட்சிகள் மட்டும் ஈஸ்வரனாக வரும் பழநி முருகன் எனத் தொடரில் வரும் எல்லா விஷயங்களுக்கும் பொருத்தமான நடிக, நடிகைகள் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி இருப்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

சாம்.சிஎஸ் இன் இசை தொடரில் லயிக்க உதவுகிறது. முகேஸ்வரனின் கேமரா கொடைக்கானலின் அழகு கண்களுக்கு விருந்து.

ஒரு இணையத் தொடரில் எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டுமென்பதை அப்பட்டமாகச் சொல்லி தமிழின் தனித்துவமான சீரிஸ் ரகத்தில் இணைந்து விட்டது இந்த ‘சுழல்’

error: Content is protected !!