சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நம்மால் எதுவும் செய்யமுடியாதா?.

சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நம்மால் எதுவும் செய்யமுடியாதா?.

தற்போது இந்தியா மட்டுமன்றி, உலகையே ஆட்டிப்படைக்கும் தலையாய பிரச்னைகளுள் சுற்றுச்சூழல் மாசு மிக முக்கிய மானது. காற்றுமாசு, ஒலிமாசு என பல்வேறு வகையான மாசுகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்துள்ளது. இந்தியாவில் வனப்பரப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், வனத்தை தவிர நாடு முழுவதும் உள்ள மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது நாம் தினசரி கண்கூடாக காணும் உண்மை.
pollution
குடியிருப்பு பகுதிகளாகட்டும், சாலைகளாட்டும் எங்கு பார்த்தாலும் மேம்பாட்டு பணி, வளர்ச்சிப் பணி என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்கள் அகற்றப்பட்டு விட்டன; அகற்றப்பட்டும் வருகின்றன.ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகள் நடவேண்டும் என வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவ்வப்போது ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றன.

ஆனால் அதில் 10 சதவிகிதம் கூட மரமாவதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் மரமாகி இருந்தால் அமேசான் காடுகளில் உள்ள மரங்களுக்கு இணையான எண்ணிக்கையில் மரங்கள் இந்தியாவில் இருக்கும்.ஒலி மாசு கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அன்றாடம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது. தீபாவளி நேரத்தில் அதிக ஒலியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. குறைவான சப்தமெழுப்பும் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என கூறி வருகின்றது. நாம் அதை பொருள்படுத்துவதில்லை.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. மரங்களை அழிக்காமலிருந்தாலோ அல்லது வெட்டிய மரங்களுக்கு இணையாக மரங்களை வளர்த்திருந்தாலோ இந்தளவுக்கு நாம் சுற்றுச்சூழல் குறித்து அச்சப்பட தேவையில்லை.மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் (சுமார் 125 டெசிபல்) சப்தம் எழுப்பினால் அது செவித்திறனைப் பாதிக்கும். எனவே அத்தகைய பட்டாசை வெடிக்கக் கூடாது என்கின்றனர்.

அதுபோன்ற உத்தரவை பட்டாசு நிறுவனங்களுக்கு அளிக்கலாமே? பட்டாசை வாங்கும் நபர்களுக்கோ, அல்லது பட்டாசு விற்பனையாளர்களுக்கோ பட்டாசுகளை டெசிபல் பார்த்து வாங்கவோ, விற்கவோ முடியுமா? அதேபோல குறிப்பிட்ட டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஒலிப்பான்களை (ஹாரன்கள்) வாகனங்களில் பொருத்தக்கூடாது என்ற உத்தரவும் உள்ளது. அவற்றை தயாரிக்கக்கூடாது என்ற உத்தரவுதானே நியாயம்! நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களால் நாட்டில் சுற்றுச்சூழல் முற்றிலும் கெட்டுவிட்டது, நிலத்தடிநீர் மட்டம் குறைய நெகிழி பொருள்கள்தான் காரணம் என்கின்றனர்.

அரசும் நெகிழி உபயோகிக்கக்கூடாது என்றுதான் உத்தரவிடுகிறதே தவிர, பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நெகிழி பொருள்களை உற்பத்தி செய்யக்கூடாது என உத்தரவிடுவதில்லை.

ஆபத்தான பொருட்களை உற்பத்தியே செய்யக்கூடாது என அரசு உத்தரவிருந்தால் எப்படி அவை புழக்கத்துக்கு வரும்? அப்படியே வந்தாலும் அதனை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் உற்பத்தியை கொஞ்சம் கூட தடைசெய்யாத அரசு, நுகர்வு மட்டும் கூடாது என்கிறது. அதையும் நிரந்தரமாக செய்வதில்லை. இது, “எய்தவனிருக்க அம்பை நோவது’ போல உள்ளது.

இன்று நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு அரசிடம்தான் உள்ளது. முறையான கட்டுப்பாடு, பாதுகாப்பான சட்டம், மீறினால் கடுமையான தண்டனை என்றிருந்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு நிச்சயம். சுற்றுச்சூழல் மாசு பிரச்னை நம்மை எதுவும் செய்யமுடியாது. அனைத்து உத்தரவுகளும், கட்டுப்பாடுகளும் ஏட்டளவில்தான் உள்ளன. இவை அனைத்தும் சாமானியர்களை மட்டுமே பாதிக்கின்றன.

எனவே, எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு என்பது, அது உற்பத்தியாகாமல் தடுக்கப்படுவதில் உள்ளது. அந்தவகையில், நாட்டில் உள்ள மாசு பிரச்னைக்கு அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் வகையில் உள்ள பொருட்களின் உற்பத்தியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அன்னிய நாடுகள் பல தற்போது விழித்துக் கொண்டு விட்டன. இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எதையும் அவை அனுமதிப்பதில்லை.

குறிப்பாக, சுற்றப்புறச் சூழலை பாதிக்கும் அனைத்து அம்சங்களும் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. மீறுவோர் மீது பாகுபாடற்ற முறையில் சட்டம் பாய்கிறது. எனவே, அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு எல்லாமே ஏட்டளவில் மட்டுமே உள்ளதால், நாட்டில் சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.

ஆர்.எஸ். கார்த்திகேயன்

error: Content is protected !!