சிறுவர்களுக்கான தினத்தைத் திருடி வைத்துக்கொண்டோம்!

சிறுவர்களுக்கான தினத்தைத் திருடி வைத்துக்கொண்டோம்!

நான் அறிந்து சரியாக பள்ளிக்கூடம் சென்றிருப்பேனா தெரியாது. நினைவுகளுக்கு எட்டிய தூரம் வரையிலும்
எனக்கு அப்படி ஒரு நினைவில்லை. நாலனா இருந்தாவே பெரிய செலவு செய்யலாம். ஆனாலும் ஐந்து ரூபாய் பச்சை நோட்டு கொடுத்தால்தான் பள்ளிகூடம் போவேன்னு சாமியாடுவேன். வாராது வந்த மாமணியாச்சேன்னு அவங்களும் அந்த ரூபாய கொடுத்து பள்ளிக்கு அனுப்புவர்கள்.
child day
நானும் நல்ல பிள்ளையாகதான் கிளம்புவேன். பிறகு பார்த்தால் சிலேட்டு பை ஏதாவது ஒரு மரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். நானோ ஏதாவது ஒரு மரத்தில் குரங்காடிக்கொண்டிருப்பேன். வானர அவதாரம்தான். ஒரு மரம் பாக்கி இருக்காது. புளியங்கா மாங்க பப்பாளின்னு எல்லாமும் ‘சூரையாடி’ கொண்டாடுவோம். பள்ளிக்கூடம் பின்னாடி இருக்கிற ஏரி, கிணற்றில் எல்லாம் மீன் அவதாரம் எடுத்துக்கிடப்போம். ஓடை மணல் எல்லாம் எங்க உடம்புல உறவாடிக் கிடக்கும். மாலையில பள்ளிக்கூட மணி அடிச்சவுடனேயே மத்தவங்களை விட நல்ல புள்ளயா வீடு வந்து சேர்ந்துடுவேன்.

திடீர்னு ஒரு நாளைக்கு வாசல்ல ‘நல்லொழுக்க வாத்தியார்’ நாலு பசங்களோட வந்து நிப்பார். அன்னைக்குதான் வீட்டுக்கு தெரியும் நான் பள்ளிக்கூடமே போகலன்னு. அக்காங்க ரெண்டு பேரும் அவுங்க பங்குக்கு ‘மந்திரிச்சு’ வெளிய அனுப்புவாங்க. வாசல தாண்டினதும் வாத்தியார் பிரம்படி. அடின்னா இந்தடி அந்தடி இல்ல. தப்பி ஓடாதபடி மத்த நாலஞ்சு பேரும் பிடிச்சுக்குவாங்க.

ரெண்டு கையையும், காலயும் ஆளுக்கு ஒருத்தரா பிடிச்சு தூக்கிட்டு போவாங்க. அரை கிலோ மீட்டர். மல்லாக்க போற என் வயித்து மேல சிலேட்டு பை கிடக்கும். எல்லாரும் சிரிப்பாங்க. ஒரு வழியா பள்ளிக்கூடம் போனா, அங்கயும் மற்ற வாத்தியார்களின் குத்துமதிப்பான தர்ம அடி. அவ்வளவுக்கும் அசராம உட்கார்ந்திருப்பேன். மதியம் வரைக்கும்தான். மத்தியான சாப்பாட்டு நேரம் விட்டா ‘கிரேட் எஸ்கேப்’. அடுத்த ஒரு வாரத்துக்கு பழைய மரங்கள், மாங்கா புளியங்கா ஓடை ஏரி கிணறுன்னு ஓடும். திரும்பவும் நல்லொழுக்க வாத்தியார் பிரம்படி..

போனா போகுதுன்னு பள்ளிக்கூடத்தில் இருக்கிற நாளும் சும்மா ஓடாது. வரலாற்று வாத்தியார் கஜினி முகமது படையெடுத்து வந்ததையெல்லாம் வீராவேசமா பாடம் நடத்தியிருப்பார். அன்னைக்கு மத்தியானம் சாப்பாட்டு நேரத்தில இரண்டு கோஷ்டியா பிரிச்ஞ்சுக்குவோம். இங்கிருந்து ஒரு சீட்டெழுதி ‘ஓலை’ அனுப்புவோம். போர் நடத்த தயார்னு எதிர் தரப்புல இருந்தும் பதில் ஓலை வரும். பால்ராஜ், பெருமாள் இவனுங்கதான் தூதுவர்கள். அதனால ரெண்டு தரப்பும் அவங்களை அடிக்க மாட்டோம். எல்லாம் ரெடி. போருக்கானா நேரம் தூதுவர்கள் ரெண்டு பேரும் துணி கொடிய ஆட்டினவுடனே…ரெண்டு பக்கமிருந்தும் நீட்டு நீட்டான சோளகுச்சிங்க சீறிப்பாயும். அதுதான் எறியீட்டிங்க. பிறகு கை யுத்தம். அங்கங்க சிராய்ப்பு காயம் ரத்தம்னு நடந்தேரும். கடைசியா யாராவது ஒரு தரப்பு வெள்ள துணிய காட்டிட வேண்டியதுதான். அதுக்கு மேல அடி உதை தாங்க முடியாதில்ல. போர் முடிவுக்கு வந்துடும்.

மத்தியான மணி அடிக்கும். இவ்வளவு போர் களேபரத்தை எல்லாம் மறந்து, இல்ல மறைச்சி நல்ல புள்ளைங்களா வகுப்பரையில் உட்காந்திருப்போம். மூனு மணி. கணக்கு வாத்தியார்ங்கிற, பாட்டு வாத்தியார்ங்கிற சூசை வாத்தியார் வருவார். அவர் பெயரை கேட்டாலே நடுங்கும். மனுஷன் பள்ளிக்கூடம் வரும்போதே எவனையாவது துவசம் பன்னனும்’னு வேண்டிகிட்டுதான் வருவாரு. ஒரு டசன் சீவின மூங்கில் கோலுங்களை சைக்கிளில் வச்சி கட்டிகிட்டுதான் வருவார். மாலையில் வீடு திரும்பும்போது ஒன்றிரண்டு கோலுங்க உடையாம மிச்சமிருந்தா அதியசயம்தான்.

அந்த சூசை வாத்தியாருக்கு எப்படியோ எங்க போர் ரகசியம் கசிஞ்சிருச்சி. யாரோ எட்டப்பன் போட்டுக்கொடுத்துட்டான்.
ஒன்னும் தெரியாத மாதிரி வந்து கணக்கு பற்றி கேட்பாரு. நமக்குதான் அப்டீன்னா என்னன்னு தெரியாதே. ம்..இருடி வச்சிக்கிறன்னு கருவிகிட்டு அடுத்த பையன்கிட்ட போவாரு. அவனும் என்னைய மாதிரியே முழிப்பான். அப்படியே ஒரு நாலஞ்சு பேர விசாரிச்சுட்டு மெதுவா கிட்ட வந்து, கைய கால எல்லாம் கவனிப்பாரு. அங்கங்க சிராய்ப்பு ரத்த காயம்! என்னா இதுன்னு வடிவேல் பாணியில கேட்பார். சும்மா தடுக்கி விழுந்துட்டேன் சார் என்பேன். இந்தா காசு தாரன் விழுந்து அடிபட்டுகிட்டு எழுந்து வாடான்னு அழிச்சாட்டியம் பிடிப்பார். பிறகு அவ்வளவுதான். சாமியாட தொடங்குவார்.

போர் வீரர்களை எல்லாம்!! வரிசையா முட்டிப்போட சொல்வார். கால் பாதத்தில்தான் அடி. அல்லது உட்காரும் இடத்தில். அப்போவெல்லாம் எங்களுக்கு ஒரு டசன் இரண்டு டசன் அடிதான். நாலு அடி, ஐந்து அடி என கனவில்கூட நினைக்க முடியாது. சமையத்தில் ரத்தம் பிச்சிகிட்டு வரும். வீட்டுக்கு எல்லாம் இதை போய் சொல்ல முடியாது. பள்ளிகூடத்தில சேர்க்கும்போதே ‘வாத்தியார. பையன் அப்படி இப்படின்னு பன்னா கண்ண விட்டுட்டு மத்த தோல எல்லாம் உரிச்சுடுங்க உரிச்சுன்னு சொல்லிதான சேர்ப்பாங்க. அங்க எவ்வளவு கத்தினாலும் கதறினாலும் எடுபடாது. ‘நான் நாயாட்டம் கத்தி பாடம் நடத்திட்டு பதில கேட்டா வாயத்திறக்க மாட்டீங்க. போர் நடத்துறானுங்களாம் போர். வாங்கடி வாங்க’னு சும்மா பிச்சி உதறுவாரு. எத்தனை பேரதான் அடிக்கிறது. அவரும் மனுஷன்தானே. கை வலிக்காதா? வலிக்கும்தான். அப்பவும் சளைக்க மாட்டார் கணக்கு வாத்தியார்.

நம்பவே மாட்டீர்கள். பக்கத்து வகுப்பறையில் இருக்கும் வாத்தியாருக்கு ஒரு குரல் கொடுப்பார். அவரும் வருவார். என்னால முடியல. நீங்க கொஞ்சம் கவனிச்சுட்டு! போங்கம்பார்.

அவருக்கு ஒரு கடுப்பு என்னன்னா ‘நம்மள கண்டா இவனுங்க பயப்படவே மாட்டேங்கிறானுங்களே. இன்னைக்கு கணக்க தீர்த்துக்க வேண்டியதுதான்’னு. கையில கோல வாங்கிக்கிடுவார். கஜினி முகமது போர் என்ன, மாவீரன் அலெக்ஸாண்டர் போர் இதான்டான்னு சொல்லிகிட்டே ஏதோ கல்லில் துணி துவைப்பது போல துவைச்சு உதறுவாரு பாருங்க. அடேயப்பா. அதுக்கே எங்களுக்கு ஏகப்பட்ட விருத கொடுத்திருக்கலாம். மிஸ் பன்னிட்டாங்க. இத்தனைக்கும் பிறகு அடங்குவேனா என்றால் அதுதான் இல்ல. வாங்கின தர்ம அடிய எல்லாம் பள்ளிக்கூடத்திலேயே படிக்க வச்சுட்டு ஒன்னுமே நடக்கலங்கிற மாதிரி வீட்டுக்கு ஜாலியா வந்து சேர்வோம் பாருங்க…அடடா…

ச்சே..இப்படியெல்லாமா அடிவாங்குறது. உள்ள வச்சி அடிக்கிறாங்களா. அதுவுமில்ல. கிரவுண்ட்லதான் வச்சி துவைக்கிறாங்க. கேல்ஸ் ஸ்கூல் பொண்ணுங்க எல்லாம் பார்த்துகிட்டே போகுதுங்க..ச்சே. என்னடா இது. இனிமே நல்ல புள்ளையா மாறிடனும்னு நினைச்சுகிட்டேதான் படுத்து தூங்குவேன். பொழுது விடிஞ்சதும் எரி குளம் கிணறு, வெள்ளரி காய், கொடுக்காப்பளி காய்ன்னு வரிசையா நினைப்புக்கு வரும். அப்புறமென்ன டீம் சேர்ந்து ஓடிட வேண்டியதுதான். ஒரு வாரம் கழிச்சு வாசல்ல வந்து நிக்கும் ‘அதிரடிப் படை’. இதெல்லாம் சகஜமப்பாங்கிற மாதிரி எடுத்துக்கிட்டு அசராம நிற்பேன்.

இப்படிதான் ஓடியது எங்களின், ‘சிறுவர்களுக்கான’ தினங்கள். அன்றைக்கெல்லாம் சிறுவர்கள் தினம் என்று யாரும் கொண்டாடினதில்லை. பெரிதாக பேசிக்கொண்டதும் இல்லை. ஒரு வேலை அதுவெல்லாம் எங்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும். யாரும் கொண்டாடமலே நாங்களே கொண்டாடின வாழ்க்கை அது.

ஆனால் இன்று.???

சிறுவர்களை சிறுவரகளாக வளர்க்காமல் பட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு ‘சிறுவர்கள் தினம்’ என்று கொண்டாடுவதிலும், கூப்பாடு போட்டுவதிலும் விளம்பரப் படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிகம் போனால் ஒரு சிறு பூங்காவில் எப்போதாவது ஒரு விளையாட்டு. மற்றபடி கைதிகளை போன்று வீட்டிலும், பள்ளியிலும் அடைத்து வைத்துக்கொள்கிறோம். அதற்கு ஆயிரம் காரணங்களை நாமாகவே எழுதிக்கொள்கிறோம்.

மொத்தத்தில் சிறுவர்களுக்கான தினங்களைம் சரி, வாழ்க்கையும் சரி திருடி வைத்துக்கொண்டோம்.

 

error: Content is protected !!