சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அலெக் – இந்த அலெக் வேறு!

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா அலெக் – இந்த அலெக் வேறு!

நேற்று சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சிபிஐ இயக்குனர் பதவியில் மீண்டும் அமர்ந்து விட்ட அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்குவது என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்கட்சி மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தனது கருத்தை எழுத்து பூர்வமாக தெரிவித்தாக கூறப்படுகிறது.

நம் நாட்டின் உயரிய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர். இந்த நிலையில் அலோக் வர்மாவை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியதுடன் அவருடைய அதிகாரங்களையும் பறித்தது. இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த செவ்வாய் கிழமை உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. அலோக் வர்மா நிலை குறித்து தேர்வுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் எனறும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அதை தொடர்ந்து அலோக் வர்மா மீண்டும் தன் பணிக்கு திரும்பினார்.

இந்நிலையில் அலோக் வர்மாவின் பதவி குறித்து தீர்மானிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய புலனாய்வு ஆணையம் (சிவிசி) தாக்கல் செய்த அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரையின் பேரில் மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோரும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக கலந்துகொண்டனர். நேற்று நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக இன்று கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுக்குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அலோக் வர்மாவின் பதவி நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே தன் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தற்போது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவலர்கள் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அலோக் வர்மாவின் பதவிகாலம் வரும் 31ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த தருணத்தில் அவரை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.

புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்படும் வரை கூடுதல் இயக்குனர் நாகேஷ்வர ராவ் பொறுப்பு இயக்குனராக செயல்படுவார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று மீண்டும் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை பதவி நீக்க மத்திய அரசு முடிவெடுத்ததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அலோக் வர்மா தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க மத்திய அரசு வாய்ப்பு கொடுக்காமல் அவரை பதவி நீக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அலோக் வர்மா நடத்திய விசாரணை குறித்து பிரதமர் மோடிக்கு எவ்வளவு பயம் உள்ளது என தெளிவாக தெரிகிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மோஹித் குப்தா நியமனம்

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவுடன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் ஆஸ்தானா மீதான முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரியாக மோஹித் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு பொறுப்பேற்க டிஐஜி எம்.கே. சின்ஹா மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மோஹித் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!