சமீபத்து டி ஷர்ட் குரல்களின் பின்னணி இதுதான்!

சமீபத்து டி ஷர்ட் குரல்களின் பின்னணி இதுதான்!

மொழி என்பது என்னதான் தொடர்புக்கான ஒரு கருவி என்று தட்டையாகச் சொன்னாலும்.. அதன் சிறப்புத்தன்மை, தொன்மை, ஆளுமை, அந்த மொழி உலகிற்கு வழங்கிய இலக்கியங்கள் இவற்றால் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறிவிடுவது தவிர்க்க இயலாத ஒன்றும், நியாயமான ஒன்றும்கூட.

தமிழின் சிறப்புகளை இனிமேல்தான் ஒருவர் பட்டியலிட்டு உலகிற்கு அறிவிக்க அவசியமில்லை. நான் வீட்டில் பேசும் மொழி தெலுங்கென்றாலும் எனக்கு தெலுங்கு எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளியில் என்னை வசீகரித்தது தமிழ்தான். இரண்டாம் வகுப்பு படித்தபோது 50 திருக்குறள்களை ஒப்பித்து பரிசு பெற்றிருக்கிறேன். தமிழ்க் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் தவறாமல் கலந்துகொள்வேன். அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில்11ம் வகுப்புவரை படித்துவிட்டு கல்லூரியில் ஆங்கிலத்தில் படித்தபோது ஆங்கிலம் என்னை மிரட்டி எடுத்தது நிஜம்.

ஹிண்டு செய்தித்தாள், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, ரீடர்ஸ் டைஜஸ்ட் இவற்றைப் பிடிவாதமாக வாங்கி லிஃப்கோ டிக்‌ஷ்னரி வைத்துக்கொண்டு படிப்பேன். புதிய வார்த்தைகளைத் தனியாக ஒரு நோட்டுப் போட்டு எழுதிக் கொள்வேன். சில மாதங்களில் மிரட்சி போய் ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஆர்தர் ஹெய்லி, இர்விங் வாலஸ், ஹெரால்ட் ராபின்ஸ் என்று ஆங்கில நாவல்களை சர்வ சாதாரணமாகப் படிக்கத் துவங்கினேன். ஆங்கிலம் என்பது அறிவல்ல, மற்றும் ஒரு மொழி என்பதை கல்லூரி நாட்களில்தான் உணர்ந்தேன்.

இன்றும் மிகத் திறமைகள் கொண்ட பலரிடம் ஆங்கில அறிவில் பிரச்சினை இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் உலகளவில் மிக அதிகமானோர் பயன்படுத்தும் மொழி என்கிற அளவில் ஆங்கிலம் எல்லோருக்கும் அத்தியாவசியம் என்பேன். சீனாக்காரனும், ஃப்ரெஞ்சுக் காரனும், ஜப்பான்காரனும் ஆங்கிலம் படிப்பதில்லையே என்கிற வாதம் சொத்தையானது. நாம் அந்த நாடுகளில் பிறந்திருந்தால் நாமும் படிக்க அவசியமில்லைதான்.

ஒரு மாநில மொழியான தமிழை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைக் கடந்து எதுவும் செய்ய முடியாது. அண்ணாப் பல்கலைக் கழகத்தில் தமிழில் பொறியியல் படிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதில் படித்தவருக்கு எந்தப் பன்னாட்டு நிறுவனம் வேலை கொடுக்கும்? உலகத்துடன் போட்டி போட நமக்கு ஆங்கிலம் கட்டாயம். ஆனால் இந்தி கட்டாயமில்லை.

இந்தியாவுக்குள் பல மாநிலங்களில் இந்தி இருப்பதும் உண்மை. பல மாநிலங்களில் இந்தி இல்லை என்பதும் உண்மை. அது நம் தேசிய மொழியும் இல்லை. ஆகவே இந்தி கற்றால் தமிழர்களுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. என்னைப் போல சினிமா, எழுத்து என்று மீடியாவில் இருப்பவர்கள் கற்றால் இந்தி எழுத்துலகிலும், இந்தி சினிமா உலகிலும் உபயோகமாக இருக்கலாம். மற்றபடி வேலை மற்றும் உத்தியோகம் நிமித்தம் இந்தி ஒருவருக்கு அவசியப்பட்டால் ஸ்போக்கன் இந்தியை மிகச் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். இந்தி சினிமாவை ரசிப்பது நோக்கமென்றால் இருக்கவே இருக்கிறது சப் டைட்டில்ஸ். இன்று இதனால் உலகின் அத்தனை மொழிப் படங்களையும் பார்க்க முடியுமே.

ஆன் லைனில் ஸ்போக்கன் இந்தி கற்றுத்தரும் மூவரை இந்தப் பதிவுக்காகவேத் தொடர்பு கொண்டு வகுப்பில் சேரப்போகும் மாணவன்போல விசாரித்தேன். மூவரும் சொன்னது. ஸ்போக்கன் இந்தி கற்க .35 முதல் 40 மணி நேரம் போதும் என்பதே! ஆகையால் பள்ளியின் ஆரம்ப வகுப்பிலிருந்தே இந்தியைக் கற்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. புதிய கல்விக் கொள்கையின் வரைவில் முதலில் இந்தி என்று குறிப்பிட்டு.. பிறகு அது நீக்கப்பட்டு ஏதாவது ஒரு மூன்றாவது மொழி கட்டாயம் என்று சேர்க்கப்பட்டாலும் அந்த மூன்றாவது மொழியாக வேறு வழியில்லாமல் இந்தியைத் தேர்வு செய்யும் சூழ்நிலைக்குத்தான் தள்ளப் படுவார்கள். (எந்த மூன்றாவது மொழி வாய்ப்புள்ளதோ அந்த மொழி என்கிற குறிப்பை மறக்கக் கூடாது!)

ஒரு வகுப்பில் பத்து மாணவன் மராட்டி, பத்து மாணவன் பஞ்சாபி, பத்து மாணவன் குஜராத்தி கற்க விரும்பினால் எல்லா மொழிக்கும் ஆசிரியர்களை நியமித்து வைத்திருப்பது வாய்ப்பே இல்லாத விஷயம். பாரதியாரைப் போல தேடல் உள்ளவர்கள் பல மொழிகள் கற்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. பாரதியாரும் பள்ளியில் பல மொழிகளைக் கற்கவும் இல்லை.

இந்தியை விரும்பாத, இந்தி அவசியப்படாத மாநிலங்களிலும் மும்மொழிக் கல்விக் கொள்கை மூலமாக மறைமுகமாக இந்தித் திணிப்பு என்பது அரசின் மீது வெறுப்பையும்..எந்தப் பாவமும் செய்யாத அந்த மொழியின் மீதே கோபத்தையும் ஏற்படுத்தவேச் செய்யும். அதன் ஒரு வெளிப்பாடுதான் சமீபத்து டி ஷர்ட் குரல்கள்! இதன் பின்னணியில் இருப்பது ஒரு மாநிலக் கட்சியின் ஐ.டி பிரிவுதான் என்றாலும்.. இதற்கு ஆதரவு தெர்விப்பவர்கள் எல்லோருமே கட்சிக்காரர்கள் இல்லை.  சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்கள் இப்போதும் மூன்றாவது மொழி ஒன்று படித்துக் கொண்டிருக்கிரார்களே..

இந்தியை எதிர்க்கும் கட்சிப் பிரமுகர்கள் நடத்தும் பள்ளிகளிலேயே இந்தி கற்பிக்கப் படுகிறதே போன்ற கேள்விகள் அரசியல்ரீதியானது. மாநிலப் பாடத் திட்டமா, சிபிஎஸ்.சி பாடத் திட்டமா என்று தேர்வு செய்கிற உரிமை பொது மக்களுக்கு இருப்பது போல.. மூன்றாவது மொழி படிக்க வேண்டுமா , வேண்டாமா என்று முடிவெடுக்கிற உரிமையும் மக்களுக்கு இருக்க வேண்டும். கட்டாயம் என்று வரும்போதுதான் எதிர்ப்பு தவிர்க்க இயலாததாகிறது.

ஆங்கிலம் அந்நிய மொழி. அதில் தவறு செய்தால் கொஞ்சம் சகித்துக் கொள்லலாம். தமிழ், தமிழ் என்று முழங்கும் எத்தனைப் பேர் தமிழை ஒழுங்காகப் பேசுகிறார்கள்? எழுதுகிறார்கள்? பத்திரிகை விளம்பரங்களில் நடக்கும் தமிழ்க் கொலைகளுக்கு அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்தால் மதுக் கடைகளை மூடிவிடலாம். அத்தனை வருமானம் கிடைக்கும். இரு மொழிக் கொள்கையில் உறுதியாக நிற்கும் அரசுகள் அந்த இரண்டு மொழிகளையும் உருப்படியாகக் கற்றுத் தருவதில் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுவதும் முக்கியம்.

டி ஷர்ட் எதிர்ப்பு வாக்கியத்தில் ‘ இந்தி தெரியாது ..போடா!’ என்றதற்குப் பதிலாக ‘இந்தி தெரியாது. அதனால் என்ன?’ என்று இருந்திருந்தால் நாகரிகமாக இருந்திருக்கும். கூகுளில் தேடியபோது ஒரு நிறுவனம் இணைப்புப் படத்தில் உள்ள இந்த மூன்று டி ஷர்ட்டுகளையும் 799 ரூபாய்க்குத் தருவதாகச் சொல்கிறது.

பட்டுக்கோட்டை பிரபாகர்

Related Posts

error: Content is protected !!