கேரளாவிலும் வைகுண்டராஜன் கனிம மணல் கடத்தல்: சி.பி.சி.ஐ.டி அறிக்கை

கேரளாவிலும் வைகுண்டராஜன்  கனிம மணல் கடத்தல்: சி.பி.சி.ஐ.டி அறிக்கை

வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 15,80,000 மெட்ரிக் டன் கனிம மணல் கடத்தியுள்ளதாக கேரள சி.பி.சி.ஐ.டி குற்றம்சாட்டியுள்ளது.அதே சமயம் இதனிடையே கனிம மணல் முறைகேடு தொடர்பான கேரளா சி.பி.சி.ஐ.டி.யின் குற்றச்சாட்டை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
vaikundarajan.nov 22
கேரளாவின் தொட்டப்பள்ளி கடற்கரைக்கும், வலியயீக்கல் கடற்கரைக்கும் இடையே உள்ள 18 கிலோ மீட்டர் பரப்பு கனிம வளம் நிறைந்த பகுதியாகும். இத்தகைய கனிம மணல் முறைகேடாக அள்ளிச் செல்லப்படுவது குறித்து எழுந்த தொடர் புகார்களையடுத்து, இதுகுறித்து கேரள சிபிசிஐடி சிறப்புக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது.இந்த சிறப்புக்குழுவின் விசாரணை அறிக்கையில், சட்டவிரோதமாக கனிம மணல் அள்ளப்படும் சம்பவங்களின் பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

1999-2006 ஆம் ஆண்டில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 15,80,000 மெட்ரிக் டன் கனிம மணல் கடத்தப்பட்டதாகவும், இந்த கனிம மணல் கடத்தலில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ஈடுபட்டதாகவும் கேரளா சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கனிமமணல் கடத்தல் பல மட்டங்களில் நடக்கிறது. கடற்கரையோரம் இருப்பவர்கள் சாக்கு மூட்டையில் கனிம மணலை அள்ளி வீடுகளில் பதுக்கிவைக்கின்றனர் என்றும், அவர்களிடம் இருந்து இரண்டாம் நிலை கடத்தல் தரகர்கள் சிறிய வகை வாகனங்களின் மூலம் மறைவிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் மூலம், சட்ட விரோதமாக கடத்தப்படும் கனிம மணல் தமிழகத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் போதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படாததால் பத்தனம்திட்டா நெடுஞ்சாலை வழியாகவும் மீன் பிடி படகுகளின் மூலமாக கனிம மணல் கடத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரிமணல் என்று அழைக்கப்படும் கடற்கரையோர கனிம மணல் விதிகளுக்குப் புறம்பாக கடத்தப்படுவதைத் தடுக்க கேரளா அரசு உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்கக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கனிம மணல் முறைகேடு தொடர்பான கேரளா சி.பி.சி.ஐ.டி.யின் குற்றச்சாட்டை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. விசாரணை அதிகாரி ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும், எங்களது விளக்கத்தை கேட்காமல் சி.பி.சி.ஐ.டி விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கேரள நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதாக வி.வி.மினரல்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!