‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.
jan 7 - edit campus calling.
‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

நன்றி:http://bharathithambi.com/?p=49

error: Content is protected !!