குழலி விமர்சனம்!

குழலி விமர்சனம்!

போன வாரம் தென்காசி டிஸ்ட்ரிக்கில் இருக்கும் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் வில்லேஜில் ஷெட்யூல் காஸ்ட் குழந்தைகளிடம், ஊர்க்கட்டுப்பாடு இருப்பதாக கூறி கடையில் தின்பண்டம் தர மறுத்த கடைக்காரர் வீடியோ வெளியாகி ஹாட் டாபிக்கானது நினைவிருக்கும். அந்த சூடு தணிவதற்குள் ஜாதி பாகுபாடு குறித்தும் அப்படி ஒரு சர்ச்சையே வேண்டாம் என்பதை சொல்ல வந்திருக்கும் சினிமாவே ‘குழலி’. இத்தனைக்கும் நம் கோலிவுட்டில் ஜாதியை தூக்கிப் பிடித்தப்படி ஏகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. ஜாதியே வேண்டாம் என்று அறிவுரை சொல்லும் படங்களும் ஏராளமாய் வந்துள்ளன. இதில் இரண்டாம் வகை பட்டியலில் அடிசினலாய் இணைந்த படமிது.

அதாவது கிராமம் ஒன்றில் பள்ளியில் படிக்கும் தாழ்ந்த சாதி மாணவன் காக்கா முட்டை விக்னேஷ்.. தந்தை இல்லாமல் தாயின் வளர்ப்பில் வளரும் மேல் சாதியை சேர்ந்த ஆரா. இவர்கள் இருவருக்கும் ஆரம்பிக்கும் சிறு வயது நட்பு  வழக்கம் போல் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களது காதல் வீட்டிற்கும் ஊராருக்கும் தெரிய வர மகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையை நிச்சயம் செய்கிறார் அம்மா. ஆனால் படித்து டாக்டர் ஆக வேண்டும் என நினைக்கும் ஆரா தனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஊரைவிட்டு வெளியேற நினைத்து கிளம்புகிறார். அந்த இளம்பெண்னுடன் தானும் உதவிக்கு வருவதாக ஆராவுக்கு கைகொடுக்கும் நோக்கில் கிளம்புகிறார் விக்னேஷ். அப்படி இருவரும் ஊரை விட்டு செல்வதை அறிந்ததும் குழலியின் உறவினர்கள் அவர் களை தேடிப்பிடிக்கின்றனர். குழலியை சாதி வெறியர்கள் தாக்க அதில் அதில் இறந்து போய் விடுகிறாள். சுப்பு என்ன ஆகிறான் என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.இதில் காதலை பிரதானப்படுத்தாமல் இரு இளசுகள் கல்வி கற்க சாதி வெறியர்களை எதிர்த்து போராடுவதுதான் பிரதான கரு என்பதுதான் ஹைலைட்.

காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக புரமோஷன் பெற்றுள்ளார். பள்ளி மாணவனாக அவர் பொருத்தமான தேர்வு. அந்த வயதிற்கே உண்டாகும் குறுகுறுப்பும் இனக்கவர்ச்சியும் என தனது கதாபாத்திரம் மூலமாக மிகச் சரியாக அந்த தடுமாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார் விக்னேஷ். நாயகி பள்ளி மாணவியாக வரும் ஆராவின் நடிப்பில் ரொம்பவே முதிர்ச்சி தென்படுகிறது. நடனம், நடிப்பு இரண்டிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது தெரிகிறது. அதிலும் பக்கத்து வீட்டு பெண் போல் இயல்பாகவும் நடித்து நம்மை ஈர்த்து விடுகிறார்.

மஹா, ஷாலினி, செந்தி குமார் அலெக்ஸ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, சாதி பிடியில் சிக்கி தவிக்கும் மனிதர்களாகவும், சாதி வெறி பிடித்த மனிதர்களாகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.

சமீரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. பாடல் காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருப்பவர், சாதாரண லொக்கேஷன்களை கூட அழகாக காட்ட அதிகமாக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.

எடுத்துக் கொண்ட கதைக்காக பள்ளி பருவ காதலை மின்னிலைப்படுத்தியதை தவிர்த்திருக்கலாம். அதிலும், காதல் விவகாரம் தெரிந்த பிறகு படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து காதலிப்பது, அதை தொடர்ந்து காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடுவது போன்ற காட்சிகள் அதர பழசாக இருப்பதோடு, படம் சொல்ல வந்த கருத்தையே சிதைக்கும் வகையிலும் இருக்கிறது. இதெல்லாம் எண்பதுகளில் இருந்து நாம் பார்த்த சாதிய படங்களின் அடிப்படை காட்சிகள் இதிலும் மாறாமல் அப்படியே இருப்பதை இன்னும் கொஞ்சம் மாற்றி வேறுவிதமாக யோசித்திருக்கலாம்.

மொத்தத்தில் குழலில் – ஜாதிகள் வேண்டாமடி லிஸ்டில் எக்ட்ஸ்ரா ஒரு சினிமா.

மார்க் 3/5

error: Content is protected !!