குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்துபவர் மீது கடத்தல் வழக்கு!

குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்துபவர் மீது கடத்தல் வழக்கு!

தமிழகத்தில், 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது. இதை கட்டுப்படுத்த, குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால், கடத்தல் வழக்கு பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி குழந்தைகள் கடத்தல் வழக்கு (இந்திய தண்டனை சட்டம் – 370, 365, 367), பதிவு செய்வதால், கைது செய்யப்படுவோர், எளிதில் ஜாமினில் வர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தை தொழிலாளர் வேலை செய்தால், 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசிக்கு மக்கள் தெரிவிக்கலாம்.
child labour
பொதுவாக 14 வயது வரையிலான குழந்தைகளை, வேலைக்கு வைக்க தடை உள்ளது. தடையை மீறியும், குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், 2001ல், 4.19 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருந்தனர். அரசின் பல்வேறு முயற்சிகளால் 2012 கணக்கெடுப்பின்படி, 29,656 பேராக குறைந்து விட்டது என, தமிழக அரசு கூறி வருகிறது.

ஆனால், 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்படி, தமிழகத்தில் 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்; அதிக குழந்தை தொழிலாளர் உள்ள 10 மாநிலங்கள் பட்டியலில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில், முழுநேரமாக, 1.51 லட்சம் பேரும்; பகுதிநேரமாக, 1.33 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். சென்னையில் 26 ஆயிரம் பேர் உள்ளனர்.

குழந்தை தொழிலாளருக்கு எதிரான, பிரசார இயக்க தேசிய தலைவர் ஜோசப் விக்டர் ராஜ் கூறுகையில், &’&’குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பெரம்பலூரில், 2,600 பேர் வேலையில் உள்ளனர். மாநில அரசு உண்மையை மறைக்காமல், கட்டுப்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் ”மத்திய அரசின் கணக்கின்படி, 2.84 லட்சம் தொழிலாளர்கள் உள்ளது, அதிர்ச்சி தருகிறது. எனவே 14 வயதுக்கு கீழ் உள்ளோரை, வேலைக்கு வைத்தால், குழந்தை கடத்தல் வழக்கு பதிவுசெய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், சேலம் மாவட்ட பருத்தி தோட்டங்களில் வேலைசெய்த, 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை வேலைக்கு வைத்த விவசாயிகள், கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாவட்டந்தோறும், இப்பிரச்னையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது.”என்று அவர் கூறினார்.

error: Content is protected !!