குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கலையா? அலவன்ஸ் கொடு! மாநில அரசுக்கு மத்திய அரசு ஆர்டர்

குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கலையா? அலவன்ஸ் கொடு! மாநில அரசுக்கு மத்திய அரசு ஆர்டர்

நம் இந்தியத் திருநாட்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம், 6 முதல் 14 வயது வரையிலான எல்லோருக்கும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதைக் கவனத்தில்கொண்டு பல்வேறு திட்டங்கள் உருவாக்கப் பட்டன. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்ற அடிப்படையில் சர்வ சிக்ஷ அபியான் என்ற திட்டம் 2001-ஆம் ஆண்டுமுதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், குழந்தைகளைக் கொண்டுவந்து சேர்ப்பதற்காக விழிப்பு ணர்வு பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன. மேலும் வறுமையின் காரணமாக பல குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் நின்று விடுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காக நம் கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தில் அறிமுகப் படுத்திய மதிய உணவுத் திட்டத்தை 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் மத்திய அரசின் மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறைப் படுத்தப் படுகிறது. பள்ளிகள், பால்வாடிகள் ஆகிய இடங்களில் மதிய உணவு வழங்கப்படுவதால், மாணவ- மாணவிகள் படிப்பைத் தொடர வசதியாக இருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோடை விடுமுறையிலும்கூட மதிய உணவு வழங்கப்படுகிறது.இதனிடையே பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாத நாட்களில், குழந்தைகளுக்கு அதற்கான அலவன்சு வழங்க உத்தரவிட்டு, மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.
noonmeal scheme oct 2
நாடு முழுவதும் அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடத்தப்படுகிற பள்ளிகள், சர்வ சிக்ஷா அபியான் திட்டம், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட பள்ளிகள் என சுமார் 12 லட்சத்து 65 ஆயிரம் பள்ளிகளில் 12 கோடி குழந்தைகளுக்கு இந்த இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய திட்டம் இது என கூறப்படுகிறது.

இந்நிலையில் 2013–ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், இந்த திட்ட அமலாக்கம்பற்றி புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்து, அதை அதிகாரப்பூர்வ அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள் இதோ:

* உணவு தானியங்கள் இல்லை என்றோ, எரிபொருள் இல்லை என்றோ, சமையல் பணியாளர்கள் இல்லை என்றோ அல்லது பிற என்ன காரணத்தினாலாவது பள்ளியில் எந்தவொரு வேலை நாளிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்காவிட்டால், அடுத்த மாதத்தின் 15–ந்தேதிக்குள் அவர்களுக்கு மாநில அரசு, உணவு பாதுகாப்பு அலவன்சு வழங்க வேண்டும்.

* எந்தவொரு காரணத்தினாலும், குழந்தைகள் தாமாக மதிய உணவு சாப்பிடவில்லை என்றால், அதற்காக உணவு பாதுகாப்பு அலவன்சு வழங்க வேண்டியதில்லை.

* தொடர்ந்து 3 நாட்களோ அல்லது ஒரு மாதத்தில் 5 நாட்களோ மதிய உணவு வழங்கப்படா விட்டால், அதற்கு யார் பொறுப்பு என கண்டறியப்பட வேண்டும்.

* மதிய உணவு தரத்தை உறுதிப்படுத்துவதற்காக, அரசு உணவு ஆராய்ச்சி கூடங்களில், அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவினை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

* மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை, மதிய உணவு மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். மாதம் ஒரு பள்ளி என தேர்ந்தெடுத்து உணவு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

* பள்ளிகளில் உணவு தானியம் இல்லை என்றாலோ, சமையல் செலவுக்கு பணம் இல்லை என்றாலோ பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள பிற நிதிகளை பயன்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கப்படுகிறது. பின்னர் மதிய உணவு நிதி வந்தவுடன் அதில் இருந்து செலவு செய்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

* ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைப்பதற்கான வசதி செய்திருக்கப் படவேண்டும். நகரங்களை பொறுத்தமட்டில் மைய சமையல்கூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

* கல்வி உரிமைச்சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள பள்ளி நிர்வாக குழு, மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதை கண்காணிக்க வேண்டும்.

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!