குலு குலு – விமர்சனம்!

குலு குலு – விமர்சனம்!

விஜய் டிவி-யின் `லொள்ளு சபா’ மூலமாக அறிமுகமான ஆக்டர் சந்தானம். டைமிங் காமெடி, உடனுக்குடன் கூறப்படும் கவுண்டர்கள் ஆகியவை நடிகர் சந்தானத்தின் ட்ரேட்மார்க் முத்திரை. 2004ஆம் ஆண்டு, நடிகர் சிம்புவின் மூலமாக `மன்மதன்’ படத்தில் நடித்து, திரையுலகிற்குள் நுழைந்தார் சந்தானம். அதன்பிறகு தொடர்ந்து அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அம்புட்டும் இப்போதும் சகல ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தவை. முன்னரே சொன்னது போல் காமெடியனாக இருந்தாலும் சரி, ஹீரோவாக இருந்தாலும் சரி, நொடிக்கு நொடி கவுண்டர் வசனம் பேசுவதும், எதிரில் இருப்பவரைக் கலாய்த்தே காலி செய்வதும் சந்தானத்தின் ஸ்டைல். ஆனால் தனக்கு அப்படி ஒரே ட்ராக்கில் பயணிக்க விருப்பமில்லை என்பதை கோலிவுட்வாசிகளுக்கு புரியும்படி கொடுத்திருக்கும் படைப்பே ‘ குலு குலு’.

அதாவது கூகுள் (அ) குலு பாய்என்ற நாமகரணத்தில் நாடோடியாக வாழ்ந்து வருகிறார் சந்தானம். யார் எந்த உதவி கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்யக்கூடிய குணம் கொண்டவர். அப்படியான, உதவியால் பல நேரத்தில் உபத்தரங்களையும் எதிர்கொள்கிறார். ஆனாலும் அவரிடம் இளைஞர்கள் சிலர் கடத்தப்பட்ட தனது நண்பனை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கும் சந்தானத்தை மிகப்பெரிய பிரச்சனை பின் தொடர, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா?, கடத்தப்பட்டவரை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் இப் படத்தின் கதை.

கலாய்த்தே பெயர் வாங்கியதைப் போலவே, கொஞ்சம் சீரியஸாக நடித்தும் ஆடியனஸை கவர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நாயகன் குலுபாயாக வரும் சந்தனம். அதற்கேற்றாற் போல் கெட்டப்பையும் உடைகளையும் மாற்றிக்கொண்டதால் கேரக்டருக்கே தனி அந்தஸ்து வந்து விட்டது..அப்படி தான் சீரியசாக நடித்தாலும், தன்னை சுற்றியிருப்பவர்களை காமெடி பண்ண வைத்து, சிரிப்புக்கு வழி விட்டிருக்கும் பாணி ரசிக்கவே வைக்கிறது

நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதுல்யா சந்த்ரா இரண்டு பேரும் நாயகிகளாக அல்லாமல் கேரக்டர்களாகவே மாரி விட்டார்கள். இருவரும் தங்கள் ரோல் புரிந்து கச்சிதமாக நடித்திருப்பதோடு, தேவையான இடத்தில் காமெடியாக நடித்து சிரிக்கவும் வைக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் ப்ரதீப் ராவத், போலீஸாக நடித்திருக்கும் தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மெளரிஷ், யுவராஜ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் படம் முழுவதும் பயணிப்பதோடு, கதையோடும் பயணித்து கவனம் பெறுகிறார்கள்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, பின்னணி இசை கதையின் போக்கையே மாற்றும் வகையில் பயணித்துள்ளது. காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும் இசை ஆக்‌ஷன் காட்சிகளில் அதிர்ந்து போகும் விதத்தில் ஒலிக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, சந்தானம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் கேரக்டர்களை வித்தியாசமாக காட்டியிருக்கிறது.

சந்தானத்தை வைத்துக்கொண்டு காமெடி படம் மட்டுமே எடுக்க முடியும் என்ற இமேஜை உடைத்திருக்கிறார் இயக்குநர் ரத்ன குமார். படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் நம்மை சிரிக்க வைத்தாலும், சந்தானத்தின் கதாப்பாத்திரம் மட்டும் மிக அழுத்தமாகவும், நம் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சித்தரிக்கப்பட்டிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சந்தானம் மூலம் பழங்குடி மக்கள், கெராஸ்கோஃபோபியா (வயது முதிர்ச்சியைக் குறித்த பயம்), மெனோபாஸ், மொழி அரசியல், ஈழத் தமிழர்களின் இருப்புச் சிக்கல்கள், பப்ஜி விளையாட்டும் சைனாவும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எனப் படத்தில் பல விஷயங்களிடன்
உலக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் ரத்ன குமார், சில இடங்களில் உள்ளூர் அரசியல் மற்றும் அதில் நடக்கும் மொழி அரசியலை மிக அழுத்தமாக பேசியிருக்கிறார்.

மொத்தத்தில், ‘குலுகுலு’ சந்தானத்திற்கு மட்டும் அல்ல கோலிவுட் ரசிகர்களுக்கும் புதுசு

மார்க் 3/5

error: Content is protected !!