குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ – மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில் பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவியர் சிலரிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதிக் கேட்டேன். அவர்களில் பெரும்பாலோர் பிழையின்றி எழுதியிருந்தனர்.
sep 30 s m s english
ஆய்வாளர்கள் இவ்வாறு தவறாக எழுதியதன் காரணம் என்னவாக இருக்கும் என ஆராய்ந்தேன். இவர்களிடம் எழுதி வாங்கும்போது கவனிக்க முடிந்த விஷயம் ஒன்று உண்டு. இவர்கள் அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. மாணவர்களுக்காகவே பல்வேறு சலுகைகளையும் கைப்பேசி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவர்களையும் கைப்பேசிகளையும் பிரிக்க முடியாத அளவு பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர். அதன் காரணமாகவே இவர்கள் இப்படி மாறிப்போயுள்ளதாக முடிவுக்கு வந்தேன்.

மாணவர்கள் அனைவரும் குறுஞ்செய்தியை விரைவாக டைப் செய்து அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அப்படி குறுஞ்செய்தி அனுப்பும்போது பிழைபடவே டைப் செய்து அனுப்புவதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளனர். மொழிநடை, இலக்கணம், வார்த்தைகள் இவற்றைப் பற்றிய புரிதலோ, அக்கறையோ இல்லாமல் மனதில் தோன்றியதை அடித்து அனுப்பும் பழக்கத்தை இவர்கள் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்கள் தவறாக எழுதியுள்ளது குறித்து எந்த ஒரு வருத்தமும்படாமல், தவறாக எழுதுவதெல்லாம் ஒரு விஷயமா என்று கேள்விகளை வேறு முன்வைக்கின்றனர்.

குறுஞ்செய்தி அனுப்பும் மாணவர்கள் மொழிநடை குறித்துக் கவலைப்படுவதுமில்லை. பிழைகளைக் குறித்தும் அறிந்திருக்கவுமில்லை. இதன் காரணமாக தவறான ஒரு நடை தமிழகத்தில் மாணவர்களிடத்தில் பழக்கத்தில் வேரூன்றியுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் குறுஞ்செய்தி அனுப்பும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் பிழைபட எழுதும் பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டனர். இதிலிருந்து இவர்களை மீட்க வேண்டியது கல்வியாளர்களின் கடமையாக உள்ளது.

இந்த ஆய்வாளர்களே வருங்கால ஆசிரியர்கள் – பேராசிரியர்கள். இவர்கள் அனைவரும் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருபவர்கள்.

இவ்வாறு பிழைபட பயிலும், பிழையாக எழுதுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த ஆய்வாளர்கள் ஆசிரியர்களாக மாறும்போது கல்வியின் தரம் இன்னும் குறைந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆகவே, இதனை ஆரம்பத்திலேயே தடுக்க வேணடிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய தேவை இப்போது இல்லை. ஏனெனில் கைப்பேசி நிறுவனங்கள் பேசுவதற்குக்கூட குறைந்த கட்டணங்களையே நிர்ணயித்துள்ளன. அனைவரையும் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் தொலைத்தொடர்பு நம்மிடையே உள்ளது. மின்னஞ்சல் சர்வ சாதாரணமாக பழக்கத்தில் உள்ளது. அதில் இலக்கண முறைப்படி அனுப்ப பழகிக் கொள்வோம்.

ஆகவே, குறுஞ்செய்தி அனுப்பும் வழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து, நாம் பின்பற்றும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தைப் பிழையின்றி, இலக்கண முறைப்படி எழுதப் பழகி நாமும் முன்னேறி நாட்டின் கல்வித்தரத்தையும் முன்னேற்றுவோம்.

அறிவியல் வளர்ந்து வரும் இன்றைய காலச்சூழலில் மொழித்தூய்மை பேணப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு மேலாக பேசிய எழுதிய வார்த்தைகளை தவறாக எழுதும் பழக்கத்தை இந்த குறுஞ்செய்தி கலாசாரம் கொண்டு வந்துவிட்டது.

இதிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்டெடுத்து சரியான மொழிநடையில் எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

க. பரிமளா

Related Posts

error: Content is protected !!