குடும்பம் என்றால் அதற்குள் ஓர் அரசியல் உண்டு. அப்புறமென்ன குடும்ப அரசியல்?

குடும்பம் என்றால் அதற்குள் ஓர் அரசியல் உண்டு. அப்புறமென்ன குடும்ப அரசியல்?

குடும்பம் என்பதுதான் சமூகம், அரசியல் என்பதன் அடிப்படை. குடும்பம் என்றால் ரத்த உறவில் கிளைத்தது. கண்களுக்குத் தெரியும் அம்மா, அப்பா என்பதற்கு அப்பால் பல தலைமுறைகளின் பண்பும், நிறமும் குணாதிசயங்களும் கொண்டது. நெடுங்காலத்திற்கு முன்னால் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு. இன்னும் சிதையாமல், உருக்குலைந்து போகாமல் இருப்பதற்கு அறிந்த காரண காரியங்களைவிட அறியாமல் இருக்கும் அம்சங்களே முக்கியம். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். பெருஞ்செல்வம் ஈட்டிப் புகழுடன் திகழ வேண்டும். அதிகமான அதிகாரம் பெற்று முதல் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் படாத பாடுபட்டு வருகிறார்கள். அதில் ஆண் மக்கள் இருப்பதுபோலவே பெண்மணிகளும் இருக்கிறார்கள்.
edit apr 16
குடும்பம் என்றால் அதற்குள் ஓர் அரசியல் உண்டு. அதுதான் குடும்பத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டு இருக்கிறது. புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் எல்லாம் குடும்பத்தில் இருக்கும் அரசியலைத்தான் சொல்லி உள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவே நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதப்படுகின்றன. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்கப்படுகின் றன. அது அடுத்தவர் குடும்பத்தில் இருக்கும் அரசியலைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தின் விளைவுதான். குடும்பத்தின் பாரம்பரியம், சமூகப் பங்களிப்பு, கலாசார உயர்வு பற்றிச் சொன்னாலும் அதற்கு எதிராக பல கருத்துகள் சொல்லப்பட்டே வருகின்றன. குடும்பம் என்பது தன்னலம் சார்ந்தது. எல்லாவிதமான மனித மாண்புகளையும் குலைக்கிறது. அதாவது, குறைந்தபட்சமாக ஆளுவோர்க்குக் குடும்பம் இருக்கக் கூடாது.

குழந்தைகள் தாய், தந்தை பெயர் தெரியாமல் வளர்க்கப்பட வேண்டும். அதுதான் நாணயமான, பாரபட்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக் குமென்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க ஞானி பிளேட்டோ குடியரசு நூலில் எழுதினார். குடியரசு குடும்பத்தை ஒழித்த நூலென்றும், குடும்பம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கப்பட்ட நூலென்றும் படிக்கப்பட்டு வருகிறது. ஆனால், குடும்பம் என்பது எந்தவிதமான சட்டவிதிகளாலும் கட்டமைக்கப்படவில்லை. எனவே, குடும்பங்களும், அதன் வழியாக அரசியலும் ஜீவிதமாக இருக்கிறது.

அரசியல் என்பது புதுச்சொல்லோ, மொழிபெயர்ப்போ இல்லை. அது பழந்தமிழ்ச் சொல். சிலப்பதிகாரத்தில் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்’ என்று பாடப்பட்டுள்ளது. எளிய குடும்பங்களில் இருந்துதான் அதிகாரம் படைத்த அரச குடும்பங்கள் தோன்றின. அவை நீடித்து நிலைத்திருக்க சில விதிமுறைகள் அமைத்துக் கொண்டன. அதில் முதல் விதி, மூத்த மகன் அரசனாவான். அது பல குடும்ப அரசியல் சச்சரவுகளுக்கு முடிவு கட்டியது. ஆனால், குடும்ப அரசியல் என்பதில் எந்த விதியும் எப்பொழுதும் நிலைத்து இருப்பதில்லை.

அரசனாகக் காத்திருக்கும் மூத்த மகனைத் தள்ளிவிட்டு இரண்டாவது, மூன்றாவது மகன் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக்கொள்வது சரித்திரம் முழுவதிலும் நடைபெற்று இருக்கிறது. மொகலாய பேரரசர் ஷாஜஹானுக்கு எழுபது வயதாகி இருந்தது. அவர் மூத்த மகன் தாரா ஷுகோ அரசனாகத் துடித்துக் கொண்டிருந்தான். மூத்த மகன்தான் அரசனாக வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி இல்லை. வலிமையும், திறமையுங்கொண்ட மகன் அரசனாவான் என்று சொல்லிக்கொண்டு தந்தையை சிறையில் அடைத்து, வாளே அரசுரிமை யைத் தீர்மானிக்கும் என்று ஒளரங்கசீப் போரில் இறங்கினார். மூன்று சகோதரர்களையும் கொன்று ஆலம்கீர் என்று பட்டம் சூட்டிக்கொண்டு மொகலாய அரசரானார்.

அதுதான் குடும்ப அரசியல். அரச குடும்பங்களில்தான் அது நிகழும் என்பதில்லை. ஏழை, எளிய, பணக்காரக் குடும்பம் என்று எல்லாக் குடும்பங்களிலும் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள் – குடும்ப அரசியல் சம்பவங் களின் கொடூரத்தைக் குறைத்துக் கற்பனை மாதிரி சொல்கின்றன. அதுவே படிக்க வைக்கிறது.ஒரு நூற்றாண்டிற்குள் இந்தியாவில் பல அரசியல் குடும்பங்கள் தோன்றியிருக்கின்றன. முதலில் தேச பக்தர் குடும்பங்களாக இருந்தன. தேச விடுதலைக்காகப் போராடி, அடிபட் டும் சிறைபட்டும் வந்த குடும்பங்களில் இருந்து சிலர் சுதந்திரம் பெற்றதும் ஜனநாயக தேர்தலில் நின்றார்கள். தேர்தலில் வென்று அமைச்சர்களானார்கள்; முதல் முறையாக அவர்களிடம் அதிகாரம் வந்தது.

அமைச்சர்களின் குடும்பங்கள் அரசியல் குடும்பங்களாக மாறின. குடும்ப உறுப்பினர்கள் அரசியல்வாதிகளாகவும் அரசியல் தரகர்களாகவும் மாறினார்கள். அதிகாரத்தோடு பணமும் வந்து சேர்ந்தது. புதிய ஜனநாயக ஆட்சிமுறை பலரையும் கவர்ந்தது. புதிய தொழில் ஒன்று இருப்பதைப் பலரும் கண்டு கொண்டார்கள். மக்கள் சேவைக்காக என்று சொல்லிக்கொண்டு அரசியலில் கால் பதிக்க ஆரம்பித்தார்கள். பாரம்பரிய கட்சியில் சேர்ந்து தேர்தல் களம் கண்டார்கள். அதன் செயற்பாடுகள் மீது விமர்சனங்கள் வந்ததும் புதிய கட்சிகளில் இடம்பிடித்துக் கொண்டார்கள். அவர்களின் குடும்பங்கள், அரசியல் குடும்பம் என்ற அந்தஸ்து பெற்றது.

அரசியல் கட்சிகள் மீது விமர்சனமும், அடையாளமும் இருப்பதைக் கண்ட சிலர் – புதிய கொள்கை, செயல்திட்டம், ஏழை எளிய மக்களை வாழ்விப்பதே ஒரே லட்சியம் என்று சொல்லிக்கொண்டு அரசியல் கட்சிகள் தொடங்கினர். அவர்கள் பெரும்பாலும் ஜாதி அபி மானிகளாக, சமயப் பற்றாளர்களாக, ஓய்வுபெற்ற அதிகாரிகளாக, பிரமுகர்களாக இருந்தார்கள். அவர்கள் மனைவி, மகன், மகள், மருமகள், சகோதரர்கள் என்று ஒரு பெரும் படையோடு அரசியல் களத்தில் இறங்கி, “சமத்துவம், அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கு எங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பல்லாண்டு காலமாகப் பெற்ற அறிவும், அனுபவமும் உங்களை மேம்படுத்தப் போகிறது’ என்று பசப்பு மொழிகள் பேசுகிறார்கள்.

ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் ஓர் அரசியல் கட்சியில் பல இனம், மொழிகள், சமயம் சார்ந்தவர்கள் இணைந்திருந்தார்கள். எனவே, எங்கள் கட்சியே பெரிய குடும்பம் என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டார்கள். தற்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. கட்சித் தலைமை, அதிகாரம் முழுவதும் ஒரு குடும்பத்தின் கைக்குள் போய்விட்டது. எங்கள் குடும்பமே கட்சி. கட்சியை நடத்தத்தக்க வேண்டிய தலைமைப் பண்புகள் எங்கள் குடும்பத்தினர்களிடமே இருக்கிறது என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் அரசியல் கட்சிகள் குடும்பக் கட்சிகளாகி விட்டன என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ இல்லை; யதார்த்தம். காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையில் பரந்து கிடக்கும் நிலப்பரப்பில் உள்ள பல கட்சிகள் குடும்பக் கட்சிகள்தான். குடும்ப ஆட்சிதான் நடைபெறுகிறது. அதில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள், பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது.
அரசியல் குடும்பங்களில் இருந்து யாரும் எந்த வேலைக்கும் போவதில்லை. படித்திருந்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, அரசியல் வாதி என்ற வேலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆண்கள்தான் என்றில்லை. பெண்களும் வந்துவிட்டார்கள். அரசியல் குடும்பப் பாரம்பரியத் தில் வந்த நாங்கள் வேறு வேலைகளுக்கு ஏன் போக வேண்டும்? மக்கள் சேவை என்பதே எங்கள் வேலையென்று சொல்கிறார்கள்.

அரச பரம்பரைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த எளிய மக்களுக்கு ஆடம்பரமான அரசியல் குடும்பங்களை அங்கீகரித்துக் கொண்டு போவதில் சிரமம் ஏதுமில்லை. பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள் என்று பலவற்றிலும் கருணையும், பரிவும் ஆறாக ஓடப் பேசி மக்களின் வாக்குகளை அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒரு கட்சி பலவீனமாக இருந்தால் கூட்டணி சேர்த்துக்கொண்டு மக்களைத் தோற்கடித்து விடுகிறார்கள்.அரசியல் குடும்பங்கள் பலவும் உலக மகா பணக்காரர்களின் குடும்பமாக இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் அரசியலில் எதிர் முகாமில் இருந்த அரசியல் குடும்பங்கள் சம்பந்தம் பண்ணிக்கொண்டு ஒரே குடும்பமாகித் தேசத்தைச் சுரண்ட ஆரம்பித்துவிட்டன. அதற்குப் பெரிய பட்டியல் இருக்கிறது.

உலகத்தில் பல பெரிய, சிறிய ஜனநாயக நாடுகளில் அரசியல் குடும்பங்களின் ஆட்சிதான் நடைபெறுகிறது. செல்வ வளம் கொழிக்கும், கல்வி அறிவு மிகுந்தவர்கள் வாழும் நாடான அமெரிக்காவில் அதிபர், மாநில ஆளுநர்கள், பெருநகர மேயர்கள் என்று அதிகாரம்மிக்க பதவிகளை அரசியல் குடும்பங்கள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், இஸ்ரேல், மலேசியா – என்று பல நாடுகளில் அரசியல் குடும்ப ஆட்சிதான் பெரும்பாலும் நடைபெறுகிறது.

அரசியல் குடும்பங்களில் ஏராளமான பணம் இருப்பதாலும் ஆட்கள் நிறைந்திருப்பதாலும் தொழில், வர்த்தகம், கல்வி, பொழுதுபோக்கு, கேளிக்கை, ஊடகம், விளையாட்டு, ரியல் எஸ்டேட் என்று பல துறைகளில் கால் பதித்து வெற்றி பெற்று, மக்கள் ஆதரவு பெற்றிருக் கின்றன. ஆனால், அரசியல் குடும்பங்களின் முறையற்ற செயற்பாடுகள், லஞ்சம், ஊழல் பற்றி சில நாடுகளில் கடுமையான விமர்சனங் கள் வந்துகொண்டு இருக்கின்றன. சட்டபூர்வமாகத் தடுக்க வழி பார்க்கிறார்கள். குடும்ப அரசியல் என்பது மனிதர்கள் குடும்பமாக இருக்கிற வரையில் இருக்கவே செய்யும். குடும்பங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதிலேயே இருக்கிறது. ஆனால், அரசியல் குடும்பங்களின் செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு எதிரானது. அதில் அதிகாரத்திற்கான குடும்ப அரசியலும் இருக்கிறது. எனவே, மக்களுக்குப் பாதிப்பு அதிகமாகிறது. அதனை அறிவதும், களைய வாக்களிப்பதும் மக்களின் ஜனநாயகக் கடமையாகிறது.

சா.கந்தசாமி

error: Content is protected !!