காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸாகப் போகும் கத்துக் குட்டி ஆல்பம்!

காந்தி ஜெயந்தி அன்று ரிலீஸாகப் போகும் கத்துக் குட்டி ஆல்பம்!

நரேன் – சூரி நடிப்பில் பட்டையைக் கிளப்பும் பரபரப்பு காமெடி படமாக உருவாகி இருக்கிறது ‘கத்துக்குட்டி’. நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தை புதுமுக இயக்குநர் இரா. சரவணன் இயக்கி இருக்கிறார். கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கே ஹீரோயினியாக நடிக்கிறார். ‘காதல்’ சந்தியா ஒரு பாடலுக்கும் ‘சூப்பர் சிங்கர்’ அழகேசன் ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கும் ‘கத்துக்குட்டி’ படத்தில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் முதன் முறையாக அறிமுகமாகி இருக்கிறார். 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பாளராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் இருக்கும் ஜெயராஜ் ‘கத்துக்குட்டி’ படத்தில் நரேனின் தந்தையாக நடித்திருக்கிறார்.


படத்தின் மொத்த காட்சிகளையும் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே படமாக்கி, தஞ்சை மக்களின் வாழ்வியலை அப்படியே கண்முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். இதுநாள் வரை டெரர் பாத்திரங்களில் மட்டுமே நடித்த நரேன், முதன் முறையாக வயிறு குலுங்க வைக்கும் அளவுக்கு காமெடியில் ரவுண்ட் கட்டியிருக்கிறார். அவருக்குத் துணையாக வரும் சூரி, ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில், படம் முழுக்க காமெடி அதகளத்தையே நடத்தி இருக்கிறார். ”இதுவரை நான் பண்ணிய படங்களிலேயே ‘கத்துக்குட்டி’ தனித்துவம் கொண்டதாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டப்பிங் பேசிய போதும் அதே மாதிரிதான். சீனைப் பார்த்ததுமே சிரிக்கத் தொடங்கிவிடுவேன். அவ்வளவு லைவான காமெடி காட்சிகள் படத்தில் இருக்கின்றன. குறிப்பாக ஒரு பாட்டிக்கும் எனக்கும் நடக்கும் மோதல், தியேட்டரையே தூள் பண்ணிடும் பாருங்க…” என ‘கத்துக்குட்டி’ படம் குறித்து பெருமிதமாகச் சொல்கிறார் சூரி.

படத்தில் எந்த இடத்திலும் ‘கட்’ கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ”தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்” என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள். தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாலே வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது.


”நூறு சதவிகித காமெடிப் படமாக ‘கத்துக்குட்டி’ உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக் கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மூவரும்.

அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் ‘கத்துக்குட்டி’ வெளியாக இருக்கிறது.

error: Content is protected !!