கலைச்சுடுங்க சார் இந்த ஆட்சியை!- ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

கலைச்சுடுங்க சார் இந்த ஆட்சியை!- ஆளுநரிடம் ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் உள்ள அதிமுக அரசைக் கலைக்க வேண்டும் என மாநில பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் திமுக சார்பில் இன்று மனு தரப்பட்டுள்ளது என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாதகமாக செயல்பட எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது என்று கூறும் வீடியோ செய்தி  தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. அது குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கும்படி ஸ்டாலின் கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பண பேர விடியோ பற்றி சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வெண்டும் என்று திமுக சார்பில் மனு ஒன்றை ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

முன்னர் கூறியபடி பொறுப்பு ஆளுநரிடம் மனு ஒன்றை இன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஸ்டாலினுடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.  ராமசாமி, அபுபக்கர், துரைமுருகன்,  பொன்முடி, ஜெ. அன்பழகன், மா. சுப்பிரமணியன் ஆகியோரும் சென்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பண பேர விவகாரத்தில் முறையான விசாரணை தேவை என ஆளுநரை சந்தித்து மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

தி.மு.க. அளித்துள்ள கோரிக்கைகளை சட்டரீதியாக கலந்து ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். அதன்பின் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். டைம்ஸ் நவ் ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதரமாக இணைத்திருக்கிறோம் என்று மனு கூறியுள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றும் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆளுநரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி யோசித்து முடிவு செய்வோம் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து பேச இருக்கிறார். அவர் முன்கூட்டியே ஆளுநரை சந்திக்க அனுமதி பெற்றுள்ளார் எனத் தெரிகிறது.

error: Content is protected !!