கம்பம் திரைப்பட விழாவிற்கு வர்ரீங்களா கமல்…!By கருப்பு கருணா

கம்பம் திரைப்பட விழாவிற்கு வர்ரீங்களா கமல்…!By கருப்பு கருணா

கான் திரைப்பட விழாவிற்கு சென்று வந்துள்ள திரைக்கலைஞர் கமல்ஹாசன், இன்று இந்து நாளிதழில் ஒரு பேட்டி அளித்துள்ளார்.(லெனின் சார்தான் எனக்கு போன் செய்து சுட்டிக்காட்டினார்) அதில் அவர் பினவரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.“தமிழகத்தில் சிற்றூர்களில் வசிக்கும் சினிமா பார்வையாளர்களுக்கும் தரமான சர்வதேச சினிமா படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்குத் திரைப்பட இயக்கங்களைச் சிறு நகரங்களில் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இன்று திரைப்பட இயக்கங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் இவை பி அண்ட் சி சென்டர்களுக்கும் நகர வேண்டிய தேவை உள்ளது. சர்வதேச சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்கள் பார்ப்பதன் வாயிலாக மட்டுமே உள்ளூர் சினிமாவின் உள்ளடக்கம் மாறும். அண்டை மாநிலமான கேரளத்தில் அதைப் போன்ற இயக்கங்கள் வாயிலாகவே திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் ரசனையுணர்வு மேம்பட்டுள்ளது. ரசனை மேம்படும்போதுதான் நம்மூரில் எடுக்கப்படும் திரைப் படங்களையும் தரமாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.-இவ்வாறு அக்கறையுடன் தெரிவித்துள்ள கமலுக்கு சில தகவல்களை கவனப்படுத்தவே இந்த பதிவு.
kamal
தமிழகத்தில் பல பத்தாண்டுகளாகவே திரைப்பட இயக்கங்கள் இயங்கிவருகின்றன. சென்னைக்கு வெளியேவும் பல அமைப்புகள் சிறப்பாகவும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் ச.தமிழ்ச்செல்வன், ஆர்.ஆர்.சீனிவாசன் முயற்சியில் “காஞ்சனை” திரைப்பட இயக்கம் செய்தபணிகள் மகத்தான.நெல்லை மாவட்டத்தின் எல்லா கிராமங்களிலும் 16 எம்.எம் புரஜக்டரை தூக்கிக்கொண்டு தமிழும் சீனிவாசனும் வாழ்ந்து தீர்த்ததை கமலஹாசன் அறியமாட்டார்.பத்தமடையிலும் அம்பாசமுத்திரத்திலும் ரித்விக் கட்டக்கும், சத்யஜித்ரேவும் வலம் வந்தது அவருக்கு தெரியாது.

கோவையை மையப்படுத்தி “கோணங்கள்”, மதுரை கிராமங்களில் “யதார்த்தா” போன்ற திரைப்பட இயக்கங்கள் காட்டிய உலகசினிமாக்களை பார்த்து மகிழ்ந்தவர்களை கேட்டால் சொல்வார்கள் டிசிகாவின் பை சைக்கிள் தீவ்ஸ் கதையை.

இந்த இயக்கங்கள் எல்லாம் இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

தனது ஆடுகளை விற்று கிராமம்தோறும் உலகப்படம் காட்டிய குன்னாங்குன்னாங்குர் “ஆடு” செல்வத்தை கமல் அறியமாட்டார்.செல்வத்தின் முயற்சிக்கு உதவியாக மூன்றரை லட்சம் செலவில் எடிட்டர் லெனின் வாங்கிக்கொடுத்த புரஜக்டரையும்,அது ஓடிய கிராமங்களின் பெயரும் கமலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

இப்போதும் 2007 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தால் துவக்கப்பட்ட “திரை இயக்கம்” 500 ஊர்களில் திரையிடல் மையங்களை கொண்ட தெருச்சினிமா இயக்கத்தை கண்டிருப்பது உலகநாயகனுக்கு தெரியாது.ஆண்டுதோறும் உலகசினிமா விழாவையும்.சர்வதேச ஆவணப்பட குறும்பட விழாவையும் திரை இயக்கம் நடத்துவது அவரின் கவனத்திற்கு வந்திருக்குமோ தெரியவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் நடத்தப்படும்

உலகப்பட விழாவை கடந்த ஆண்டு பட்டுக்கோட்டை நகரத்தில் நடத்தியதும், இந்த ஆண்டு மானிலத்தின் கடைக்கோடியில் உள்ள கம்பம் நகரத்தில் நடத்தவிருப்பதும் அவர் அறியாததாக இருக்கட்டும். தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிறிய பெரிய ஊர்களில் திரைப்பட சங்கங்களை தமுஎகச துவக்கி மாதந்தோறும் உலகப்படங்களை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டுசேர்த்திருப்பதை அவர் அறியமாட்டார்.

இதெல்லாம் இருக்கட்டும். இதுபோன்ற முயற்சிகளுக்கு கமலஹாசன் போன்றவர்கள் என்ன மாதிரியான ஆதரவை அளித்துள்ளார்கள் என்றும் கேட்கத் தோன்றுகிறது.இதுபோன்ற திரைப்பட விழாக்களுக்கு நீங்க வருவீங்களா.

உங்களை போன்றவர்கள் வந்தால் அவை கூடுதல் கவனம் பெறுமே. இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை கமல்…அடுத்த மாதம் கம்பம் நகரில் தமுஎகச நடத்தப்போகும் உலகத்திரைப்படவிழாவில் நீங்கள் பங்கேற்கலாமே. வசதி எப்படி..வர்ரீங்களா கமல்.

கருப்பு கருணா

error: Content is protected !!