கணம் – விமர்சனம்!

கணம் – விமர்சனம்!

கோலிவுட் என்றில்லை டோலிவுட்டிலும் கூட பன்னெடுங் காலமாக அம்மா செண்டிமெண்ட் ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் நம் தென்னகம் அம்மா பாசத்துக்குப் பெயர் போனது என்பதாகக் கூட இருக்கலாம் .இதனிடையே தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமெண்ட் நிரம்பி வழிந்த காரணத்தால் அம்மா பாடல்கள் எனத் தனித் தொகுப்பே பலருடைய திரைப்பாடல் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளதெல்லாம் தனிக் கதை. .அப்படியாப்பட்ட அம்மா செண்டிமென்ட்டை கொஞ்சம் சயன்ஸ் பிக்‌ஷன் எனப்படும் டைம் மிஷின் கான்செப்டை மிக்ஸ் செய்து காண்போரை, நெகிழ வைக்கும் விதத்தில் புதுசாக ‘கணம்’ என்ற டைட்டிலில் ஒரு படம் ரிலீஸ் பண்ணி அடடே சொல்ல வைத்து இருக்கிறார்கள்.

அதாவது சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் மூவரும் பால்ய கால சிநேகிதர்கள். இதில் சர்வானந்த் சின்ன வயதில் அவர் தாய் அமலாவை விபத்தொன்றில் பறிகொடுத்து விட்டு அம்மா நினைவாகவே வாடுகிறார். கூடவே இசைக் கலைஞராக வேண்டும் என்ற லட்சியமும் வைத்திருக்கிறார். இச்சூழலில் விஞ்ஞானி நாசர் அவர்களுக்கு பழக்கமாகிறார். அவர் கேஷூவலாக தான் கண்டுபிடித்த டைம் மிஷின் மூலமாக கடந்த காலத்துக்கு சென்று இறந்து போன தாயை விபத்திலிருந்து காப்பாற்றலாம் என்றெல்லாம் ஆணித்தரமாகச் சொல்கிறார். . ஐ. சக்கன்னா என்று சந்தோஷப்படும் சர்வானந்த் டைம் மிஷினில் பயணிக்க சம்மதிக்கிறார். கூடவே சதீஷும், திலக்கும் அவருடன் கடந்த காலத்துக்கு போய் முறிந்து போன காதலையும், படிப்பையும் கரெக்ட் செய்ய முடிவு செய்து. மூவரும் கடந்த காலத்துக்கு செல்கின்றனர். அங்கே சர்வானந்த் தனது அம்மாவை சந்திக்கிறார். சதீஷ் தன்னை காதலித்த பள்ளி தோழி யையும், திலக் தன் இளவயது தோற்றத்தில் உள்ள சிறுவனையும் சந்திக்கின் றனர். அவர்கள் மூவரும் நினைத்தபடி எல்லாவற்றையும் சரி செய்தார்களா? விபத்திலிருந்து தாய் அமலாவை சர்வானந்த் காப்பாற்றினாரா என்பது உள்பட பல கேள்விகளுக்கு பதில் சொல்வதுதான் கணம் படக் கதை.

தமிழில் முழு நீள அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த (Science Fiction) படங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஊறுகாய் போல அறிவியலைத் தொட்டுக்கொண்ட படங்கள் வருவதே கூட பெரிய ஆறுதலான விசயம்தான். அந்த குறையை போக்க வந்த ‘இன்று நேற்று நாளை, 24’ ஆகிய படங்கள் லிஸ்டில் இணைந்து. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலகட்டத்தில் கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகார்த்திக் . திரைக் கதையில் சுவை சேர்க்க சில கடினமான முடிச்சுக்களையும் போட்டு அதை ஒவ்வொன்றாக அவிழ்த்து நைஸ் என்று சொல்ல வைத்திருக்கிறார்..

எங்கேயும் எப்போதும் படத்தில் பார்த்த சர்வானந்த் சில பல ஆண்டுகளுக்கு பிறகு வலுவான தாய் சென்ட்டிமென்ட் கதையுடன் மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்கிறார். அம்மா இல்லாத ஏக்கத்தை வெளிப்படுத்துவது தொடங்கி கடந்த காலத்தில் அம்மாவை சந்திக்கப் போன இடத்தில் அவரைப் பார்த்ததும் ஏற்படும் அந்த உணர்வை பார்வையாளர்களுக்கும் படர விடும் இயற்கையான நடிப்பை வெளிப் படுத்துவதில் தான் சாமர்த்தியசாலி என்பதை இப்படத்திலும் நிரூபித்திருக்கிறார்.

முன்னொரு கால அழகு மயில் அமலா அம்மா ரோலில் வருகிறார், அம்மாவாகவே வாழ முயன்றிருக்கும் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருக்கலாம். நாயகி ரீத்து வர்மாவுக்கு குறைவான வேலை என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.

பால்ய நண்பர்களாக வரும் சதீஷ், ரமேஷ் திலக் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருப்பதோடு, நம்மை சிரிக்கவும் வைப்பதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள். விஞ்ஞானியாக நடித்திருக்கும் சீனியர் ஆர்டிஸ்ட் நாசர், அமலாவின் கணவராக நடித்திருக்கும் ரவிராகவேந்தர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜோயின் இசையில் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிப்பதோடு, கதாப்பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உயிர் அளித்துள்ளது.

சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை குழப்பம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒவ்வொரு காலக்கட்டத்தையும் வித்தியாசப்படுத்தியும் காட்டியிருக்கிறது. முத்தாய்ப்பாக படம் முடியும் போது‌ எழுத்து, இயக்கம் என்று தனது பெயரை போட்டுவிட்டு கீழே சன் ஆஃப் புஷ்பாவதி சேகர் என்று போட்டுருப்பதைப் பார்த்து பிரமித்தோர் அதிகம்

மொத்தத்தில் பேமிலியோடு ஒரு ட்ரிப் போய் பார்க்க தகுந்த பட்டியலில் இணைந்து விட்டது இந்த கணம்.

மார்க் 3.25/5

error: Content is protected !!