ஒரு படத் திறப்பும் புறக்கணிப்பும்!

ஒரு படத் திறப்பும் புறக்கணிப்பும்!

ந்து முறை முதலமைச்சராக இருந்தவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை, தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு நிகழ்வில் திறந்து வைத்திருக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்திருக்கிறது. “சட்டமன்ற நூற்றாண்டு விழாவைப் புறக்கணிப்பது என்பது அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கொள்கை முடிவு” என்று முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் பேட்டி கொடுக்கிறார்.

மாறாக, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள். பாராட்டத்தக்கது.

இதே சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத் திறப்பை தி.மு.க. புறக்கணித்தது என்பது அ.தி.மு.க. சொல்லும் காரணமாக இருக்கலாம். அப்போது தி.முக.வுக்கு “பத்தோடு ஒன்று பதினொன்றாக” அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் கலந்து கொள்ளவில்லை என்று அக்கட்சியின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

கருணாநிதி படத் திறப்பு நிகழ்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின் பேரில், துரைமுருகனே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். சிறப்பு விருந்தினர்களுடன், அதாவது குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், சட்டமன்றத் தலைவர் வரிசையில் இடமளிக்கப்படும், வாழ்த்துரை வழங்குவதற்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று கூறியும் அ.தி.மு.க. புறக்கணித்திருக்கிறது.

விமர்சனங்கள் இருக்கலாம். அது கடந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. தமிழ்நாடு நன்கறியும். கூடுதலாக, படத் திறப்பு – சட்டமன்ற நூற்றாண்டு நிகழ்வின் ஓர் அங்கம். எதிர்க்கட்சிக்கு உரிய மதிப்புடன்கூடிய அழைப்பும் விடுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் அ.தி.மு.க. காட்டிய “அரசியல் கூர்மை” இப்படியான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் இல்லை என்பது அக்கட்சித் தலைமையின் பற்றாக்குறையைப் பிரதிபலிக்கிறது.

இளையபெருமாள் சுகதேவ்

error: Content is protected !!