ஐ.பி.எல் 2022: சாம்பியனானது குஜராத் அணி!

ஐ.பி.எல் 2022:  சாம்பியனானது குஜராத் அணி!

ஐ.பி.எல் 2022 தொடரின் இறுதிப் போட்டி பிரம்மாண்ட கொண்டாட்டங்களுடன் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் யாரும் எதிர்பாராத வகையில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதனையடுத்து, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே ரன் எடுக்கத் தடுமாறினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால் யாஷ் தயால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வழக்கமாக அதிரடியாக ஆடும் பட்லர் இந்தமுறை ரன்களைக் எடுக்கத் தடுமாறினார். ஜெய்ஸ்வாலைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜாஸ் பட்லரும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 ஓவரில் 79 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.அதனால், ஆட்டம் மொத்தமாக குஜராத் அணியின் கட்டுக்குள் சென்றது. குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 130 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதனையடுத்து, களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விரித்திமான் சஹா, ஷப்மன் கில் களமிறங்கினர். சஹா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 23 ரன்களுக்கு குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.ஆனாலும் , ஷப்மன் கில், ஹர்திக் பாண்டியா இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. பாண்டியா 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மில்லர், ஷப்மன் கில் இணை நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து குஜராத் அணி 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளது. அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற பெருமையை குஜராத் அணி பெற்றுள்ளது.

error: Content is protected !!