ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்திய பெண் ஒருவர் கைது!- பின்னணி

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்திய பெண் ஒருவர் கைது!- பின்னணி

சிரியா, ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றனர். சில நாடுகளில் இளம் பெண்களும் இதில் சேர்ந்து உள்ளனர். இவர் கள் சிரியாவுக்கு சென்று போர் பயிற்சி பெற்று சண்டையில் ஈடுபட்டும் வருகின்றனர்.இந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்ததாக இந்திய பெண் ஒருவர் சிக்கி உள்ளார். அவருடைய பெயர் அப்ஷா ஜபீன்.அமீரக தலைநகர் அபுதாபியில் தங்கியிருந்த இவர் இங்கிலாந்து பெண் போல நடித்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இணையதளம் மூலம் ஆட்களை சேர்த்து வந்தது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.
indian-women
இதையடுத்து, அபுதாபியில் இருந்து வெளியேற்றப்பட்ட அப்ஷா ஜபீன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் அவரது கணவர் தேவேந்திர குமார் என்கிற முஸ்தபா மற்றும் அவர்களுடைய 3 குழந்தைகளும் நாடு கடத்தப்பட்டனர்.துபாயில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஐதராபாத்து வந்து இறங்கியபோது அப்ஷா ஜபீனை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தனர்.

அப்ஷா ஜபீன் எப்படி சிக்கினார் என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விவரம்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர், சல்மான் மொகினுதீன். இவர், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் என்ஜினீயரிங் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதற்காக துபாய் வழியாக சிரியா நாட்டுக்கு செல்ல மொகினுதீன் முயன்று உள்ளார். இவர் விமானம் மூலம் துபாய் புறப்பட தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், துபாயில் வசிக்கும் நிக்கி ஜோசப் என்பவரை சந்திக்க செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், அவருடைய உதவியுடன் துருக்கி வழியாக சிரியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்ததாகவும் தெரிவித்தார்.

நிக்கி ஜோசப்புடன் ஒரு பேஸ்புக் கணக்கு வைத்திருந்ததையும், துபாய் வந்துவிட்டால் தன்னை சிரியாவுக்கு கொண்டு போய் சேர்த்துவிடுவதாக அவர் தெரிவித்தாகவும் விசாரணையின்போது மொகினுதீன் ஒப்புக்கொண்டார். நிக்கி ஜோசப்பை, தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்ததாகவும், அப்போது தன்னை அவர் இங்கிலாந்து பிரஜை என்று அறிமுகம் செய்து கொண்டதாகவும் மொகினுதீன் போலீசாரிடம் தெரிவித்தார். துபாயில் வசித்தபோது மெல்ல ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் நிக்கி தன்னை இணைத்துக் கொண்டதாகவும் விசாரணையின்போது மொகினுதீன் கூறியிருந்தார்.

இந்த தகவலை மத்திய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இங்கிலாந்து அரசுக்கு தெரிவித்தனர். மத்திய பாதுகாப்பு முகமை அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு பின்பு நிக்கி ஜோசப் இந்தியாவைச் சேர்ந்த பெண் என்பதும், அவர் அபுதாபியில் வசித்து வருவதும் கண்டறியப்பட்டது.மேலும், நிக்கி ஜோசப்பின் உண்மையான பெயர் அப்ஷா ஜபீன் என்பதும், இங்கிலாந்து பெண் என்ற போர்வையில் அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அப்ஷா ஜபீன் பற்றி அமீரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பு அவர், அபுதாபியில் கணவர், குழந்தைகளுடன் வசிப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவரும், அவருடைய குடும்பத்தினரும் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு முகமை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அபுதாபியில் அப்ஷா ஜபீன் வசிப்பதை கண்டுபிடித்ததும் அவரிடம் பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டார். ஐதராபாத் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை எங்களுடைய பிடியில் கொண்டு வந்தோம். விமான நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அப்ஷா ஜபீன் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது’’ என்று தெரிவித்தார். ஐதராபாத் போலீசார் கூறும்போது, ‘‘அப்ஷா ஜபீன், மொகினுதீன் வழக்கில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்’’ என்றனர்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு அப்ஷா ஜபீனும், மொகினுதீனும் இணைந்து சமூக ஊடகங்களின் வாயிலாக தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, பீகார் மற்றும் பல மாநிலங்களில் ஆட்களை சேர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

37 வயது அப்ஷா ஜபீன் சிறுவயதில் அபுதாபி சென்று அங்கு பள்ளி படிப்பை முடித்து உள்ளார். பின்னர் இந்தியா திரும்பிய அவர் ஐதராபாத்தில் உள்ள சதன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார்.ஐதராபாத்தில் தேவேந்திரகுமார் என்கிற முஸ்தபாவை திருமணம் செய்துகொண்டு அபுதாபி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!