“ஐயா.. தீர்ப்பை மாத்துங்கய்யா?” – உத்தரகாண்ட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடும் அரசு!

“ஐயா.. தீர்ப்பை மாத்துங்கய்யா?” – உத்தரகாண்ட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடும் அரசு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தும், ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு புத்துயிர் அளித் தும் உத்தரகாண்ட் ஐகோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் விரிவான வடிவம், அடுத்த சில நாட்களில்தான் வெளியாகும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்-முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.ஐகோர்ட்டின் தீர்ப்பின் முழு வடிவம் வராவிட்டாலும், தீர்ப்பின் முக்கிய அம்சத்தை அடிப்படையாக வைத்து, சுப்ரீம் கோர்ட்டை அதிவிரைவாக நாடி, தீர்ப்புக்கு தடை கோரப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
uttargahnad apr 22
முன்னதாக உத்தரகண்ட் மாநில அரசியலில் மற்றொரு திடீர் திருப்பமாக, அங்கு அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும்,வரும் 29ஆம் தேதி, ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென்றும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி, உத்தரகண்ட் சட்டப்பேரவையை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைத்ததை எதிர்த்து, அந்த மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி வி.கே. பிஷ்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவையில், கடந்த மாதம் 18ஆம் தேதி, ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, நிதி ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முயன்றபோது, அரசின் பெரும்பான்மை பலம் குறித்த பிரச்னை எழுந்தது. இந்தப் பிரச்னை எழுந்த 10 நாள்களுக்குள் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது. அத்துடன், உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு, வலுவான அடிப்படைக் காரணங்கள் எதுவுமில்லை. மேலும், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்கும் மத்திய அரசின் இந்தச் செயலை அனுமதித்தால் அது, ஜனநாயகத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் குலைப்பதாக அமைந்துவிடும். எனவே, உத்தரகண்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்படுகிறது.

இதையடுத்து, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெறும் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, வரும் 29ஆம் தேதி, சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, “உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தாற்காலிகத் தடை விதிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர் கோரினார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், “நீங்கள் (மத்திய அரசு) வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளுங்கள்’ எனத் தெரிவித்தனர்.

மேலும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் குறிப்பிட்டபோது, “கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான். இதன் மூலம் அவர்கள், தாங்கள் செய்த பாவத்துக்கான (கட்சித் தாவல்) விலையைக் கொடுத்துள்ளனர்’ என்றனர்.

Related Posts

error: Content is protected !!