எழுத்துப்பூர்வமான உத்தரவை மட்டுமே அதிகாரிகள் செயல்படுத்தணும்: பிரதமர் உத்தரவு

எழுத்துப்பூர்வமான உத்தரவை மட்டுமே  அதிகாரிகள் செயல்படுத்தணும்: பிரதமர் உத்தரவு

மத்திய மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பல்வேறு மந்திரிகள், தங்கள் துறைரீதியான பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக எழுத்துப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தயக்கம் காட்டி வருகின்றனர். மாறாக இந்த பணிகளுக்காக தனது அமைச்சக அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவை வழங்கி வருகின்றனர். மந்திரிகளின் உத்தரவை எழுத்துப்பூர்வமாக வாங்குவதில் சில அதிகாரிகள் உறுதியாக இருந்தாலும், பல நேரங்களில் மந்திரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. இதில் பல்வேறு முக்கியமான பணிகளும் அடங்குவதால் சில நேரங்களில் பிரச்சினை எழுகிறது. இந்தநிலையில் மத்திய அரசு துறைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் பிரதமர் அலுவலகம், மத்திய மந்திரிகளும், அமைச்சக அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அடிக்கடி சுற்றறிக்கைகளை அனுப்பி வருகிறது. அந்தவகையில் மத்திய மந்திரிகளின் வாய்மொழி உத்தரவு தொடர்பாகவும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
modi order oct 24
இந்த குறிப்பாணையில், ‘மத்திய மந்திரிகள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் வாய்மொழி உத்தரவுகளுக்கு அமைச்சக அதிகாரிகள் யாரும் பணியக்கூடாது. இந்த உத்தரவுகள் தொடர்பாக தங்கள் மேலதிகாரிகளின் எழுத்துப்பூர்வ கடிதம் பெற்ற பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

மந்திரிகள் அல்லது அவர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் வாய்மொழி உத்தரவை பெறும் அதிகாரிகள், அந்த உத்தரவு விதிமுறைகளின் அடிப்படையில் இருந்தால் அது குறித்து அமைச்சக செயலாளர் அல்லது துறை தலைவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அவர்கள் இதற்கு அனுமதி அளித்தால் அந்த உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும்.

ஆனால் அந்த உத்தரவுகள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தால் அது குறித்து அமைச்சக செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

எனினும் மத்திய மந்திரிகளின் வெளிநாட்டு பயணம் அல்லது நோய்வாய்ப்பட்டு இருத்தல் மற்றும் அவசர காலங்களில், அந்த மந்திரியின் தனிச்செயலாளர் மூலம் எழுத்துப்பூர்வமாக உத்தரவு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட அந்த மந்திரி மீண்டும் பணிக்கு திரும்பியபின் இந்த உத்தரவு குறித்து அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பெற வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Related Posts

error: Content is protected !!