எப்போதைக்குமான கால்பந்து வீரர் மரடோனா!

எப்போதைக்குமான கால்பந்து வீரர் மரடோனா!

கால்பந்து சரித்திரத்தில் சரித்திரம் படைத்தவர் மரடோனா. அந்தச் சரித்திரப் பக்கங்களில் அவர் சரிவைச் சந்தித்தபோதும் ரசிகர்கள் இதயத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் மரடோனா.1986-ம் ஆண்டு உலகக் கால்பந்து போட்டி மெக்சிகோவில் தொடங்கியது. ஜூன் 22-ந்தேதி கால்பந்து போட்டியின் கால் இறுதிப் போட்டி. அந்த நாள் ஒரு இனிய நாள். அர்ஜென்டினா அணியின் கேப்டன் மரடோனா. இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் இறங்கினார். தொலைக்காட்சி பெட்டியின் அருகே இருந்து அன்றைய ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் போட்டியில் ஆதி முதல் அந்தம் வரை அவரே ஆதிக்கம் செலுத்தினார். அறிவிப்பாளரின் வாயில் இருந்து ‘மரடோனா’ ‘மரடோனா’ என்ற பெயரைத் தவிர மறந்தும் வேறெந்த பெயரும் வரவில்லை. இங்கிலாந்து அரண் ஆட்டக்காரர்கள் அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்து தடுத்து நிறுத்த முயன்ற போதெல்லாம், அதைத் தகர்த்து முன்னேறினார்.

கண் கொத்தி பாம்பு போல அவரைக் கண் கொட்டாமல் கூர்ந்து நோக்கினாலும், கண் சிமிட்டும் நேரத்தில் அவர்களைக் கடந்து சென்றார். மந்திரக் கால்களுக்குச் சொந்தக்காரரோ மரடோனா என்பதே எல்லோரது எண்ணமாக இருந்தது. பரபரப்பான அவரது ஆட்டத்தின் மூலம் உலகின் பலகோடி பேர் அவரது பரம ரசிகர்கள் ஆனார்கள்.அந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டு ‘கோல்’களே சர்ச்சைக்கு வித்திட்டது; வெற்றிக்கும் வித்திட்டது; அவர் அடித்த முதல் ‘கோல்’ செப்படி வித்தை என்று சொல்வதுபோல அமைந்தது தலையால் முட்டித் தள்ள வேண்டிய பந்தை, கைகளால் அவர் கோலுக்குள் அடித்தார். அது ரசிகர்களின் கண்களுக்கு மட்டுமல்ல, நடுவரின் கண்களுக்கும் தெரியவில்லை. இங்கிலாந்து அணியினர் ‘குய்யோ முறையோ’ என்று கூப்பாடு போட்டனர். அந்தக் கோல் மரடோனாவின் கையில் பட்டுச் சென்றதை மறு ஒளிபரப்பும் மறைக்காமல் தெளிவுபடுத்தியது.

அவரது ஆட்டம் மட்டுமல்ல, பேச்சும் ‘களை’ கட்டியது. ‘முதல் கோலை எப்படி அடித்தீர்கள்?’ என்று நிருபர்கள் அவரிடம் வினவியபோது, ‘கடவுளின் கரம் விளையாடியது’ என்று உண்மையை, மறைக்காமல் மறைமுகமாகக் கூறினார். சற்று நேரத்தில் மரடோனா அடித்த மற்றொரு கோல், வியப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்துச் சென்றது. தனது பகுதியின் பாதி இடத்தில் இருந்து மரடோனா பந்தைப் பெற்று, வளையம் போல அமைத்து பதினோறு தொடுதல்கள் மூலம் மைதானத்தின் நீளத்தில் பாதி அளவு முன்னேறி ஐந்து இங்கிலாந்து வீரர்கள் மற்றும் கோல் கீப்பரைத் தாண்டிச் சென்று 60 மீட்டர் தூரத்தில் இருந்து கோல் அடித்தார். அப்போது மைதானத்தில் ஆரவாரம் அடங்க அரை மணி நேரம் ஆயிற்று.

பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிஃபா) நடத்திய ஆன்லைன் வாக்கெடுப்பில், உலகக் கோப்பை வரலாற்றில் நூற்றாண்டின் சிறந்த கோல் என்று இந்த கோல் தேர்வு செய்யப்பட்டது. அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் ‘அஸ்டெகா ஸ்டேடியம்’ உறுப்பினர்கள் ‘நூற்றாண்டு கோல்’ என்ற சிலையை உருவாக்கி அதை ஸ்டேடியத்தின் நுழைவு வாயிலில் வைத்துள்ளனர்.

இந்த கால் இறுதிப் போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை அர்ஜென்டினா தோற்கடித்தது. பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திலும் மரடோனா இரு கோல்கள் அடித்து வெற்றிக் கொடி நாட்டினார். மேற்கு ஜெர்மன் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3:2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் விண்ணதிர கரஒலி எழுப்பினார்கள். கால்பந்து வரலாற்றில் சிறப்பு மிக்க வீரர்களில் ஒருவராக நினைவில் நிற்கும் வண்ணம் எங்கள் கண்ணெதிரே உலகக் கோப்பை டிராபியை மரடோனா தூக்கிக் காட்டினார்.

உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரராக அறியப்பட்ட மரடோனாவின் இளம் வயது வாழ்க்கை வறுமையில் கழிந்தது.  இவர் முதலில் பிரபலமாகாத கால்பந்து குழுவில் சேர்ந்து ‘தங்கச் சிறுவன்’ என்ற அடைமொழியுடன் பிரபலமானார்.  அர்ஜென்டினா நாட்டு தேசிய அணி, 16 வயதில் அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. சிறுவயதிலேயே தேசிய அணியில் சேர்ந்த வரலாற்றுச் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் இவர் 10-ம் நம்பர் பனியனை அணிந்து கொண்டு 16-வது வயதில் ஹங்கேரிய அணிக்கு எதிரான போட்டியில் முதன் முறையாக சர்வதேச போட்டியில் பங்கு கொண்டார். 18-வது வயதில் அர்ஜென்டினாவுக்காக உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டார். சோவியத் யூனியன் அணிக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற காரணமாக இருந்தார்.

ஹாம்டென் பார்க் என்ற இடத்தில் நடைபெற்ற ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக 1979-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி விளையாடி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்ற போட்டியில் தனது முதல் முதுநிலை சர்வதேச கோலைப் பதிவு செய்தார். மரடோனாவின் வருகைக்கு முன்பு வரை கால்பந்து சக்கரவர்த்தியாக இருந்தது, பீலேதான். மரடோனா வந்த பிறகு, சிறந்த ஆட்டக்காரர் யார் பீலேவா? அல்லது மரடோனாவா? என்ற வினாவுக்கு இன்றும் விடை கிடைக்கவில்லை.
இருந்தபோதிலும், நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்காக இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் மரடோனா முதலாவதாக வந்து இந்த விருதை பீலேவுடன் பகிர்ந்து கொண்டார்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மரடோனாவின் செயல்பாடுகள் சிறப்பானவை. 1978-ம் ஆண்டு வயது குறைவு என்பதற்காக உலகக் கோப்பை அணியில் இருந்து அர்ஜென்டினா பயிற்சியாளரால் வெளியேற்றப்பட்டார். 1982-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் மரடோனா இடம் பிடித்தாலும், அர்ஜென்டினா பிரேசிலுடன் மோதி, தோல்வியடைந்து வெளியேறியது. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியை வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்தார். 1990-ம் ஆண்டு தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அடுத்த உலகக் கோப்பை அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. 1994-ம் ஆண்டு அவர் போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், உலகக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எந்த பியூனோஸ் ஏரிஸ் நகரில் குப்பைக் கூளங்கள் நிறைந்த தெருக்களில் பேப்பரைப் பந்தாகச் சுருட்டி விளையாடினாரோ, அதே ஊரில் உள்ள பொம்போனேரா ஸ்டேடியத்தில் மரடோனா இறுதியாக விளையாடினார். 50 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் கால்பந்து போட்டிகளில் இருந்து விடையும் பெற்றார். அவர் விடைபெற்றது, 2001-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி. (10 என்ற எண்ணுக்கும் மரடோனாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் எப்போதும் அணிவது 10-ம் நம்பர் பனியன்தான்)

மரடோனா விடைபெறும்போது அவர் அழ, அவருடைய மகள்கள் தால்மா, ஜியானினா ஆகியோர் அழ, அருகில் இருந்த மக்கள் அழ, இதைத் தொலைக்காட்சியில் கண்ட கோடிக்கணக்கான ரசிகர்களும் அழுதார்கள்.

இவர் எப்போதைக்குமான கால்பந்து வீரர் என்று இப்போதைக்கும் பேசப்படுகிறார்.

இறுதியாக ஒன்று, போதை மருந்துக்கு மரடோனா அடிமையாகிப் போயிருக்கலாம். ஆனால், அர்ஜென்டினா மக்களும், என் போன்ற லட்சக்கணக்கான ரசிகர்களும் அவர் மீது கொண்ட போதையில் இருந்து இன்னமும் மீளவே இல்லை.

பாத்திமா மைந்தன்

Related Posts

error: Content is protected !!