ஊடகங்களில் தமிழர்கள் தேவை! By பிரியா தம்பி

ஊடகங்களில் தமிழர்கள் தேவை! By பிரியா தம்பி

சமீப காலமாக தமிழ் ஊடகங்களில் புதிதாக வேலைக்கு சேர்வதில் யாருக்கும் பெரிய ஆர்வமே இல்லை.. புதிதாக தொலைக்காட்சியோ, செய்தித்தாளோ ஆரம்பித்தால் வேறு பத்திரிகைகளில் அரைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் தாவ வேண்டியிருக்கிறது.. அப்படி புதிதாக அரிதாக வருபவர்களுக்கும் எழுதக் கூட தெரிந்திருப்பதில்லை.. எழுதவே தெரியாதவர்களிடம் அரசியல் அறிவை எதிர்பார்ப்பது வீண்…
journalism feb 22
எனக்குத் தெரிந்து நம் ஊரில் மீடியாவில் வேலை தொடர்பான படிப்புகளில் சேர்வதற்கும் யாருக்கும் ஆர்வம் இல்லை. குடும்பங்களும் அது தொடர்பான படிப்புகளுக்கு அங்கீகாரம் தருவதில்லை.. தப்பித்தவறி ஜெர்னலிசம், விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பவர்களும் சினிமாவிற்கு போய் விடுகிறார்கள்… அல்லது ஊடகங்களில் டெக்னிக்கல் துறையில் வேலை பார்க்கிறார்கள்…. ஆங்கில ஊடகங்களில் நிலை இன்னமும் மோசம்.

ஆங்கில ஊடகங்கள்ல் வேலை பார்க்கும் தமிழர்கள் யாரென பார்த்தால் மிக நிச்சயம் அவர்கள் பார்ப்பனர்களாக இருப்பார்கள்… ‘’அய்யய்யோ… நான் சென்னை அய்யங்கார் பொண்ணு’’ என அளக்கும் ஏராளம் பெண்களை செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தித்திருக்கிறேன்… அவர்களின் இந்த அராஜகத்தை உடைக்கும் அவசியம் இப்போது இருக்கிறது… (இதைத்தான் பெரியார் வாழ்நாள் எல்லாம் கத்திக் கத்தி சொல்லிக் கொண்டிருந்தார்)

அதிகாரத்தில் போய் உட்காருவதில் நாம் தொடர்ந்து கோட்டை விடுகிறோம்.. இதற்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பித்து விட முடியாது… கிடைத்த துறை கேபினட்டில் கிடைக்கும் என்கிற நிலையில் கூட சம்பாதிக்கிற துறையாகத் தான் தேர்வு செய்கிறது நம் அரசியல் கட்சிகள். முடிவெடுக்கிற இடத்தில் போய் உட்காருவதே இல்லை..

அரசியல் கட்சிகளை திருத்த முடியாது… ஆனால் ஊடகங்களை நம்மால் கைப்பற்ற முடியும்.. இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் பத்திரிகைகள் முழுக்க பார்ப்பன எழுத்துக்களால் தான் நிறைந்திருந்தன.. இன்றைக்கு அந்த நிலை மாறிவிடவில்லையா? அதேபோல் இதுவும் சாத்தியம் தான்..

மலையாளிகள் அதை தொடர்ந்து செய்கிறார்கள்.. தமிழ் ஊடகங்களில் கூட நிர்வகிக்கும் இடங்களில் அவர்களின் பங்கு கணிசமானது… ’’சேனல்களில் நேயர்கள் எண்ணிக்கையை விட நாயர்கள் எண்ணிக்கை அதிகமா இருக்கு’’ என்கிற கமெண்ட் கூட இங்கு உண்டு.. (சொன்னவர் பெயர் மறந்து விட்டேன்)

தேசமெங்கும் நம் குரல், நம் நியாயம் ஒலிக்க வேண்டுமானால் ஆங்கில ஊடகங்களில் தமிழர்கள் அதிக அளவு இடம்பெற்றாக வேண்டும்.. வீட்டில் எல்லாப் பிள்ளைகளும் இன்ஜினியராகியே வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் மீடியாக்களில் அவர்கள் பங்கு பெற ஊக்கமளிக்க வேண்டும்.. கூடவே அவர்களுக்கு அரசியல் அறிவையும் புகட்ட வேண்டும்… இல்லையெனில் ஜாதியால் பார்ப்பனர் இல்லையெனினும் புத்தியால் அவ்வாறு ஆகிவிடுவார்கள்…

முன்பெல்லாம் மீடியாவில் வேலைக்கு சேர்ந்தால் பிழைக்க முடியாது என்கிற நினைப்பு பரவலாக உண்டு.. ஜோல்னாப் பை, இடுங்கிய முகம், தாடி என பிச்சைக்காரனை போல செய்தியாளர்களை சினிமா காட்டியதன் விளைவு இது… இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை.. அப்படித்தான் என்று வாதிடுபவர்கள் கோ ஸ்வாமிகளையும், பர்கா தத்களையும் நினைத்துக் கொள்ளலாம்..

இங்கு நம் நியாயத்தை நாமே தான் சொல்லியாக வேண்டும்…

@பிரியா தம்பி

error: Content is protected !!