உன் சமையலறையில் – விமர்சனம்!

உன் சமையலறையில் – விமர்சனம்!

சாப்பாடும், திரைப்படமும் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டையும் பல பேர் இணைந்துதான் உருவாக்குகிறார்கள். சாதம் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு சாப்பாடு திருப்தியாக இருக்கும். அதே போல்தான் திரைப்படமும், கதையிலிருந்து சின்ன நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சரியாக இருந்தால்தான் ரசிக்க முடியும்.‘தோனி’ படத்திற்குப் பிறகு பிரகாஷ் ராஜ் இயக்கியிருக்கும் அடுத்த படம்தான் ‘உன் சமையலறையில்’. மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். படத்தில் கதை என்பது ஒரு வரியில் இருந்தாலும், அதை சுவாரசியமான காட்சிகள் மூலம் திரைக்கதைப்படுத்துதலே ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. சுவாரசியமான காட்சிகள் இல்லாத இந்த ‘உன் சமையலறையில்’ உப்பும், உறைப்பும் குறைவாகவே இருக்கிறது.
Un-Samayal-Arayil-Movie-
பிரகாஷ்ராஜ் 40 வயதைக் கடந்த ஒருவர், தொல்லியல் துறையில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். ஏதோ காரணத்தால் அவருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போயிருக்கிறது. இதோ பால் முதிர்கன்னியாக இருப்பவர் சினேகா. 30 வயதைக் கடந்த இவருக்கும் திருமணம் ஆகாமலே இருக்கிறது. ஒரு ‘ராங்-காலில்’ இருவரும் பேசிக்…சாரி…திட்டிக் கொள்கிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பிக்கிறார்கள். வெகு நாட்கள் சந்திக்காமலே இருக்கும் இவர்கள், ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்க முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், ஒருவித பயமும், தயக்கம் இருவரையும் ஆட்டிப் படைக்க, பிரகாஷ் ராஜ் அவருடைய அக்கா மகன் தேஜஸையும், சினேகா அவருடன் தங்கியிருக்கும் சம்யுக்தாவையும் அவரவர் பெயரைச் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள். அதாவது பிரகாஷ்ராஜ் பெயரில் தேஜஸ் போகிறார், சினேகா பெயரில் சம்யுக்தா போகிறார். ஆனால், தேஜஸும், சம்யுக்தாவும் காதலர்களாகி விடுகிறார்கள். அதன் பின் பிரகாஷ்ராஜ், சினேகா இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை.

நடுத்தர வயது கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்திப் போயிருக்கிறார் பிரகாஷ்ராஜ். வில்லத்தனம் செய்யும் போது வரும் கொஞ்சம் ஓவர் நடிப்பையெல்லாம் இந்த காளிதாசன் கதாபாத்திரத்தில் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கனகச்சிதம். அந்த வயதிலும் காதலைக் காட்டிக் கொள்வதில் இருக்கும் தயக்கம், ஒருவித வெட்கம், என அனைத்திலுமே ஜொலிக்கிறார். ஆனால், அவ்வளவும் விழலுக்கு இறைத்த நீர் போலாகிவிட்டது.

சினேகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரைத் தவிர அந்த கதாபாத்திரத்தில் வேறு யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. கல்யாணமே நடக்கலைன்னா தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிடறேன்…என சொல்லும் காட்சியில் இன்னும் கல்யாணமே ஆகாமல் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் கன்னிப் பெண்களின் நிலை கண் முன்னே வந்து போகிறது.

இளம் காதல் ஜோடிகளாக தேஜஸ், சம்யுக்தா…தேஜஸ் தோற்றத்தில் அப்படி ஒரு தெலுங்கு வாடை…முயன்றால் தெலுங்கில் தேறலாம். சம்யுக்தா அழகாக இருக்கிறார். அழகாகப் பார்க்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் வலம் வருவார்.
தம்பி ராமையா, ஊர்வசி, குமரவேல், ஐஸ்வர்யா என ஒரு சில துணைக் கதாபாத்திரங்கள்தான் படத்தில் உள்ளன. அந்த ஆதி வாசி தலைவர் கதாபாத்திரம் படத்தில் எதற்கென்றே தெரியவில்லை.

பிரகாஷ் ராஜ், சினேகா வீடுகள் மட்டும் மாறி மாறி வருவது அலுப்பைத் தட்டுகிறது. ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ என பிரமாதமாக அமைந்துள்ளது. சமீப காலங்களில் பார்த்து ரசித்த அழகான ஒளிப்பதிவு.

இளையராஜாவின் இசையில் ‘இந்த பொறப்புதான்..’ பாடல் காதுக்கு மட்டுமில்லை, நாவுக்கும் இனிமையாக அமைந்துள்ளது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான்.
‘கிளாஸ்’ பட வரிசையில் இடம் பெறும்…ஆனால், இப்போது ‘மாஸ்’ படங்களைத்தானே ரசிகர்கள் எதிர்பாரக்கிறார்கள்.

நன்றி :http://www.screen4screen.com/un-samayal-arayil-review/

error: Content is protected !!