இரு மொழிபெயர்ப்புகள் : உடல் என்னும் எந்திரம் / டாக்டர் கோட்னிஸ்

இரு மொழிபெயர்ப்புகள் : உடல் என்னும் எந்திரம் / டாக்டர் கோட்னிஸ்

இரு மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்து சில பல மாதங்களாகிவிட்டன. இவற்றை இரண்டிரண்டு பிரதிகளாக எல்லா பத்திரிகை அலுவலகங்களுக்கும் அனுப்பியும் இருக்கிறார்கள் என்.சி.பி.எச். பதிப்பகத்தினர். ஊஹூம், ஒன்றில்கூட, ஒருவரி விமர்சனம்கூட வரவில்லை. வரப்பெற்றோம் என்றொரு தகவல்கூட இடம் பெறவில்லை. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதே இதழியல் துறைக்குள் உழன்றுகொண்டிருந்தபோதிலும், என் னுடைய மொழி பெயர்ப்பில் இப்படி இரு நூல்கள் வெளிவந்திருக்கின்றன என்ற தகவலை – – நூல்கள்சார் பகுதி ளில் பணிபுரியும் – ஒரே ஒருவருக்குக்கூட நான் தெரிவிக்கவில்லை. இனியும் இவ்விரு நூல்களைப் பற்றி  நாளிதழ் களில், வார இதழ்களில் ஏதேனும் வருமா? நூல் விமர்சனங்களைப் போல வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? ஒருவேளை இவ்விரு நூல்களும் விமர்சனம் செய் வதற்கான தகுதியைப் பெற்றவை யில்லையா? எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனாலும், மனசு கேட்கவில்லை. நண்பர்களுக்கு மட்டுமேனும் தெரிவிக்கலாமே? என்று இரு நூல்களைப் பற்றியும் இங்கே அறிமுகமாக எழுதிவிட்டேன்.
edit oct 31
உடல் என்னும் எந்திரம்

ரஷிய மூலம் – அலெக்ஸி டோரோகோவ்

ஆங்கிலம் வழி தமிழில் : எம். பாண்டியராஜன்

தோழர் சபாபதியின் பாவை பப்ளிகேஷன்ஸ் அச்சகத்தில்தான் You and Your Body என்ற பழைய ஆங்கில நூலைப் பார்த்தேன். ரஷிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அத்தனையும் வண்ணப் படங்கள். குழந்தைகளுக்காகவே. புரட்டிய கணமே மனதில் தோன்றியது, இது ஏன் இன்னமும் தமிழில் வரவில்லை? இதை நாமே மொழிபெயர்த்தால் என்ன? விசாரித்த வரைக்கும் தமிழில் வந்ததாகத் தெரியவில்லை.

சில மாதங்களிலேயே தொடங்கி மொழிபெயர்த்தும் முடித்துவிட்டேன். நண்பர் அழகுவுடன் சேர்ந்து நாமே பதிப்பித்தால் என்ன? என்று மனம் ஆசைப்பட்டது. வண்ணப் படங்களையும் அச்சிட்டால் செலவுக் கணக்கு எங்கேயோ சென்றது. பின்னர், அழகே வெளியிடுவதென்றும் திட்டமிடப்பட்டது. அங்கேயும் செலவுதான் பிரச்சினை. கடைசியாக, எப்படியாவது புத்தகம் வெளிவந்தால் போதும் என்று தோன்றிவிட்டது. என்.சி.பி.எச்.சில் வெளியிடுவதென முடிவானது. மறுபடியும் எக்குத்தப்பான செலவுதான் பிரச்சினை. நூல் வெளிவந்தால் போதுமென எனக்குத் தோன்றிவிட்டது. படங்களைக் கறுப்பு வெள்ளையில் வெளியிட்டால் செலவு குறையும் என்பதால் சமரசம் செய்துகொள்ள வண்ணங்கள் தொலைக்கப்பட்டன.சென்னையில் இந்தாண்டுத் தொடக்கத்தில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட நூறு நூல்களில் டாக்டர் கோட்னிஸுடன் உடல் என்னும் எந்திரமும் இடம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் இவ்விரு நூலின் பிரதிகளும் முழு அளவில் கடைகளுக்கு வந்திருக்கின்றன, வாசகர்கள் முன்.

உடல் என்னும் எந்திரம் நூலில் இடம் பெற்றுள்ள : 

மொழிபெயர்ப்பாளன்

குறிப்புகள்

உடல் என்னும் எந்திரம் என்னும் இந்த நூல், குழந்தைகளுக்கானதே, ஆனால், பெரியவர்கள் படிக்கக் கூடாதது அல்ல. ஏனெனில், இவற்றில் பல விஷயங்கள் பெரியவர்களும் அறியாதனவே.இந்த ஆங்கில நூலைக் கண்டெடுத்துப் படித்தபோது, கலைந்துபோன சோவியத் ஒன்றியத்தைப் பற்றிய துயரம்தான் மனதை அழுத்தியது.

முதன்முதலில் ரஷிய மொழியில் எழுதப்பட்ட இந்த நூல், பின்னர், சோவியத் ஒன்றியத்தின் பிற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டிருக்கிறது.

`சின்னக் குழந்தைக்குச் சொல்லித் தருவதைப் போல’ என்பார்களே, அதற்காகவே, அதுபோலவே எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல்.

ஆனால், உலகின் பல்வேறு மொழிகளிலும் `குறைந்த விலையில் தரமான நூல்கள் – மக்களுக்காக’ என்ற இலக்குடன் வெளியிடப்பட்ட இத்தகைய நூல்கள் யாவும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டன.

அலெக்ஸி டோரோகோவ் எழுதி, `நீயும் உன் உடலும்’ (யூ அன்ட் யுவர் பாடி) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான இந்த நூல், தமிழுக்காக `உடல் என்னும் எந்திரம்’ என்றாகியிருக்கிறது.

எளிமைப்படுத்துதல் என்ற பெயரில் மூல நூலிலிருந்து எந்த வகையிலும் விலகிச் சென்று விடாதவகையில், இந்த மொழிபெயர்ப்பில் இயன்றவரையிலும் எளிய நடையே – குழந்தை களுக்குப் புரிய வேண்டியதுதான் முக்கியம் – பின்பற்றப்பட்டுள்ளது. மறுவாசிப்பில் இன்னமும்கூட எளிமைப்படுத்த முயல வேண்டும் என்று தோன்றியது.

மூலத்தில் இடம் பெற்றுள்ள ரஷிய அல்லது ஐரோப்பியச் சூழலையொட்டிய சில பாராக்கள் மட்டும் மொழிபெயர்ப்பில் தவிர்க்கப்பட்டுள்ளன.

நூலில் தவிர்க்க இயலாத அல்லது தவிர்க்க வேண்டாத இடங்களில் மட்டும் – ஆக்சிஜன், ஹார் மோன்கள் – ஆங்கிலச் சொற்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன.

நூலில் ஒவ்வோர் இயலின் முடிவிலும் `தெரியுமா?’ என்ற துணைத் தலைப்புடன் இடம் பெறும் தகவல்கள் யாவும் உடற்கூறு சார்ந்த பிற நூல்களிலிருந்து திரட்டப்பட்டவை.

இந்த மொழிபெயர்ப்பை மேம்படுத்தக் கூடிய கருத்துகளைக் குழந்தைகளிடமிருந்தும் பெரியவர் களிடமிருந்தும் வரவேற்கிறேன். அடுத்தடுத்த பதிப்புகளில் நூலைச் செம்மைப்படுத்துவதில் உதவியாக இருக்கும்.

அறிவியல் வேறு, தமிழ் வேறு, குழந்தைகளுக்காக எழுதுவது வேறு என்ற நிலையில் குழந்தைகளுக்காக அறிவியல் நூலொன்றைத் தமிழில் மொழிபெயர்த்தது மகிழ்வளிக்கும் பேரனுபவம். மேலும் மேலும் இத்தகைய நூல்களை மொழிபெயர்க்கத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் குறைவான விலையில் மேலும் பல்லாயிரம் பேருக்கு – குறிப்பாக, ஆங்கிலம் அறியாத தமிழ்க் குழந்தைகளுக்கு – உடல் என்னும் எந்திரத்தையும் இன்னும் பிற அறிவியல் நூல்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது மட்டுமே இந்த மொழிபெயர்ப்பின் நோக்கம். வெற்றியடையும் என்றே நம்புகிறேன்.

*
டாக்டர் கோட்னிஸ் –

சீனத்தில் உறங்கும் இந்திய வித்து
ஷங் ஷியன்குங்

தமிழில் : எம். பாண்டியராஜன்

தற்செயலாகப் பழைய புத்தகக் கடையொன்றில், சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஆங்கில நூலைக் கண்டெடுத்தேன். ஏதோ சீனாவுக்குச் சென்ற இந்தியாக்காரர் என்ற அளவில்தான் டாக்டர் கோட்னிஸ் என்ற சொல் எனக்கு அப்போது அறிமுகமாகியிருந்தது.

குழந்தைகளை இலக்காகக் கொண்டு படங்களுடன் எழுதப்பட்டிருந்த புத்தகத்தைப் படிக்கப் படிக்க மிகவும் வியப்பாக இருந்தது.

எப்படியாவது இதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஆவல். ஆனால், ஏதேதோ காரணங்களால் நீண்ட நாள்களாக, ஆண்டுகளாக, நிறைவேறவில்லை. பின்னர், திடீரெனத் தோன்றியதும் ஒரு நாளில் தொடங்கி, விறுவிறுவென மொழிபெயர்த்து முடித்துவிட்டேன். ஆனால், நூல் வடிவம் பெறுவதில் ஓராண்டுக்கும் அதிகமாகத் தாமதம்.

ஆங்கிலத்தில் கிடைத்த புத்தகம் பற்றியும் டாக்டர் கோட்னிஸ் பற்றியும் முதன்முதலில் என் அப்பாவிடம் சொன்னபோது, அவருடைய பதில், எனக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது, `ஆமாம்ப்பா, பெரிய ஆள் கோட்னிஸ். அப்பவே அவரைப் பற்றி ஹிந்தியில் சாந்தாராம் படமெல்லாம் எடுத்திருக்கிறார்’ என்றார். அந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறது!

தோழர் எஸ்.வி. ராஜதுரையிடம், இந்த நூலை மொழிபெயர்ப்பது பற்றித் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த நூலில் டாக்டர் நார்மன் பெத்தூன் பற்றி வருகிறதா? என்றார். ஆம், வருகிறது என்றேன். கோட்னிஸ் போலவே கனடாவிலிருந்து சீனா சென்று களத்தில் உயிர் துறந்தவர் டாக்டர் நார்மன் பெத்தூன். பெத்தூன் பற்றி ஆங்கிலத்தில் மிகச் சிறந்த நூலொன்று என்னிடம் இருக்கிறது. அனுப்புகிறேன். படித்துவிட்டுத் தமிழில் நல்லதொரு புத்தகத்தை எழுதப் பாருங்கள் என்றார். இன்னமும் புத்தகத்தைத் தோழர் அனுப்பித் தரவில்லை.

ஆங்கில நூலைப் பார்த்த நாள் தொடங்கி, இன்று வரையிலும் நான் பார்த்த, பேசிய தீவிரமான சகாக்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரிடம் கோட்னிஸ் பற்றிப் பேசாமல் இருந்ததில்லை.

எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இங்கே மக்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள்?

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு கோட்னிஸ் பற்றி என்ன தெரியும்? எப்படித் தெரியும்? அதுவும் இணையம் அறியா, கிராமப்புற, தமிழ்க் குழந்தைகளுக்கு? எப்படியோ சற்றுத் தாமதமானாலும் தமிழில் கோட்னிஸ் பற்றிய நூல் வெளிவந்துவிட்டது.

டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ்:

1938 செப்டம்பரில் ஜப்பானுக்கு எதிரான தற்காப்புப் போரில் சீன மக்களுக்கு உதவுவதற்காக சீனாவுக்குச் சென்ற மருத்துவக் குழுவொன்றில் இணைந்துகொண்ட இந்திய டாக்டர்களில் ஒருவர் டாக்டர் கோட்னிஸ்.

சீனாவில் அவர் வாழ்ந்த ஐந்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் சிகிச்சை அளித்தார்.

அளவுக்கு அதிகமான வேலை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாகப் போர்முனையில் உயிரிழந்த அவர், சீனாவின் தேசிய விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.

டாக்டர் கோட்னிஸின் துணிச்சல், புரட்சிகர உணர்வு மற்றும் சர்வதேசிய பார்வைக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது இந்த நூல்.

[உடல் என்னும் எந்திரம் – ரஷிய மூலம் – அலெக்ஸி டோரோகோவ், ஆங்கிலம் வழி தமிழில் : எம். பாண்டியராஜன், விலை ரூ. 140/- * டாக்டர் கோட்னிஸ் – சீனத்தில் உறங்கும் இந்திய வித்து – ஷங் ஷியன்குங், ஆங்கிலம் வழி தமிழில் : எம். பாண்டியராஜன், விலை ரூ. 115 * பதிப்பு – நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை – 600 098, தொலைபேசி – 26241288]

error: Content is protected !!