இன்று ஐ.பி.எல். தொடக்க விழா – அபுதாபியில் கோலாகல ஏற்பாடு

இன்று ஐ.பி.எல். தொடக்க விழா – அபுதாபியில் கோலாகல ஏற்பாடு

2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இப்போட்டிகளின் தொடக்க விழாவும் இரவு விருந்துடன் கூடிய ஸ்பெஷல் நிகழ்ச்சி அபுதாபியில் இன்று நடக்கிறது. இதில் இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோரின் நடனம் இடம் பெறுகிறது.
IPL 2014 Season 7
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் முதல் கட்ட (இருபது) லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது.எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் மே 2-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. அபுதாபியில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வழக்கமாக ஐ.பி.எல். போட்டியின் தொடக்க லீக் ஆட்ட மோதலுக்கு முந்தைய நாளில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறும். பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான 7-வது ஐ.பி.எல். போட்டியில் கோலாகலமான தொடக்க விழா நிகழ்ச்சி கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இருப்பினும் 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) அபுதாபியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான இரவு விருந்து நடைபெறுகிறது. இதில் எல்லா அணியின் வீரர்களுடன், உரிமையாளர்களும் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான ஷில்பா ஷெட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தி நடிகையுமான பிரீத்தி ஜிந்தா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் இன்னிசை விருந்துடன், இந்தி நடிகைகள் மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே ஆகியோர் இந்தி பாடல்களுக்கு நடனமாடி கலக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கானும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!