’இந்தியாவின் மகள்’ – டாக்குமெண்டரி! ஆதரவும் : எதிர்ப்பும்!

’இந்தியாவின் மகள்’ – டாக்குமெண்டரி! ஆதரவும் : எதிர்ப்பும்!

நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட ’இந்தியாவின் மகள்’ஆவணப் படத்தை இணையதளத்திலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ வெளியிட தடை வித்தித்து டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற குற்றவாளியின் பேட்டியை ஒளிபரப்ப பி.பி.சி.க்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு பாலிவுட் சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
nirbhayamar6
‘மத்திய அரசின் தடை நடவடிக்கை, பூனை தனது கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பதுபோல உள்ளது’ என்று அனுராக் பாசு கூறியுள்ளார். ‘‘இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம், ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் விழுந்த அடி’’ என்று இந்திப்பட இயக்குநர் அபிஷேக் கபூர் கூறியுள்ளார்.

‘பேட்டியை ஒளிபரப்ப தடை விதிப்பது பற்றி உடனடியாக முடிவு எடுத்த மத்திய அரசு, அந்த கற்பழிப்பு குற்றவாளியை 3 ஆண்டுகளாக உயிருடன் வைத்திருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டியதுதானே’ என்று இயக்குநர் புனித் மல்கோத்ரா கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த், ‘அமெரிக்க ராணுவத்தில் நடந்த கற்பழிப்பு பற்றியோ, கத்தோலிக்க திருச்சபையில் நடந்த கற்பழிப்பு பற்றியோ எடுக்கப்படும் படங்கள் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் நடந்த கற்பழிப்பு பற்றிய படத்துக்கு தடை விதிக்கப்படுவது ஏன்’ என்று கேட்டுள்ளார்.

‘பேட்டி அளித்த அந்த மிருகத்தை தண்டிப்பதற்கு பதிலாக, பேட்டி ஒளிபரப்புவதை தடை விதிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவது கேலிக்கூத்தாக உள்ளது’ என்று நடிகை சோனல் சவுகான் கூறியுள்ளார்.

நடிகை டிவிங்கிள் கன்னா கூறுகையில், ‘கருவில் உள்ள பெண் குழந்தையை அழிப்பதில் இருந்து, பெண்களை கற்பழித்து கொல்வதுவரை நடக்கிறது. நாளைய ஆண்களை நாங்கள்தான் வளர்த்து வருகிறோம். எனவே, ஆண்களின் மனோபாவம் மாற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஆவணப்படங்கள், உண்மையை தெரிவிப்பவை. அந்த உண்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும்’ என்று குணச்சித்திர நடிகர் போமன் இரானி தெரிவித்துள்ளார்.

பேட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு மத்திய உள்துறை மந்திரிக்கு நடிகர் ரன்வீர் ஷோரே வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த ஆவணப்படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எழுத்தாளர் சேட்டன் பகத் கூறியுள்ளார்.

முகேஷ் சிங் பேட்டி குறித்து கருத்து தெரிவித்து உள்ள நடிகை டாப்ஸி இவனை போன்றவர்கள் திருந்த போவது இல்லை இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது என் கூறி உள்ளார்.டாப்சி,” “நான் அந்த பேட்டியை படித்த பிறகு பேசவே முடியவில்லை முகேஷ்சிங் கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடவுள் என்னை ஒரே ஒரு கொலை செய்ய அனுமதித்தால் நானே அந்த கற்பழிப்பு குற்றவாளியை கொலை செய்து என் கோபத்தை தீர்த்துக் கொள்வேன். குற்றம் செய்தவர்கள் திருந்த வேண்டும் என்றுதான் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் முகேஷ் சிங் போன்றவர்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருக்கவே கூடாது,” என்றார்.

மேலும் தடையை மீறி, பேட்டியை ஒளிபரப்பிய பி.பி.சி.யை பா.ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியா தத், ‘அந்த ஆவணப்படம், கற்பழிப்பை ஆதரிக்கவில்லை. கற்பழித்தவரின் மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறது. அதற்கு தடை விதித்தது அதிர்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!