இந்தியனுக்கு பதவி கிடைத்தால் கம்ப்யூட்டர் விலை குறையுமா?!இழு தள்ளு (4) by கதிர்

இந்தியனுக்கு பதவி கிடைத்தால்  கம்ப்யூட்டர் விலை குறையுமா?!இழு தள்ளு (4) by கதிர்

சத்யா நாதெள்ள என்ற இந்தியர், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு இருப்பதை இந்தியாவே கொண்டாடுகிறது.சத்யா ஆந்திராவில் பிறந்தவர். ஹைதராபாத் பள்ளியில் படித்தார். அப்புறம் டெல்லி. அதோடு இந்திய தொடர்பு முடிகிறது. மேல்படிப்பு அமெரிக்காவில். அந்த நாட்டின் குடிமகனாகி, மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் 22 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இதில் இந்தியர்கள் கொண்டாட என்ன இருக்கிறது?இட்லி விற்று பிழைக்கும் அபலைத்தாயின் மகனாக இருட்டுக் குடிசையில் வளர்ந்து, உதவித்தொகை மூலம் ஐஐடி வரை படித்து தொழிலதிபரான ஏழ்மைப் பின்னணி ஏதும் சத்யாவுக்கு கிடையாது. பிரதமரின் செயலாளராக பணியாற்றிய செல்வாக்கு மிகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன். முதல்வரின் ஆலோசகரான மற்றொரு பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மாப்பிள்ளை. பெரிய பொறுப்புக்கு முன்னேறியதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
Satya-Nadella-microsoft lopgo feb 12
சத்யாவை போல சர்வதேச புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த இந்தியர்கள் பல பேர் இருக்கிறார்கள். பெப்சி குளிர்பான கம்பெனியின் இந்திரா நூயி அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. தமிழர் என்பதாலும் பெண் என்பதாலும் இந்திரா மீது தனி கவனம். என்றாலும், ஒரு கோலா கம்பெனியின் சி.இ.ஓ.வாக மட்டும் அவரை அறிந்தவர்களே அதிகம். பெப்சியுடன் நொறுக்குத் தீனிகள், குடிநீர், ஓட்ஸ் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற 21 உணவுப் பொருட்களையும் பானங்களையும் பெப்சிகோ தயாரிக்கிறது. ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி விற்பனை ஆகிறது. அது வேறு கதை.

மாஸ்டர்கார்ட், சிஸ்கோ, டுட்ஷெ பேங்க், டயாஜியோ போன்ற நிறுவனங்களை இந்தியர்கள் நிர்வகிக்கிறார்கள். சிட்டி பேங்க் தலைவராக ஓர் இந்தியர் பொறுப்பு ஏற்றது குறித்தும் நிறைய பேசப்பட்டது. ’நிர்வாக திறனிலும், ஆளுமையிலும், தலைமைப் பண்புகளிலும் இந்தியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளதன் அடையாளம் இது’ என்று பலர் புளகாங்கிதம் அடைகிறார்கள்.

நம்மை நாமே முதுகில் தட்டிக் கொள்ளும் இந்தப் போக்கு எந்த அளவுக்கு நியாயமானது என்பதை பார்க்க வேண்டும். சட்டென்று கண்களுக்கு புலப்படாத பல முரண்பாடுகள் இந்த சாதனைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கின்றன. அவற்றை இழுத்து வந்து வெளிச்சத்தில் நிறுத்தும்போது, மனதில் பிரவாகம் எடுத்த பெருமிதம் வறண்டு, இனம் புரியாத ஏக்கம் உண்டாகிறது. விடை தெரியாத கேள்விகள் பிறக்கின்றன.

சாதனையாளர்கள் எல்லோரும் பிரபலமான தனியார் கல்விக்கூடங்களில் படித்தவர்கள். மேற்படிப்பையும் ஆராய்ச்சியையும் தொடர அமெரிக்காவில் குடியேறியவர்கள். அடிக்கடி இடம் மாறாமல் அதே நிறுவனத்தில் படிப்படியாக மேலேறியவர்கள். ’தாயகம் திரும்புங்கள், உங்கள் பணியை தடங்கல் இல்லாமல் தொடர ஏதுவான சூழலை ஏற்படுத்தி தருகிறோம்’ என்று அரசு விடுத்த அழைப்புகளை கண்டுகொள்ளாதவர்கள்.

விஞ்ஞானிகளையும் உயர் தொழில்நுட்ப பொறியாளர்களையும் முதலீட்டாளர்களையும் மட்டும் இந்தியா அவ்வாறு அழைக்கவில்லை. சிறந்த நிர்வாகிகளும் தொலைநோக்கு கொண்ட மேலாண்மையாளர்களும் திரும்பி வந்து பொறுப்புகளை ஏற்றால் அரசு இலாகாக்களும் பொதுத்துறை நிறுவனங்களும் புத்துயிர் பெறும் என அரசு நம்பியது. தொலைத்தொடர்பு துறையில் குறுகிய காலத்தில் பெரும் புரட்சிக்கு வழிகாட்டிய சாம் பிட்ரோடா போன்றவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி வந்தால் இந்த நாட்டின் வளர்ச்சி விகிதம் நேர்கோடாக உயரும் என்று எதிர்பார்த்தது. அதற்காக பணி நியமனங்கள், ஊதியம், சலுகைகள், பொறுப்புகள், அதிகார வரம்புகள் போன்ற அம்சங்களில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப் பட்டன. விதிகளை தளர்த்தும் அரசின் இந்த தாராள போக்கு, ஆதார் திட்டத்துக்காக நந்தன் நீல்கேனியை நியமிப்பது வரையில் நீடித்து வருவதை காண்கிறோம்.

இத்தனை செய்தும் ஏன் எதிர்பார்த்த பலன் இல்லை?

சரி, அரசுத் துறைகளை ஒதுக்கி வைப்போம். எத்தனை சீர்திருத்தம் செய்தாலும் அவற்றில் ஓங்கியிருப்பது அரசியல் எஜமானர்களின் கையே. அதனால் முறைகேடும் தவறுகளும் தொடரத்தான் செய்யும். நல்ல நிர்வாகிகள் அந்த சூழலில் மூச்சு திணறுவார்கள். தனியார் துறை அப்படி இல்லையே. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாம். என்ன சலுகை வேண்டுமானாலும் வழங்கலாம். மொத்த அதிகாரத்தையும் தாரை வார்த்து கொடுக்க முடியும். ஆனாலும் தனியார் துறை பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லையே, ஏன்?

உலகின் டாப் 100 கம்பெனிகளில் ஒன்றுகூட இந்தியாவை சேர்ந்தது இல்லை, என்கிறது ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் சர்வே.

முதல் நூறு கம்பெனிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்காவில் அமைந்திருப்பது ஆச்சரியம் அல்ல. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளின் முக்கியத்துவம் அந்த பட்டியலில் கீழே இறங்கியிருப்பதிலும் வியப்பு இல்லை. கொலம்பியா, மெக்சிகோ மாதிரியான நாடுகளின் நிறுவனங்கள் அதில் இடம் பிடித்திருப்பது பெரிய விஷயம்.

முதல் பத்து இடங்களில் ஒன்றை சீனா ஆக்கிரமித்துள்ளது ஆச்சரியமில்லை. அடுத்த பத்தில் ஒன்று தென் கொரியாவுக்கு கிடைத்திருப்பது அட்டகாசம். அடுத்து பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், தாய்வான், இத்தாலி, நார்வே ஆகிய சிறு நாடுகள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது அடிக்கோடு தீட்ட வேண்டிய விஷயம்.

அந்நிய நிறுவனங்களை வழிநடத்தி செல்ல இந்திய மூளை தேவைப்படுகிறது என்றால், இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மூளை அவசியம் என்று அர்த்தமா?
இந்திய கார் கம்பெனிகள், விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு நிர்வாகிகளை இறக்குமதி செய்வதை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.

‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்… ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..?’ என்பது விவசாயி மட்டுமே கேட்கக்கூடிய கேள்வி அல்ல.

உலக மயம் என்பது ஓர் உண்மை. இனி மாற்ற முடியாது. உலக நீரோட்டத்தில் இந்தியா அடித்துச் செல்லப்பட்டால் ஆபத்து. நமது சொத்துகளை பலப்படுத்தினால் மட்டுமே பத்திரப்படுத்த முடியும். அறிவு, திறமை, உழைப்பு, விடாமுயற்சி, நியாயமான போட்டி, நேர்மை ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான வழிகள். அதில் ஒன்றுகூட அடைபட அனுமதிக்கக் கூடாது. இரவல் புகழுக்கு ஆசைப்பட்டால் நம்மால் இதை உணர இயலாது.

எங்கோ ஓர் இந்தியன் பெரிய பதவிக்கு வந்தால் இங்கே சிலர் ஆனந்த தாண்டவம் ஆடுவது அந்த ரகம். மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் சத்யா கைக்கு வருவதால் இந்தியர்களுக்கு எம்.எஸ் வேர்ட் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கப் போவதில்லை. விண்டோஸ் 8 இலவசமாக டவுன்லோட் ஆகப் போவதில்லை. உண்மையில் பார்த்தால், பில்கேட்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் முற்றியுள்ள காலகட்டத்தில் சத்யா தலைக்கு கிரீடம் மாற்றப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாக மைக்ரோசாஃப்ட் ஆட்டம் போட்டது. தனக்கு போட்டியாக எவரும் தலையெடுக்காமல் தடுக்க எதையும் செய்ய துணிந்தது அந்த கம்பெனி. அமெரிக்க அரசு திகைத்தது. ஆனால், திறமைக்கு மட்டுமே மதிப்பு தரப்படும் அந்த சமுதாயத்தில், போட்டியை நிரந்தரமாக முடக்கிவைக்க பில்கேட்சால் முடியவில்லை.

மென்பொருளில் பெரும் லாபம் ஈட்டிய மைக்ரோசாஃப்டின் தேடியந்திரம் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை கூகுள் வீழ்த்தியது. மொபைல் கம்ப்யூட்டிங் நுட்பத்தை ஆப்பிள் வளர்த்தெடுத்தது. சமூகவலையை ஃபேஸ்புக் பின்னியது. ஈடுகொடுக்க முடியாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறியது. அப்போது சி.இ.ஓ.வாக வந்த ஸ்டீவ் பாமர் ஒரு தப்பு செய்தார். மார்க் பென் என்பவரை ஆலோசகராக நியமித்தார்.

‘நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இயலாதவன், எதிரிகளை அசிங்கப்படுத்துவதன் மூலம் அதை சாதிக்கலாம்’ என்ற நம்பிக்கை கொண்டவர் பென். அவர் மென்பொருள் அறிவு இல்லாதவர். வாஷிங்டனில் விளம்பர ஏஜண்டாக பணியாற்றியவர். அரசியலில் பலரை மட்டம் தட்டிய அனுபவத்தில், கூகுள் ஃபேஸ்புக் ஆப்பிள் நிறுவனங்களை குறிவைத்து பிரசாரத்தில் இறங்கினார். விளைவு நேர்மாறானது. மைக்ரோசாஃப்ட் மீது மக்கள் நம்பிக்கை சரிந்தது. இந்த கட்டத்தில் சத்யா களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.

கவிதையில் நாட்டம் கொண்ட மென்மையான நபர் சத்யா. வன்மனம் படைத்த மார்க் பென்னை வீட்டுக்கு அனுப்புவது முதல் சீர்திருத்தமாக இருந்தால் அவரது வெற்றி நிச்சயம் என்று விமர்சகர்கள் நம்புகின்றனர்.

(கதிர் In குமுதம் ரிப்போர்ட்டர் 16.02.2014

error: Content is protected !!