ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசுப் பணியாளர் மாநாட்டு ஏமாற்றம்! காரணம் என்ன?

ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசுப் பணியாளர் மாநாட்டு ஏமாற்றம்! காரணம் என்ன?

(முன்குறிப்பு : ஏது மாநாடு ஏமாற்றமா? மாநாடு நம்ம வரலாற்றுல எவ்ளோ பெரிய மைல் கல்லு. . .என்று பெருமிதம் கொள்வோருக்கு இப்பதிவு அல்ல.)

மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றது முதல் நாளது தேதிவரை ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்குச் செய்ததை மு.க.ஸ்டாலின் அவர்களே குறிப்பிட்டுப் பேசினார். அதில் எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியின்படி ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான அஇஅதிமுக அரசின் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து போராட்டக் காலத்தை முறைப்படுத்தி அதற்குண்டான ஊதியத்தோடே, பணியிட மாற்றம் இரத்து & தவிர்க்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் அளித்தது உள்ளிட்டவற்றை நிறைவேற்றினார். அதற்கு மீண்டும் ஒருமுறை உளமார்ந்த நன்றிகள்.

இதைத் தவிர்த்து ஜாக்டோ-ஜியோ-வின் கோரிக்கைகளில் எதையாகிலுமோ / அவரே அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையாகிலும் ஒன்றையோ ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்குச் செய்து கொடுத்துள்ளாரா என்றால் இல்லை. மாறாக அவரே அளித்த வாக்குறுதிக்கு எதிராக, அண்ணா மீதான நம்பிக்கையைத் தகர்த்து, ஒன்றிய அரசைப் பின்பற்றி Incentive-ஐ முழுமையாக இரத்து செய்துவிட்டு One time settlement-ஐத் தான் சட்டசபையில் அறிவித்தார்.

மேலும், EL Surrender நிறுத்தி வைப்பைத் தொடர்ந்தது, 30 மாதங்களுக்கான DA-வைப் பறித்தது & காலம் தாழ்ந்து அறிவித்தது என, கடந்த 17 மாதங்களில் பணப்பலன் உரிமைகள் சார்ந்து தான் அளித்த வாக்குறுதி எதையும் 1% கூட நிறைவேற்றாது அவர்மீதான நமது நம்பிக்கையை வளரவிடாதுதான் பார்த்துக் கொண்டுள்ளார்.

அதற்காக, எதையும் செய்யவே கூடாது என்ற முடிவில் அவர் உள்ளார் என்று நான் முடிவு செய்துவிடவில்லை. அதே நேரம் தற்போது எதையும் செய்து கொடுப்பதற்காகன ஆக்கப்பூர்வ நகர்வுகள் எதுவும் அவரிடமிருந்து வெளிப்படவேயில்லை என்கிறேன். மேலும், NPS-ஐ நடைமுறைப்படுத்திய காங். ஆளும். . . . PFRDA-வுடன் ஒப்பந்தம் போட்டு NPS நடைமுறையில் உள்ள. . . . நம்மைவிட பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் பின்தங்கிய. . . . மாநிலங்களில்கூட பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில். . . . CPS-ஐ இரத்து செய்வதற்குச் சாதகமான பேச்சுகளை எந்தவொரு அமைச்சரும் பேசியதுண்டா? மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தானே பழைய ஓய்வூதியத் திட்ட நடைமுறைப் படுத்தலுக்கு எதிரான கருத்துகளைச் சட்டசபையில் பதிவு செய்தார். அதை மாண்புமிகு முதல்வர் மறுத்தாரா? அல்லது அமைச்சர்கள் சிலரின் மாற்றுக் கருத்தின் போதாவது ஏதேனும் மறுப்பு வெளியிடப்பட்டதா? இறுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதாவது CPS ஒழிப்பு குறித்து குறிப்பிட்டுப் பேசினாரா? தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றுதானே கூறிச் சென்றார். அவ்வாக்குறுதிகள் எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு Incentive பறிப்பே சான்று.

இத்தகைய சூழலில் பறிக்கப்பட்ட நமது உரிமைகளை ‘கோரிக்கை’ என்ற தொழிற்சங்கச் சொல்லாடலில் விளம்பர அறிவிப்புகள் அளவில்கூட முன்வைக்காத மாநாட்டில் நமது உரிமைகளை மீட்டுக் கொடுத்துவிடுவார் என்று தீடீரென அதிதீவிர நம்பிக்கையை உங்களுக்குள் நீங்களே ஏற்படுத்திக் கொண்டு – நீங்கள் ஏமாந்ததற்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் எப்படி காரணமாவார்?

எனவே முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றிவிட்டார் என்று அவர்மீதோ / அவரது கட்சி-ஆட்சி மீதோ இம்மாநாட்டு முடிவை முன்வைத்து மட்டும் அதிருப்திகொள்வது எவ்வகையிலும் சரியான பார்வை அல்ல. சிலர் முதல்வர் பேரில் தாமே ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கையால் விளைந்த இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனதின்றி, “அம்மையாருக்குக் கொடுத்த முடிவை கொடுப்போம்! அடுத்த தேர்தலில் காட்டுவோம்!!” என்று தங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த ஆசிரியர் & அரசு ஊழியர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினை ஊரார் சுயநலமிக்கதென சுருக்கிவிடக்கூடிய வகையிலான சொற்களைப் பொதுவெளியில் உதிர்த்து வருகின்றனர். இவை உச்சபட்ச ஏமாற்றத்தினால் எழுந்துள்ள விரக்தி வெளிப்பாட்டின் சொல்லாடல்களே!

சற்றே சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அஇஅதிமுக இதே போன்ற தேர்தல் வாக்குறுதிகளைத் தந்திருந்தாலோ / கடைசி நேரத்தில் ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேசியிருந்தாலோ அஇஅதிமுக-பாச்சக கூட்டணிக்கு வாக்களித்திருப்பீர்களா? உறுதியாக இல்லை! 2021 ஏப்ரலுக்கு முந்தைய ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அரசியலின் சூழல் என்பது அஇஅதிமுக-பாச்சக கூட்டணி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறினால் தமிழ்நாட்டைக் காப்பாற்றவே முடியாது என்றுதான் இருந்தது. அத்தகைய சூழலில் அதற்கு அடுத்த வலிமையான வாக்கு வங்கியுள்ள மாற்று என்றால் அது திமுக+ மட்டுமே.

எனவே நாட்டின் நலனை முன்வைத்தேதான் 10 இலட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர்கள் சொன்னால் கேட்கக்கூடிய சுமார் 40 இலட்சம் நெருங்கிய உறவினர்களும் திமுக+க்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். இதில் நமது கோரிக்கைகள் மீதான திமுகவின் தேர்தல் உறுதிமொழியும் ஒரு காரணம் என்றாலும் அதுமட்டுமே முழுமையான காரணம் அல்லவே! சில இடங்களில் திமுகவின் வெற்றியை வெளிப்படையாகவே நிர்ணயித்தது நமது வாக்குக்கள்தான் என்பதை எதிர்க் கட்சித் தலைவர் கூட குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இவற்றையெல்லாம் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் நன்கு உணர்ந்துள்ளார் என்பதற்கு மாநாட்டில் அவரின் பேச்சே சாட்சி.

2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் இந்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் சார்பான வாக்குகள் யாருக்குச் செல்லப் போகின்றது என்பதும் அப்போதைய அரசியல் சூழல் மட்டுமே முடிவு செய்யக்கூடும். தேர்தல் என்பது எப்போதும் நமது கோரிக்கை வெல்வதற்கான களம் அல்ல! வலிமையான நமது போராட்டங்களை முன்வைப்பதற்கான & அதை அரசியல் கட்சிகள் செவி மடுப்பதற்கான ஆகச்சிறந்த காலம்!! அவ்வளவே.

மேலும், யார் மீதான நம்பிக்கையோ, யாரும் நம்மீது கொண்ட கருணையோ நமது இன்றைய உரிமைகளை பெற்றுத்தரவில்லை. அன்றைய ஆசிரியர் & அரசு ஊழியர்களின் பெருமொத்த போராட்டக் குணங்களே இன்றைய நமது உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது. அதை நீங்கள் உணர்ந்து கொள்ள 1980-களுக்கோ 2000-களுக்கோகூடச் செல்லவேண்டாம். 2017-ஐ. . . . ஆம் நாம் உறுதியாக நின்ற. . . சில தலைமைகள் தவிர்த்த போதும். . . அரசு ஒடுக்கிய போதும். . . வழக்காடு மன்றம் தடையிட்ட போதும். . . நாம் உறுதியாக நின்ற. . . அந்த 2017-ஐ நினைத்துப் பாருங்கள்.

எந்த வழக்காடு மன்றம் போராடக் கூடாதென தடைபோட்டதோ அதே வழக்காடு மன்றம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை. . . அதுவரை யாரும் நெருங்கக்கூடாத உச்சபட்ச அதிகார மட்டத்தில் இருந்தவரை. . . வழக்காடு மன்றத்திற்கே வரவழைத்து ஊதியக்குழுவை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை விதித்தது. அன்றைய ஜாக்டோ-ஜியோ வெளியே யாரையும் நம்பி களத்தில் நிற்கவில்லை. அது நம்பியது நம்மையே. அன்றைய நமது நம்பிக்கையாக இருந்தது நாம் போராடினால் மட்டுமே நமக்கான உரிமையைப் பெற இயலும் என்ற எண்ணம் மட்டுமே!

அத்தகைய எண்ணத்தை மீண்டும் உங்களுள் விதைத்துத் துளிர்விட மெனக்கிடுங்கள். ஏமாற்றமில்லாது நமக்கான மாற்றத்தை நாமே நிர்ணயிக்கலாம்.

சரி. . . அப்ப மாநாட்டு ஏமாற்றத்திற்கு CM காரணமே இல்லேனா. . . . ஜாக்டோ-ஜியோ தான் காரணமா?????
அடுத்த பகுதியில் அதுகுறித்தும் நிதானிப்போம்!

இப்ப இதப்பத்தி பேசலேனா. . . வேற எப்ப பேசப்போறோம்?

(தொடர்ந்து பேசுவோம். . . .!)

செல்வ.ரஞ்சித் குமார்

error: Content is protected !!