அமெரிக்க மக்களில் 29 சதவீதம் பேர் மதமற்றவர்கள்!

அமெரிக்க மக்களில் 29 சதவீதம் பேர்  மதமற்றவர்கள்!

லகின் பெரியண்ணா என்று வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்கா வாழ் மக்களில் 29 சதவீதம் பேர் தங்களை மதமற்றவர்கள் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த “மதத்தில் இருந்து விடுதலை அமைப்பின்” தலைவர் டேனியர் பார்க்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத் தலைநகர் மேடிசன் நகரைத் தலைமையிடமாக கொண்ட “மதத்தில் இருந்து விடுதலை அமைப்பின் (Freedom From Religion Federation) நிறுவனர்களில் ஒருவரான டேனியல் பார்க்கர், அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்குநர் அமிதாப் பால் ஆகியோர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பகுத்தறிவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், சுதந்திர சிந்தனையாளர்களை சந்தித்து பேச இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஒத்த சிந்தனையாளர்களை சந்தித்து இயக்க செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், இணைந்து செயல்படவும் முடிவெடுத்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று தந்தை பெரியாரின் திராவிடர் கழக செயல்பாடுகளை அறிந்து கொள்ள, மகாராஷ்டிர அந்தஸ்திரத நிர்மூலன் சமிதியின் தலைவர் அவினாஷ் பாட்டீலுடன் சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலுக்கு வந்ததுடன், வரவேற்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியாரின் செயல்பாடுகள் குறித்து அறிமுக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில், எப்எப்ஆர்எப் அமைப்பினர் இணை நிறுவனர் டேனியல் பார்க்கர் பேசியதாவது:–

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 1978 ஆம் ஆண்டு மதத்திலிருந்து விடுதலை அமைப்பை நாங்கள் 3 பேர் இணைந்து தொடங்கினோம். மதம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதை எடுத்துச்சொல்லி, பெண்கள் மதத்தில் இருந்து விடுபடாமல் முன்னேற முடியாது, சுயமரியாதையுடன் வாழ முடியாது என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம். மேலும் இயக்கத்தின் முதன்மை நோக்கமாக அரசியலும் மதமும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந்தனை, மனிதநேயம் ஆகியவற்றை முன்வைத்து தொடர்ந்து இயங்கினோம். இப்போது எங்கள் இயக்கத்தில் 39 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதன் விளைவாக 1991 ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மதமற்றவர்கள் என்று 7 சதவீதம் பேர் தங்களை பதிவு செய்துகொண்ட நிலையில், 2001 ஆம் ஆண்டில் 14 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 29 சதவீதம் பேர் (சுமார் 10 கோடி பேர்) தங்களை மதமற்றவர்கள் என்று பதிவு செய்துகொண்டுள்ளனர் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது அமெரிக்க மக்கள் தொகையில் ஏறத்தாழ 3 இல் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. நான் முன்னர் கிருஸ்தவ மத பிரச்சாரகனாக இருந்துள்ளேன். மதம் மனிதனின் சுயமரியாதைக்கு எதிரானது என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று டேனியல் பார்க்கர் கூறினார்.

Related Posts

error: Content is protected !!